நரேந்திர மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு:இந்தியா, சீனா இடையேயான உறவில் இனி என்னவெல்லாம் நேரலாம் ?- விரிவான அலசல்

இந்தியா சீனா

பட மூலாதாரம், PIB

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசியது இந்திய - சீன உறவில் புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாக இந்தியா தெரிவிக்கிறது. இந்தச் சந்திப்பு எந்த அளவுக்கு இந்திய - சீன உறவை முன்னகர்த்தியிருக்கிறது?

சீன அதிபர் - இந்தியப் பிரதமர் சந்திப்பிற்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து விளக்கினார். மேலும் வெளியுறவுத் துறையின் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டுக்கும் சீனாவின் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையில் சகோதர மாநில உறவு ஒன்றை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், ஷி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைசாரா சந்திப்பு இரு தரப்பிற்குமே மகிழ்ச்சியளித்திருப்பதாகவும் பல்வேறு விஷயங்கள் குறித்து பரந்த பார்வையில் உடன்பாடான கருத்துகள் எட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக இந்திய - சீனா வர்த்தகப் பற்றாக்குறை, மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவது, சுற்றுலாவை மேம்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவை குறித்து பேசப்பட்டதாக இந்தியத் தரப்பு தெரிவித்தது.

மாமல்லபுரம் - ஃபூஜியன் மாகாணம்

மேலும், மாமல்லபுரத்துக்கும் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையிலான உறவு குறித்து ஆராய ஒரு கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்றும் தமிழகமும் ஃப்யூஜியானும் சகோதர மாநிலங்களாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்தியா சீனா

பட மூலாதாரம், PIB

இது தொடர்பாக சீனத் தரப்பிலிருந்து சீனாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் லுவோ ஷவோஹி சில விஷயங்களைக் குறிப்பிட்டார்.

அதாவது, வுஹானில் நடந்த முதல் முறைசாரா சந்திப்பின்போது எந்தெந்த விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதோ, அதனைத் தொடர்வது, 70 ஆண்டு இந்திய - சீன உறவை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது, இந்தியா - சீனா இடையில் உள்ள வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைப்பது ஆகியவை பேசப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தியா சீனா

பட மூலாதாரம், PIB

இந்திய - சீன உறவில் ஒரு பிரச்சனையாக இருக்கும் காஷ்மீர் குறித்துப் பேசப்படவில்லையென இந்தியத் தரப்புத் தெரிவித்தது.

வெற்றியுமில்லை; தோல்வியுமில்லை

இந்தியா சீனா

பட மூலாதாரம், PIB

"இந்த சந்திப்பைப் பொறுத்தவரை வெற்றியுமில்லை; தோல்வியுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய - சீன உறவு தற்போதுள்ள நிலையிலிருந்து கீழிறங்கவில்லை என்பதை வேண்டுமானால் குறிப்பிட்டுச் சொல்லலாம்" என்கிறார் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களில் நிபுணரும் சென்டர் ஃபார் எசியா ஸ்டடீசின் முதுநிலை ஆய்வாளருமான வி. சூரியநாராயண்.

"இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள வர்த்தகப் பற்றாக் குறையைச் சரிசெய்வது குறித்து பெரிதாக எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனப் பொருட்கள் சட்டவிரோதமாக வந்து குவிகின்றன. மணிப்பூரில் உள்ள மோரே வழியாக இவை வருகின்றன. அதைச் சீனா கட்டுப்படுத்துவதில்லை. இதனால், பல கோடி ரூபாய் இந்தியாவுக்கு இறக்குமதி வரியில் இழப்பு ஏற்படுகிறது. மேலும் மருந்துப் பொருட்கள், உபகரணங்கள், மென்பொருள் சந்தை ஆகியவற்றில் நாம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னணியில் இருக்கிறோம். இவற்றை ஏற்றுமதி செய்யவும் சீனா அனுமதிப்பதில்லை. இவை குறித்து இந்தப் பேச்சு வார்த்தையில் ஏதும் எட்டப்படவில்லை" என்று சுட்டிக்காட்டுகிறார் சூர்யநாராயண்.

நட்புரீதியான அணுகுமுறை இல்லை

வர்த்தக ரீதியாக எப்போதுமே சீனா இந்தியாவுடன் நட்புரீதியான அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. தற்போதைய பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் குறிப்பாக எந்த வாக்குறுதியையும் தரவில்லை என்கிறார் அவர்.

இந்தியா சீனா

பட மூலாதாரம், PIB

சுற்றுலாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 150 மில்லியன் சீனர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவிற்காகச் செல்கிறார்கள். ஆனால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் வெறும் 1.5 லட்சம் பேர்தான். இதனை மேம்படுத்த எதுவும் சொல்லப்படவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற பௌத்தத் தலங்கள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சூர்யநாராயண்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது; அப்படியானால், அந்த விவகாரத்தில் சீனாவின் முந்தைய நிலைப்பாடு தொடரும் என்பதுதான் அதன் அர்த்தம். அதாவது, தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஆதரிக்கக்கூடும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தை தீர்க்க வேண்டுமென்கிறது சீனா. இந்த விவகாரத்தை இந்தியா 1948ல் ஐ.நாவுக்குக் கொண்டுசென்றது. அப்போது சீனா அதில் உறுப்பினர்கூட அல்ல. இருந்தபோதும் அதனைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த சந்திப்பிற்குப் பிறகும்கூட பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுடனான யுத்த அபாயம் நீடிக்கவே செய்கிறது என்கிறார் வி. சூர்யநாராயண்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :