கேரளா கருப்புப் பண விவகாரத்தில் பாஜக தலைவருக்குத் தொடர்பா?

பட மூலாதாரம், TWITTER/@BJP4KERALAM
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
கேரளாவின் 'கருப்புப் பண வழக்கில்' கைது செய்யப்பட்ட 21 பேரில் சிலர் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது, அவர்களிடம் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. பாஜகவின் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளர்களும் இதில் அடங்குவர்.
ஒரு ஜோடிக்கப்பட்ட கார் விபத்தின் மூலம் ரூ .3.5 கோடி திருடப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் புகார் அளித்தவர்களில் ஒருவரான ஏ.கே.தர்மராஜன், ஆர்.எஸ்.எஸ். தொண்டர். பாஜகவுக்கு தேர்தல் சம்பந்தமான பொருட்களை விநியோகிப்பவர் இவர்.
இந்தச் சம்பவம் கேரளத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 3ஆம் தேதி நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இப்போது இந்த வழக்கின் விசாரணையில் ஒரு அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் மகனையும் போலீசார் விசாரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சி கட்சியின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் ஒரு சதி முயற்சி என்று அக்கட்சி இதைக் கூறுகிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திங்களன்று சட்டமன்றத்தில் "விசாரணை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கொச்சி மண்டல அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது" என்று கூறினார். இந்த தகவல் அவருக்கு ஜூன் 1 அன்று கிடைத்தது.

பட மூலாதாரம், TWITTER/P VIJAYAN
எனவே, கேரளாவில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரம் கருப்பு பணம் குறித்ததா அல்லது ஹவாலா வழக்கா என்ற விவாதம் இப்போது எழுகிறது.
கருப்புப் பண விவகாரம் - நடந்தது என்ன?
திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டபோது கார் விபத்து நடந்துள்ளது. இந்தப் பணம் கர்நாடகாவிலிருந்து வந்தது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விபத்து திருச்சூர்-கோடாகாரா சந்திப்பிற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஏ.கே.தர்மராஜனின் ஓட்டுநர் ஷம்ஜீர் புகார் அளித்தார். கார் விபத்துக்குப் பிறகு, வாகனத்தில் இருந்து ரூ. 25 லட்சம் திருடப்பட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தொகை பின்னர் மாற்றிக் கூறப்பட்டது.
காவல்துறை அதிகாரி கூறுகையில், "அந்த காரில் மூன்றரை கோடி ரூபாய் இருந்தது, இதுதான் தர்மராஜன் காவல்துறைக்கு அளித்த அறிக்கையில் கூறியது. இதுவரை நடந்த கைதுகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூ .1.12 கோடியை மீட்டெடுத்துள்ளோம். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரில் விபத்து ஏற்படுத்துவதில் ஈடுபடவில்லை, ஆனால் சிலர் இதன் பின்னால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தில் தொடர்புள்ளவர்கள்" என்று தெரிவித்தார்.
இந்தப் பணம் ஆலப்புழையில் உள்ள 'கர்த்தா' என்ற கட்சித் தொண்டருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்தது என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் இதுவரை 96 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER/CMO KERALA
குற்றம்சாட்டப்பட்டவர் இந்த ரூ. 1.12 கோடியை 347 கிராம் தங்கத்தை வாங்கப் பயன்படுத்தினார் என்று காவல்துறை தெரிவிக்கிறது. அவர் சில செல்பேசிகளையும் சில கடிகாரங்களையும் வாங்கியிருந்தார். இவை அனைத்தும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முதல் புகாரில், இந்த விபத்தில் ரூ .25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. அதை அடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 395 ஆவது பிரிவின் (கொள்ளை) கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் தர்மராஜனின் அறிக்கைக்குப் பிறகு, இந்த வழக்கில் 412, 212 மற்றும் 120-பி பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.
புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறிக்கைகள் உட்பட, இதுவரை பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் செயலாளர் திபின் மற்றும் அவரது ஓட்டுநர் லிபிஷ் ஆகியோரை எஸ்ஐடி விசாரித்துள்ளது. இருப்பினும், இந்தப் பணப் பரிமாற்றம் குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் மறுத்துள்ளனர்.
திருச்சூர் மாவட்டத் தலைவர் கே.கே.அனிஷ், பொதுச் செயலாளர் கே.கணேசன் ஆகியோரிடமும் எஸ்.ஐ.டி கேள்வி எழுப்பியுள்ளது.
இருப்பினும், பாஜக செய்தித் தொடர்பாளர் பி.கோபாலகிருஷ்ணன், பாஜக தலைவர்களை எஸ்ஐடி தீவிரமாக விசாரித்ததற்கு விளக்கமும் வைத்திருக்கிறார்.

பட மூலாதாரம், TWITTER/BJP KERALA
பாஜக என்ன கூறுகிறது?
பிபிசியுடனான உரையாடலில் கோபாலகிருஷ்ணன், "இந்தச் சம்பவம் நடந்த இரவு, தர்மராஜன் தன்னால் முடிந்த அனைத்து பாஜக தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். கட்சித் தலைவர் சுரேந்திரனையும் அழைத்துத் தனது கார் மற்றும் பணம் இரண்டும் நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறினார். நான்கைந்து நாள் கழித்து, அவர் ஒரு புகாரோடு பாஜகவின் திருச்சூர் மாவட்ட அலுவலகத்திற்கும் வந்து மாவட்டத் தலைவரைச் சந்தித்தார்.
அதே நேரத்தில், எங்கள் கட்சித் தலைவர்களும் தேர்தல் விஷயங்களுக்காக தர்மராஜனைத் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தனர். இப்போது சம்பவம் நடந்த இரவில் தர்மராஜனும் அவரது ஓட்டுநரும் தொலைபேசியில் யார் யாருடன் பேசினார்கள் என்பது குறித்துக் காவல் துறை விசாரணை செய்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாஜக தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக சிலர் கூறுகிறார்கள், ஆனால் அப்படி இல்லை." என்று விளக்கமளித்தார்.
கோபாலகிருஷ்ணன், "தொலைபேசி பதிவுகளின் அடிப்படையில், இந்த விசாரணையில் சுரேந்திரனின் மகன் ஹரிகிருஷ்ணனின் பெயர் வந்துள்ளது. ஒருவேளை எஸ்ஐடி அவரை விசாரணைக்கு அழைக்கலாம்," என்றார்.
"கேரள முதலமைச்சரும் காங்கிரஸுடன் இணைந்த யுடிஎஃப்-ம் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) இந்த வாய்ப்பைக் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப் பயன்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால் காவல் துறை விசாரணையில் புதிய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில புதிய விஷயங்கள் வெளி வருகின்றன. இது பாஜகவுக்குள்ளேயே கூட ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
உதாரணமாக, பாஜக -வின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் செயல்பாட்டாளர் ரிஷி பல்புவின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் மாவட்ட குழுவினர் தனது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.
பல்பு எதிர்கட்சியினரின் வார்த்தைகளைப் பேசுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பி கோபாலகிருஷ்ணன் கூறுகிறார். "நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய ஒரு நேரத்தில், அவர் கட்சிக்கு எதிராக பேசுவது சரியானதாகக் கருத முடியாது," என்று அவர் கூறினார்.
இந்த வழக்கை கேரள காவல்துறைத் தலைவர் எஸ்ஐடியிடம் ஒப்படைத்ததையடுத்து, பாஜகவின் மத்திய தலைமையிலும் பரபரப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
இதன் பின்னர், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழுவையும் பாஜக அமைத்தது, இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்தக் குழுவில் 'இந்தியாவின் மெட்ரோ மனிதர்' என்று பிரபலமாக அறியப்பட்ட ஈ.ஸ்ரீதரன், முன்னாள் டிஜிபியும் பாஜக வேட்பாளருமான ஜேக்கப் தாமஸ் மற்றும் ஓய்வுபெற்ற மற்றொரு சிவில் அதிகாரி ஆகியோர் அடங்குவர்.
இந்தக் குழு ஏதேனும் அறிக்கை அனுப்பியிருக்கிறதா இல்லையா என்பது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பி.கோபாலகிருஷ்ணனுக்கு எந்தத் தகவலும் இல்லை. "குழுவிலிருந்து மத்திய தலைமைக்கு என்ன தகவல் கிடைத்தது என்பது எனக்கு தெரியாது. ஸ்ரீதரன் தொலைபேசியையும் எடுக்கவில்லை. குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கவில்லை. எனவே குழுவின் செயல்பாடு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை." என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், TWITTER/@SURENDRANBJP
இந்த விவகாரம் பெரிதானது எப்படி?
உண்மையில், இரண்டு வகையான குற்றச்சாட்டுகள் பற்றிய விவாதம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. ஒன்று, பணம் கொடுத்து ஒரு வேட்பாளரை வழியிலிருந்து அகற்ற பாஜக விரும்பியது. இரண்டாவதாக, கட்சி (பாஜக) பணம் கொடுத்து ஒரு வேட்பாளரைத் தேர்தலில் தனது கூட்டாளியாக மாற்ற விரும்பியது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளின் காரணமாக, இந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளில் ஒன்று பழங்குடித் தலைவர் சி.கே.ஜானுவின் நெருங்கிய உதவியாளரால் செய்யப்பட்டது. சி.கே.ஜானு கேரளாவின் ஜே.ஆர்.எஸ் கட்சியின் மரியாதைக்குரிய தலைவர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ்த் தேர்தலில் போட்டியிட பாஜக ஜானுவுக்கு பல லட்சங்கள் கொடுத்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் ஜானு இருவரும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று மறுக்கின்றனர்.
இரண்டாவது குற்றச்சாட்டை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கே.சுந்தர் வைத்துள்ளார். தன்னுடைய வேட்பு மனுவைத் திரும்பப்பெற, பாஜக, ரூ .2 லட்சம், ஒரு மொபைல் போன் மற்றும் தனது தாய்க்கு ரூ .50 ஆயிரம் வழங்கியதாக அவர் கூறுகிறார். பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிட்ட அதே சட்டமன்றத் தொகுதியிலிருந்து கே.சுந்தர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக இருந்தார். இருப்பினும், சுரேந்திரன் தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டையும் பாஜக ஒரு 'போலி கதை' என்று கூறுகிறது. ஆனால் காசர்கோடு காவல்துறை, பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மீது ஐ.பி.சி.யின் 171-பி மற்றும் 171-இ பிரிவுகளின் கீழ் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கே.சுந்தரின் அறிக்கையையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பாஜக இந்த முறை 2016 ல் வென்ற ஒரே தொகுதியையும் தக்கவைத்துக் கொள்ளத் தவறிவிட்டது.. மேலும், 2019 மக்களவை தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதமும் முன்பை விட குறைவாகவே இருந்தது.
கருப்புப் பண வழக்கின் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால், "விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது" என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: ஜி7 நாடுகளை எச்சரிக்கும் யூனிசெஃப் - புதிய ஆபத்து
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: டென்மார்கில் நிறைவேறிய சட்டம்
- இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? - கவலை எழுப்பும் பாகிஸ்தான்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
- ஒலியைவிட வேகமாக செல்லும் பயணிகள் விமானம்: அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












