தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக - மிரட்டுகிறதா, மிரள்கிறதா?

தேமுதிக

பட மூலாதாரம், Edappadi Palanisamy Twitter

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான பாமக, தேமுதிகவுடனான கூட்டணி தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. என்ன காரணம்?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம், இரண்டு அணிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் நேரடியாகத் தொடங்கவில்லை. இது தவிர, தனிச்சின்னம், கூட்டணிக் குழப்பங்கள் என இதுவரையில் இல்லாத அளவுக்குத் தமிழக தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இரு கட்சிகளுடனான கூட்டணி குறித்து இதுவரை அதிமுகவிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகள் ஆயத்தமாகத் தொடங்கிய காலகட்டத்தில் `வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு' என்ற முழக்கத்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கையில் எடுத்தார். இதனையொட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக முதல்வரை சந்தித்துப் பேசினார் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, `20 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு கூறுவது ஜாதி ரீதியிலான கோரிக்கை இல்லை. எங்கள் கோரிக்கையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்' என்றார். இதனைத் தொடர்ந்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆராய ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பா.ம.க முன்வைத்த இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy Twitter

படக்குறிப்பு, கோப்புப்படம்

இதன்பிறகு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆறு கட்ட போராட்டங்களை பாமக முன்னெடுத்தபோதும், அதிமுக தரப்பு அசைந்து கொடுக்கவில்லை. `தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீட்டை அறிவித்தால் பிற சமூக மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும்' எனவும் அ.தி.மு.க தரப்பில் பேசப்பட்டது. தொடர்ந்து, அதிமுக சார்பாக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர். இதிலும் கூட்டணி தொடர்பாக எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மருத்துவர் ராமதாஸ், `அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும்தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என உறுதிபடத் தெரிவித்தார்.

`` அ.தி.மு.க தரப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவர் ராமதாஸுடன் பேசி வருகின்றனர். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 30 இடங்களை ஒதுக்கினர். அதில், 3 இடங்களில் வெற்றி பெற்றோம். தற்போது அ.தி.மு.க கூட்டணியில் 30 இடங்களுக்குக் குறைவாகப் பெற்றுக் கொள்ளும் முடிவில் பா.ம.க இல்லை. இருப்பினும், இடஒதுக்கீடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும்" என்கிறார் பா.ம.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

தொடர்ந்து பேசியவர், ``இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லையென்றால், அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதற்கும் வாய்ப்பில்லை. எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் வடமாவட்டங்களில் பெரிய அளவில் பலம் பெறும். இதனை அ.தி.மு.க-வும் உணர்ந்து வைத்துள்ளது. விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெல்வதற்கும் வேலூர் மக்களவைத் தேர்தலில் அணைக்கட்டு, பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை வகிப்பதற்கும் பாட்டாளி மக்கள் கட்சியே காரணமாக இருந்தது. தற்போது வி.கே.சசிகலாவும் குழப்பத்தை ஏற்படுத்த உள்ள சூழலில் பா.ம.க இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை முதல்வரும் உணர்ந்து வைத்துள்ளார்" என்றார் இயல்பாக.

பா.ம.க மாநில பிரசாரக் குழு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வன்னிய சமூக மக்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கினால் மட்டுமே இந்தக் கூட்டணிக்கு நல்லது. அப்போதுதான் நாங்கள் நடத்திய ஆறுகட்டப் போராட்டங்களுக்கும் முழு வெற்றி கிடைக்கும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் தனித்துப் போட்டியிடுவதிலும் எங்களுக்கு எந்தவிதத் தயக்கங்களும் இல்லை" என்றவர், தொடர்ந்து பேசுகையில், `` கடந்த சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தோம். இதன் பின்னர் சில காரணங்களால் கூட்டணிக்குள் இணைந்தோம். இனி அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம். எங்கள் சமூக மக்களின் கோரிக்கையான இடஒதுக்கீட்டைப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். காரணம், இதைவிட எங்களுக்குப் பதவிகள் முக்கியமானவை அல்ல" என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palaniswamy Twitter

படக்குறிப்பு, கோப்புப்படம்

`சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டாலும் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்குமா?' என்ற விவாதமும் பா.ம.க நிர்வாகிகள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று, (பிப். 3) அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது பா.ம.க தலைமை. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படுவதைப் பொறுத்தே கூட்டணி நிலவரம் தெரியவரும்.

அதேநேரம், `பாமக-வுக்கு ஒதுக்கப்படும் அளவுக்கான இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்பதை அ.தி.மு.க தலைமையிடம் தே.மு.தி.க வலியுறுத்தி வருகிறது. அதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்த எந்தப் பதிலும் வரவில்லை. இடப்பங்கீடு தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாததால் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

`சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் எந்த பலனில்லை. உடனடியாக, எங்களை அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது' என செய்தியாளர்களிடம் விவரித்த பிரேமலதா, `234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது. எனினும் கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும்' என்றார்.

`அதிமுக கூட்டணிதான்' எனக் கூறிவிட்டு, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக பிரேமலதா கூறியிருப்பது அதிமுக தரப்பில் பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. காரணம், 2016-ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியாக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க களமிறங்கியபோதும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை. குறிப்பாக, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 2.19 சதவிகித வாக்குகளையே தே.மு.தி.க பெற்றது. இதனையும் அ.தி.மு.க தலைமை கவனத்தில் வைத்துள்ளது. கூடவே, சசிகலாவை ஆதரித்துப் பிரேமலதா பேசியதையும் முதல்வர் தரப்பில் ரசிக்கவில்லை என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

``தேமுதிக-வுக்கு ஒற்றை இலக்க அளவிலேயே இடங்களை ஒதுக்கும் முடிவில் அதிமுக உள்ளது. அதிலும் ஒன்பது இடங்களுக்கு மேல் ஒதுக்குவதற்கு அதிமுக தலைமை தயாராக இல்லை. இதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர். `` 2011 சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு 41 இடங்களை ஜெயலலிதா ஒதுக்கித் தந்தார். அந்தளவுக்கு இல்லையென்றாலும் 30 இடங்கள் வரையிலாவது ஒதுக்க வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார். அதிமுக-வில் கொடுக்கப்படும் ஒன்பது இடங்களை பெற்றுக் கொண்டுவிட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சமும் ஒரு காரணம். வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 6 சதவிகித வாக்குகளைப் பெற்றால் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியும். இப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கிறோம். அ.தி.மு.க அணியில் ஒன்பது இடங்களை வாங்கிவிட்டால் பெரிய கட்சி எனப் பேசுவதற்கான வாய்ப்புகளும் இருக்காது" எனவும் கவலையுடன் அவர்கள் விவரித்தனர்.

இந்நிலையில், தே.மு.தி.க-வின் மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலைமையில் இருந்து முக்கிய தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில், `நமது கட்சியில் ஆள்களே இல்லை என அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். ஆகவே, நமது கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களது வீட்டில் தேமுதிக கொடியை ஏற்ற வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் 10 இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சிக் கொடியை ஏந்திக் கொண்டும் வீதிகளில் வலம் வர வேண்டும். நமது செல்வாக்கை அந்தப் பகுதியில் உள்ள அதிமுக-வினர் உணர வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, கோப்புப்படம்

அதிமுக அணியில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பிபிசி தமிழுக்காகக் கேட்டபோது, ``இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. எவ்வளவு இடங்களை ஒதுக்குகிறார்கள் எனப் பார்ப்போம். அதன் பிறகே முடிவெடுப்போம்" என்றார் உறுதியாக.

அதிமுக இது குறித்து என்னதான் நினைக்கிறது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். `` நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க-வையும் தே.மு.தி.க-வையும் ஒன்றாகப் பார்த்துத்தான் அவர்களையும் இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கப்பட்டது. எங்களுக்கு பா.ம.க மட்டுமல்ல தே.மு.தி.க, த.மா.கா உள்பட கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. இதில் வித்தியாசம் எதையும் நாங்கள் பார்ப்பதில்லை. தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும், `கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் துவக்குங்கள்' என்று கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் தே.மு.தி.க-வையும் எங்கள் கட்சியின் தலைவர்கள் ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் நிச்சயமாக அரவணைத்துச் செல்வார்கள்" என்றார்.

பாமகவுக்கு இணையான இடங்களைக் கேட்டு தேமுதிக-வும் 20 சதவிகித இடஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை முன்னிறுத்தி பாமக-வும் அதிமுக தலைமைக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: