சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்

பெண்கள்

பட மூலாதாரம், UNICEF/SOULEIMAN

வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

அந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார்.

வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா ஜனநாயகப் படை என்ற குர்து ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

ஐ.எஸ். படையினரை அழிப்பதற்கு சிரியா ஜனநாயகப் படையின் உதவியைப் பெற்றுவந்த அமெரிக்கா, துருக்கியோடு நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கியது. இதனை முதுகில் குத்தும் செயலாகப் பார்க்கும் சிரியா ஜனநாயகப் படை, துருக்கியை எதிர்கொள்ள சிரியாவின் அரசுப் படைகளோடு சமரசத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து, நாட்டின் வடகிழக்கு பகுதியில் சிரியா ராணுவம் நுழைந்துள்ளது.

இந்நிலையில்தான் அமெரிக்கா துருக்கி மீதான தடைகளை விதித்துள்ளது.

எல்லைப் பிரதேசத்தில் இருந்து குர்து படைப்பிரிவுகளை விரட்டி, "பாதுகாப்பான மண்டலத்தை" உருவாக்குவதே அரசின் நோக்கம் என்கிறது துருக்கி.

சிரியாவில் 30 கிலோமீட்டர் (20 மைல்கள்) பகுதியில் உருவாக்கப்படும் "பாதுகாப்பான மண்டலத்தில்", தற்போது தங்களின் எல்லையில் வாழும் 20 லட்சம் சிரியா அகதிகளை மீள குடியமர்த்த துருக்கி விரும்புகிறது.

ஆனால், அவ்வாறு குடியமர்த்தப்பட இருப்போரில் பலரும் குர்துக்கள் அல்ல, இந்த நடவடிக்கை, உள்ளூர் குர்து மக்களின் இன அழிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Presentational grey line

செளரவ் கங்குலி: அணித்தலைவராக சாதித்தவர் பிசிசிஐ தலைவராக சாதிப்பாரா?

சௌரவ் கங்குலி

பட மூலாதாரம், CLIVE MASON / GETTY IMAGES

படக்குறிப்பு, சௌரவ் கங்குலி

''சச்சின், டிராவிட், சேவாக் என பல திறமையான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தாலும், நாங்கள் யோசிப்பது ஒருவர் குறித்துதான். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செளரவ் கங்குலி போன்ற ஒருவர் இருக்கும்போது எங்களின் திட்டங்களை மாற்றவேண்டியிருக்கும். எப்படிப்பட்ட போட்டியாக இருந்தாலும் அவரின் அணியை வழிநடத்தும் பாங்கு இறுதிவரை எதிர் அணிக்கு சவாலாகவே இருக்கும். அவரை நீங்கள் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் அவரின் திறமையை, தலைமைப் பண்பை மதித்தே ஆக வேண்டும்'' என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும், 'டஃப் ஆஸி' என்று புகழப்பட்ட ஸ்டீவ் வாக் ஒரு முறை தெரிவித்தார்.

மற்ற வீரர்கள் செளரவ் கங்குலி குறித்து பாராட்டுகளை தெரிவிப்பதற்கும், அதே விஷயத்தை ஸ்டீவ் வாக் கூறுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

Presentational grey line

மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன?

கொலை செய்யப்பட்ட மூனறு பேர்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட மூனறு பேர்

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஜியாகஞ் கிராமம். இந்த கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரு புறம் வீட்டிற்குள் நுழைந்து மூன்று பேரைக் கொன்றதைப் பற்றியும் இன்னொரு புறம் இறந்த நபருக்கு ஆர்எஸ்எஸுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டும் வருகிறது.

இந்த கொலைகள் தொடர்பான நிறையக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

மேற்கு வங்க காவல்துறையினர் மற்றும் சிஐடி இந்த கொலைகள் தொடர்பான மர்மங்களைக் களைய முயற்சி செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால் சிலரை காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த நபர்களில் இறந்த பந்து பிரகாஷ் பாலின் தந்தை அமர் பாலும் ஒருவர். இந்த விசாரணையில் உள்ளவர்கள் யாரும் இந்து அல்லாத வேற்று மதத்தவர்கள் கிடையாது. விசாரணை முடிந்ததும் காவலில் உள்ளவர்கள் சிலர் விடுவிக்கப்படலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Presentational grey line

நரேந்திர மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு:இந்தியா, சீனா இடையேயான உறவில் இனி என்னவெல்லாம் நேரலாம் ?- விரிவான அலசல்

ஷி ஜின்பிங் மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம், PIB

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசியது இந்திய - சீன உறவில் புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாக இந்தியா தெரிவிக்கிறது. இந்தச் சந்திப்பு எந்த அளவுக்கு இந்திய - சீன உறவை முன்னகர்த்தியிருக்கிறது?

சீன அதிபர் - இந்தியப் பிரதமர் சந்திப்பிற்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து விளக்கினார். மேலும் வெளியுறவுத் துறையின் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

Presentational grey line

காஷ்மீர் விவகாரம் குறித்து இரானில் பேசிய இம்ரான் கான் - என்ன சொன்னார் ஹசன் ரூஹானி?

இம்ரான் கான் மற்றும் ஹசன் ரூஹானி

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேசியதற்காக இரான் அதிபர் ஹசன் ரூஹானிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேசிய ஹசன் ரூஹானி, காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என வலியுறுத்தினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ஆகஸ்ட் மாதம் நீக்கியது

இதனை அடுத்து அங்குத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :