செளரவ் கங்குலி: அணித்தலைவராக சாதித்தவர் பிசிசிஐ தலைவராக சாதிப்பாரா?

பட மூலாதாரம், CLIVE MASON / GETTY IMAGES
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
''சச்சின், டிராவிட், சேவாக் என பல திறமையான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தாலும், நாங்கள் யோசிப்பது ஒருவர் குறித்துதான். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செளரவ் கங்குலி போன்ற ஒருவர் இருக்கும்போது எங்களின் திட்டங்களை மாற்றவேண்டியிருக்கும். எப்படிப்பட்ட போட்டியாக இருந்தாலும் அவரின் அணியை வழிநடத்தும் பாங்கு இறுதிவரை எதிர் அணிக்கு சவாலாகவே இருக்கும். அவரை நீங்கள் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் அவரின் திறமையை, தலைமைப் பண்பை மதித்தே ஆக வேண்டும்'' என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும், 'டஃப் ஆஸி' என்று புகழப்பட்ட ஸ்டீவ் வாக் ஒரு முறை தெரிவித்தார்.
மற்ற வீரர்கள் செளரவ் கங்குலி குறித்து பாராட்டுகளை தெரிவிப்பதற்கும், அதே விஷயத்தை ஸ்டீவ் வாக் கூறுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
ஏனெனில், 2001-ஆம் ஆண்டில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் ஒரு போட்டியில், அணித்தலைவர் என்ற முறையில் டாஸ் போடுவதற்கு ஸ்டீவ் வாக் காத்துக்கொண்டிருக்க, கங்குலி வேண்டுமென்றே தாமதமாக சென்றதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை ஸ்டீவ் வாகும் அப்போது முன்வைத்தார். பிற்காலத்தில் இதற்கு செளரவ் விளக்கமளித்தார். வேறு சில சந்தர்ப்பங்களிலும் செளரவ் கங்குலி மற்றும் ஸ்டீவ் வாக் இடையே நடந்த கருத்து மோதல்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR (GETTY IMAGES)
அதேபோல் பல வெளிநாட்டு வீரர்கள் ஏன் சில இந்திய வீரர்களும்கூட செளரவ் கங்குலியுடன் எண்ணற்ற முறை முரண்பட்டுள்ளனர்.
ஆனாலும், அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம், அவரது சிறந்த தலைமைப் பண்பு மற்றும் அணியின் இளைய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு தயார் செய்யும் பாணியும் தான்.
சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், தோனி, ஜாஹீர் கான், கெளதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா என எண்ணற்ற வீரர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மாற்றியதில் கங்குலிக்கு பெரும்பங்குண்டு.
அதேபோல் அணியில் நிரந்தர இடமில்லாமல் அவ்வப்போது இடம்பெற்று கொண்டிருந்த விவிஎஸ் லக்ஷ்மன், 2001க்கு பிறகு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்ததற்கு, அவர் மீது தொடர்ந்து செளரவ் கங்குலி வைத்த நம்பிக்கை ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இதனை விவிஎஸ் லக்ஷ்மனும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் இந்திய கேப்டனான செளரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா இது குறித்துக் கூறுகையில், செளரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வமான இறுதி அறிவிப்பு 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
கடந்த 2000 முதல் 2006 வரை 49 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த செளரவ் கங்குலி, அதில் 21 போட்டிகளில் வென்றுள்ளார். 13 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. அதேபோல் செளரவ் கங்குலி கேப்டனாக இருந்த 146 ஒருநாள் போட்டிகளில், 76 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.
அதுவரை இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் , சுழல் பந்துவீச்சாளர்களின் உதவியோடு பெரும்பாலும் இந்தியாவே வெல்லும். வெளிநாடுகளில் அணி வெற்றி பெறுவது என்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகவே கருதப்பட்டது.
வெளிநாடுகளிலும் இந்தியாவால் டெஸ்ட் போட்டிகளில் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை செளரவ் கங்குலி கேப்டனாக ஆனபிறகே துளிர்விட்டது. குறிப்பாக 2003-04 ஆஸ்திரேலியா தொடர், 2004 பாகிஸ்தான் தொடர், 2002 இங்கிலாந்து தொடர் ஆகியவை அணிக்கு மிகவும் சவாலாக இருந்தாலும் இந்திய அணி இந்த தொடர்களில் வெற்றிகளை குவித்ததில், அணியின் இளம் வீரர்களை முன்னிறுத்தியதில் கங்குலியின் தலைமை பலரின் பாராட்டுகளை பெற்றது.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE (GETTY IMAGES)
2003 உலகக்கோப்பை இறுதியாட்டத்தை இந்தியா எட்டியது. 2000 முதல் 2005 வரை மிகவும் வலிமையாக இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு எண்ணற்ற போட்டிகளில் சவாலாக இருந்தது, மிகவும் இக்கட்டான சூழலில் 2001 ஆஸ்திரேலிய தொடரை வென்றது, 2002 நாட்வெஸ்ட் தொடரை வென்றது ஆகிய பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த செளரவ் கங்குலி 2008-இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
கிரிக்கெட்டுக்கு பின்னர் செளரவ்
ஆரம்பத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணிக்கு செளரவ் கங்குலி தலைமையேற்றார். 2009இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக இருந்த செளரவ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரண்டன் மெக்கல்லம் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.
அந்த ஆண்டில் மிகவும் மோசமாக பங்களித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது. கேப்டனாக இருந்த செளரவ் கங்குலி மாற்றப்பட்டது குறித்து ஊடங்கங்கள் பெரிதும் கேள்வி எழுப்பின. 2012 வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர், அந்த ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
வங்காள தொலைக்காட்சி சானலான ஜி பங்களாவில், ஒரு குவிஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக சிறிது காலம் செளரவ் கங்குலி இருந்தார்.
2009ஆம் ஆண்டு, கிரிக்கெட் நிர்வாகத்தில் செளரவ் கங்குலி காலடி எடுத்து வைக்க ஓரு முக்கியமான ஆண்டாக இருந்தது எனலாம். 2009 ஆகஸ்டில் சிஏபி எனப்படும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் வளர்ச்சி மையத்தின் தலைவராக செளரவ் கங்குலி பொறுப்பேற்றார்.

பட மூலாதாரம், Getty Images
பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கு கீழ் உள்ள அமைப்புகளை கண்காணிப்பது, இங்குள்ள கிரிக்கெட் மைதானங்களை மேம்படுத்துவது, இளைய வீரர்களின் திறன்களை அடையாளம் கண்டு அவர்களை மெருகேற்றுவது - இவை இந்த கிரிக்கெட் வளர்ச்சி மையத்தின் முக்கிய பணியாக இருந்தது. இதனை செளரவ் கங்குலி மிக சிறப்பாக செய்தார்.
ஈடன் கார்டன் உள்ளிட்ட மைதானங்களை உலகத்தரத்தில் பராமரிப்பதில் செளரவ் கங்குலி அதிக ஆர்வம் காட்டினார். இந்திய மைதானங்களை வெளிநாட்டினர் குறைகூறுவதை விரும்பாத செளரவ், மேற்குவங்கத்தில் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மைதானங்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அதேவேளையில் இந்தியாவில் ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்படுவதாக கூறப்படுவதை அவர் ஏற்க மறுத்தார்.
''வெளிநாடுகளில் உள்ள ஆடுகளங்கள் அவர்களுக்கு சாதகமாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவை மட்டும் குறைகூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தியாவில் பேட்டிங், பந்துவீச்சு என இரு அம்சங்களுக்கும் ஏற்பவே பிட்ச்கள் உருவாக்கப்படுகின்றன'' என்று செளரவ் கங்குலி கூறினார்.
தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியின் திறமையை அவர் கொல்கத்தா கிளப்களில் பந்துவீசியபோது அடையாளம் கண்ட செளரவ் கங்குலி வழங்கிய ஆலோசனைகள் மற்றும் ஊக்குவிப்பு ஷமி விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்க உதவியது.

பட மூலாதாரம், ALEX DAVIDSON
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக செளரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளரான விஜய் லோக்பாலி கூறுகையில், ''இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதேவேளையில், இதற்கு செளரவ் கங்குலி முற்றிலும் தகுதியானவர்'' என்று குறிப்பிட்டார்.
''விளையாடும் காலத்தில் இளம் வீரர்களை அவர் முன்னிறுத்திய விதம் அலாதியானது. அதேவேளையில், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் செளரவ். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து அவரால் உரிமைகளை போராடி பெற முடியும். அதேபோல் இந்தியாவில் தனது செயல்திட்டத்தை ஆணித்தரமாகவும் எடுத்துவைக்கமுடியும்'' என்று அவர் மேலும் கூறினார்.
''மென்மையான பாணியில் கருத்துக்களை எடுத்துரைப்பதை, செயாலற்றுவதை நிச்சயம் செளரவ் கங்குலியிடம் எதிர்ப்பார்க்க முடியாது. விளையாடும் காலத்தில் சிஏபி நிர்வாக பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் எப்படி இருந்தாரோ அப்படிதான் இனியும் அவர் இருப்பார் என்றே எதிர்பார்க்கலாம்'' என்று விஜய் லோக்பாலி மேலும் குறிப்பிட்டார்.
2018-ஆம் ஆண்டில் 'ஏ செஞ்சுரி இஸ் நாட் எனாஃப்' (A Century is Not Enough) என்ற செளரவ் கங்குலியின் சுயசரிதை வெளியானது.

பட மூலாதாரம், MANAN VATSYAYANA (GETTY IMAGES)
'கடவுளுக்கு பிறகு ஆஃ ப் சைட் திசையில் சிறப்பாக பங்களிக்கக்கூடியவர் செளரவ் கங்குலிதான்'' என்று முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் கூறியது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.
சட்டை சுழற்றி ரசிகர்களின் மனதை வென்ற செளரவ்
விளையாடும் காலத்தில் எண்ணற்ற சர்ச்சைகளையும் செளரவ் கங்குலி சந்தித்துள்ளார்.
கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலத்தில் அவருக்கும், செளரவ் கங்குலிக்கும் நடந்த மோதல்கள், வேப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஷார்ட் பால்கள் மற்றும் பவுன்சர்களில் தொடர்ந்து ஆட்டமிழந்தது, எண்ணற்ற முறைகள் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்களுடன் மோதலில் ஈடுபட்டது என பலமுறைகள் கிரிக்கெட் சாதனையை தவிரவும், தலைப்பு செய்திகளில் செளரவ் இடம்பெற்றார்.
மிகவும் பரபரப்பான 2002 நாட்வெஸ்ட் இறுதியாட்டத்தில், மிகப்பெரிய இலக்கை எட்டிய இந்தியா வெற்றி பெற்றவுடன், லார்ட்ஸ் பால்கனியில் தனது டிஷர்ட்டை சுழற்றிய காட்சி இன்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெருமையாக நினைவுகூரப்படுகிறது.

பட மூலாதாரம், @NTRblood
ஆனால் அது வேறு ஒரு காலகட்டம். கிரிக்கெட் நிர்வாகியாக, உலகின் மிகவும் பெரிய மற்றும் பணக்கார கிரிக்கெட் போர்டாக கருதப்படும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கும் செளரவ் கங்குலி விளையாடும் காலத்தில் கடைபிடித்த தனது ஆக்ரோஷ பாணியை இனியும் தொடரமுடியுமா என்பது கேள்விக்குறியே.
எண்ணற்ற முறைகள் கடுமையான சூழலில், விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையிலும் போராடி தன்னை நிரூபித்த செளரவ் கங்குலி மீண்டும் ஒருமுறை அவ்வாறு சாதிப்பார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. கிரிக்கெட் வீரர், கேப்டன் என்ற முந்தைய பொறுப்புகளில் ஜொலித்த செளரவ் கங்குலி மீண்டும் ஒருமுறை மிளிர்வாரா என்பதற்கு காலம் பதில்கூறும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












