மு.க.ஸ்டாலின்: ஊழல் வழக்குகளை காட்டி, அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக

ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுக-வை மிரட்டி அதனுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் பலமுறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. ஆனால், திமுக காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளது என்று புதன்கிழமை சென்னை அருகே நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரதமரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.
விருதுநகரில் நடந்துவரும் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் விதத்தில் அதிமுக-வை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
"காங்கிரசுடன் திமுக தேர்தல் காலத்தில் மட்டும் கூட்டணி வைத்திருக்கவில்லை. நாட்டுக்கு ஆபத்து நேர்ந்த நேரத்தில் எல்லாம் சேர்ந்து நின்றிருக்கிறது. குட்கா வழக்கு இருக்கிறது. சி.பி.ஐ.யிலே உன் விவகாரம் சிக்கியிருக்கிறது, வருமானவரித்துறை மூலம், அமலாக்கத் துறை மூலம் பல ஊழல்கள் எங்கள் கையிலே அகப்பட்டிருக்கின்றன. பல்வேறு வழக்குகள்... கொடநாடு விவகாரம் இருக்கிறது என்று கூறி மிரட்டி அதிமுக-வுடன் வைத்துள்ள கூட்டணி எத்தகைய கூட்டணி என்பதை மோடி சொல்லவேண்டும்" என்று ஸ்டாலின் பேசினார்.

பட மூலாதாரம், DMK
மேலும் அவர் கூறுகையில், "ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பாஜக-வுடன்தான் கூட்டணி வைத்திருப்பார் என்று கூறியது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு. மோடியா-லேடியா என்ற பிரசாரம் கடந்த தேர்தலில் நடந்தது. பலமுறை நேரில் வந்து பேசியும் பாஜக-வுடன் கூட்டணி வைக்க கடந்த தேர்தலில் மறுத்தார் ஜெயலலிதா" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சலுகைகளை வழங்குகிறவர் 130 கோடி மக்கள்தான் என் குடும்பம் என்று சொல்கிறார் என்று கூறி மோதி தம் உரையில் தெரிவித்த கருத்தினை விமர்சித்தார் ஸ்டாலின்.
"தமிழக ரயில்வே திட்டங்கள் முடக்கம்"

பட மூலாதாரம், DMK
மதுரை- சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்குவதற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் தந்திருக்கிறார்கள். மதுரை-சென்னை தடத்தில் ரயில் விடுவதன் மூலம் தமிழகத்தின் ரயில்வே அடிப்படைக் கட்டுமானத் தேவைகள் நிறைவேற்றப்பட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால், தமிழக ரயில்வே திட்டங்கள் எதுவும் கடந்த 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. மதுரை கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை அமைக்க 2016-ம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினார் ஸ்டாலின்.
வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு துரோகம்
ரயில்வே துறையில் தமிழகத்துக்கு நடக்கும் துரோகங்கள் பல. தென்னக ரயில்வேயில் பிட்டர், மெக்கானிக் உள்ளிட்ட 1765 பணியிடங்களுக்கு ஆளெடுக்க விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எடுத்தவர்களில் 1,600 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ரயில்வேயில் மட்டுமல்ல, என்.எல்.சி., பாரத மிகுமின் நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில், சுங்கத்துறை போன்ற துறைகளிலும் தமிழகத்தில் வேலை செய்வதற்கு ஆள் எடுப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறினார் ஸ்டாலின்.
மோதியைப் பார்த்துக் கேட்ட கேள்விகள்
"நீட் தேர்வுக்க தமிழகம் விலக்கு கேட்டோமே என்ன ஆயிற்று? பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு கூறியது என்ன ஆயிற்று? கஜ புயல் நிவாரணம் எங்கே? ஜி.எஸ்.டி வரியில் தமிழகத்துக்கு உரிய பங்கான 4,000 கோடி எங்கே? காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் மேகதாட்டு அணை அமைக்கும் முயற்சியை ஏன் மத்திய அரசு தடுக்கவில்லை? சேலம் உருக்காலைத் திட்டம் என்னவாயிற்று? கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசு தடை போட்டதேன்? குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஆய்வு தளம் அமைக்கப்படுமா? படாதா?" என்று கூறி மேலும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்ட ஸ்டாலின், இவற்றுக்கெல்லாம் மோதி பதில் சொல்ல வேண்டும் என்றார். "எதையுமே செய்யாமல் எந்த முகத்தோடு தமிழகத்தில் வாக்கு கேட்டு வருகிறீர்கள்" என்றும் அவர் கேள்வி கேட்டார்.
இந்தியாவில், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்துள்ளது, வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாகியுள்ளது, விலை வாசி உயர்ந்துள்ளது... இவற்றையெல்லாம்தான் மோதி இந்தியா முன்னேறியதற்கான அடையாளமாக கூறுகிறாரா என்றும் ஸ்டாலின் கேட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












