'ரிவால்டோ': காட்டுப் பயணத்தில் வனத்துறைக்கு தண்ணி காட்டிய காட்டு யானை

காட்டு யானை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி அருகே, மாவநல்லா பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமலும், கும்கி யானைகள் உதவிகளின்றியும், உணவுகளை கொடுத்தே முகாமிற்கு அழைத்துச் செல்லும் புதிய முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த முயற்சிக்கு 'ரிவால்டோ' என அழைக்கப்படும் காட்டு யானையும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குவதாக யானையோடு பயணித்த வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வனச்சரக அலுவலர் காந்தன், முகாமில் உள்ள யானைகளைவிட ரிவால்டோ மனிதர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகுவதாக கூறுகிறார்.

"உணவுகளை கொடுத்தே முகாமிற்கு காட்டு யானையை அழைத்துச் செல்லும் முயற்சி இதுவரை எங்கும் நடந்ததில்லை. சுமார் 10 கி.மீ தூரத்தில், எந்த தொந்தரவுகளுமின்றி 6 கி.மீ தூரத்தை கடந்து யானையை அழைத்து வந்துவிட்டோம். இதுவரையான பயணத்தில் யானையின் உடல்நலம் நன்றாகவே உள்ளது. தனக்கு மனிதர்கள் உதவி செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டதைப் போல் நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ரிவால்டோ சிறப்பாக ஒத்துழைத்து வருகிறது" என்றார் இவர்.

"பொதுவாக, முகாமில் உள்ள யானைகளில் கூட சில யானைகள் மூர்க்கமாக நடந்து கொள்ளும். ஆனால், இது காட்டு யானை என்றபோதும் முகாம் யானைகளைவிட பாதுகாப்பான யானையாக உள்ளது. மனிதர்களை அருகில் நெருங்கவிடுகிறது. தர்பூசணி, வாழைப்பழம், அண்ணாச்சிபழம் போன்ற பழ வகைகளோடு இலைகளையும் உணவாக கொடுத்து தெப்பக்காடு முகாம் நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறோம்."

காட்டு யானை

"சில ஆண்டுகளுக்கு முன்பு ரிவால்டோவிற்கு காயம் ஏற்பட்டபோது அருகில் இருந்து கவனித்துக் கொண்ட வனக்காவலர்கள் இருவர் தான் இப்போதும் உணவளித்து வருகின்றனர். யானையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவ குழுவினரும் இரவுபகலாக பயணித்து வருகின்றனர். காட்டு யானையோடு இப்படியான பயணம், ஓர் புதிய அனுபவமாக உள்ளது. நாங்கள் திட்டமிட்டபடி பயணம் அமைந்தால், வெள்ளிக்கிழமை மாலைக்குள் முகாமை அடைந்துவிடுவோம்" என மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் சிங்காரா சரகத்தின் வனச்சரக அலுவலர் காந்தன்.

இந்த யானை பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிக்குள் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் காட்டுக்குள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால், சில நாட்களாக காட்டுக்குள் திரும்பாமல் சாலையிலேயே நின்றுள்ளது. இது பற்றி தகவலறிந்த வனத்துறையினர், யானையை கண்காணித்ததில், தும்பிக்கையின் நுனிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உட்கொள்வதற்கு சிரமப்படுவது தெரியவந்தது. பிறகு உணவுகளை கொடுத்து நகர்த்தியே தெப்பக்காடு முகாமிற்கு அதை அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2-ஆம் தேதி காலை முதல் யானை ரிவால்டோவோடு, 25க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் இரவு பகலாக பயணித்தனர்.

திறந்தவெளியில் இருந்து அடர்த்தியான வனப்பகுதிக்குள் இன்று முதல் இக்குழு பயணிக்க உள்ளதால், யானையின் பாதுகாப்பிற்காக கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் முதுமலை புலிகள் காப்பகம் - மசினகுடி கோட்டத்தின் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த்.

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரிவால்டோ யானைக்கு தும்பிக்கையின் நுனிப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுவாசத்திற்கான துவாரங்கள் சிறியதாக குருகியுள்ளன. தும்பிக்கையின் நுனிப்பகுதி சிறியதாக இருப்பதால் புற்களை சாப்பிடுவதும், உணவை வாய்க்கு எடுத்து செல்வதிலும் யானை சிரமப்படுகிறது. இந்த நிலையில் மயக்க ஊசி செலுத்தினால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது."

"மேலும், பல ஆண்டுகளாக தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் வந்து செல்வதாலும், மனிதர்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு பழகியதாலும் யானைக்கு நெருக்கமாக சென்று கவனிக்கவும் உணவளிக்கவும் முடிகிறது. தும்பிக்கையை தொட்டு வனக்காவலர்கள் உணவளிக்கும் அளவிற்கு பழகிவிட்டது. எனவே, நடக்க வைத்தே முகாமிற்கு கொண்டு சென்று வருகிறோம். வனப்பகுதிகளுக்குள் பயணம் மேற்கொள்ள இருப்பதால், மற்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தலை தவிர்க்க கும்கி யானைகளை முன்னே நடக்க வைத்து ரிவால்டோவை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் ஸ்ரீகாந்த்.

"பொதுமக்களால் பிரச்னையா?"

காட்டு யானை

சமீபத்தில் மசினகுடி பகுதியில் நெருப்பு வைத்து தாக்கியதால் பலியான ஆண் யானையும், தற்போது முகாமிற்கு கொண்டு செல்லப்படும் இந்த ஆண் யானையும் ஒன்றாகவே பயணித்தவை என்கின்றனர் அப்பகுதியினர். இந்த யானைகளுக்கு உணவளித்து வந்த கால்பந்து ரசிகர் மார்க்டேவிட் என்பர் தான் இந்த யானைக்கு 'ரிவால்டோ' என பெயர் சூட்டியதாகவும் தெரியவருகிறது.

யானைகளுக்கு பொதுமக்கள் உணவளித்து பழக்குவது தான் இந்த பிரச்னைகளின் அடிப்படை காரணம் என்கிறார் 'ஓசை' தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ்.

"இதற்கு முன்னர் நெருப்பு வைக்கப்பட்டு உயிரிழந்த யானையும், இந்த யானையும் குடியிருப்புகளுக்குள் புகுந்து காட்டுக்குள் திரும்பாமல் இருந்ததற்கு முக்கிய காரணம், மனிதர்கள் இவற்றுக்கு உணவளித்து பழக்கியது தான். மசினகுடி பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் காட்டு யானைகள் உட்பட வனவிலங்குகளுக்கு உணவளித்து பழக்கிவிடுகின்றனர். இதையே விளம்பரப்படுத்தி அதிக அளவில் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கின்றனர். இதனால் தான் அவை மீண்டும் காடுகளுக்குள் செல்வதில்லை. இப்படி பழக்கப்படுத்தப்பட்ட காட்டு யானைகள் தான் ஒரு கட்டத்தில் அதே மனிதர்களால் விரட்டப்படுகின்றன. எனவே, தங்கும் விடுதிகளில் உள்ளவர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிப்பதை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் காளிதாஸ்.

மயக்க ஊசி செலுத்தாமல், உணவுகளை வைத்து காட்டு யானைகளை நகர்த்தி செல்வது சிறப்பான முயற்சி என்றபோதும், இதை முன்னரே செய்திருந்தால் பல யானைகள் காப்பற்றப்பட்டிருக்கும் என்கின்றனர் சில வனவிலங்கு நல ஆர்வலர்கள். ஆனால், எல்லா யானையும் 'ரிவால்டோ'வைப் போல் ஒத்துழைப்பது சாத்தியமில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர் வனத்துறையினர்.

முன்னதாக, தெப்பக்காடு முகாம் நோக்கி அழைத்துவரப்பட்ட ரிவால்டோ யானை இன்று மாலை 4.30 மணி அளவில் வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி வேறு பாதையில் சென்று. இதனால் யானை இருக்குமிடத்தை கண்டறிய வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது யானை மாவநல்லா செல்லும் வழியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கடைசியாக வந்த தகவலின்படி வனத்துறையினர் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: