அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் பினாமி அல்ல - எடப்பாடி பழனிசாமி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: அதிமுக அரசு, மத்திய அரசின் பினாமி அல்ல - எடப்பாடி பழனிசாமி
அதிமுக அரசு மத்திய பாஜக அரசின் பினாமி அல்ல என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டு்ள்ளது.
தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் திட்டங்களை அதிமுக அரசு எதிர்க்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வி. நாராயணனுக்காக திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது, பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முஸ்லிம்கள் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக இருந்ததால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்ய சபையில் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
“தமிழ் நாட்டுக்கு நன்மை வழங்கும் திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அவற்றை வரவேற்போம் . தமிழர்களுக்கு எதிராக இருக்கும் திட்டங்களை எதிர்போம்” என்று பழனிசாமி பேசியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி: முதல் பார்வையற்ற பெண் ஐஃஏ.எஸ் அதிகாரி கேரளாவில் பொறுப்பேற்பு

பட மூலாதாரம், Twitter
நாட்டின் கண் பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கேரளாவில் சார் ஆட்சியராக திங்களன்று பொறுப்பேற்றுள்ளதாக திணமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் உல்லாஸ் நகரை சேர்ந்த இளம்பெண் பிரஞ்ஜால் பாட்டீல் (30). ஆறு வயதில் இவர் தனது கண் பார்வையை இழந்து விட்டார்.
ஆனால் ஆர்வத்துடன் தனது முயற்சியை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஆட்சிப் பணித் தேர்வில் முதன் முறையாக கலந்து கொண்டு, 773வது இடம் பிடித்தார். பின்னரும் முயன்று அடுத்த ஆண்டு 124வது ரேங்க் பெற்றார்.
தற்போது பயிற்சி முடிந்து கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் சார் ஆட்சியராக அவர் திங்களன்று பொறுப்பேற்று கொண்டார் என்று திளமணி நாளேடு வெளியிட்டுள்ளது.
தினமலர்:வெற்றி அணி உறுதியாகும் வரை சூப்பர் ஓவர் முறை - ஐசிசி முடிவு

பட மூலாதாரம், Jordan Mansfield/Getty Images
2019 உலக கோப்பை பைனலில் நியூசிலாந்து. - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முடிவு 'டை' ஆக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளின் ரன்களும் சமமாக இருக்கவே, பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதனையடுத்து, பவுண்டரி அடிப்படையில் வெற்றியாளரை தேர்ந்தெடுத்த முடிவால் சர்ச்சை ஏழுந்தது.
இந்நிலையில், ஐசிசி தொடர்களில் அரையிறுதி, பைனலில் பவுண்டரி அடிப்படையில், போட்டி முடிவு என்ற முறையை ஐசிசி நீக்கியுள்ளதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கு பதிலாக, முடிவை எட்டும் வரை சூப்பர் ஓவர் முறையை பின்பற்றவும் ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி தொடர்களில் லீக் போட்டிகளில் 'டை' ஆனால், இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இம்முறையையும் நீக்கியுள்ள ஐசிசி. லீக் போட்டிகளுக்கும் சூப்பர் ஓவர் முறையை கொண்டு வந்துள்ளது. ஐசிசி கிரிக்கெட் குழு அளித்த பரிந்துரையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளதாக தினமலர் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












