மைதிலி சிவராமன்: வெண்மணி முதல் வாச்சாத்தி வரை நீதிக்காக பாடுபட்டவர் - மார்க்சிஸ்ட் அஞ்சலி

பட மூலாதாரம், K Balakrishnan, Facebook
சென்னையில் இன்று (30 மே 2021) காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முக்கியத் தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன், தமிழ்நாட்டை கலங்க வைத்த பல மனித உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதிக்காகப் பாடுபட்டவர்.
81 வயதான மைதிலி, கடந்த 10 ஆண்டுகளாக அல்சைமர்ஸ் என்கிற ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிக்கப்பட்டது.
இவர் தன் கணவர் கருணாகரன், மகள் கல்பனா கருணாகரன் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.
அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு:
அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு காலம் வேலை செய்தார் மைதிலி.
1966ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மூன்றாம் உலக நாடுகளைக் குறித்து இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்த போது (தலைமறைவாக) கியூபா சென்று வந்தார்.
1960களில் அவர் அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் போருக்கு எதிராக நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள், கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் அவரின் கவனத்தை ஈர்த்தன.
வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வின் மூலம் மார்க்சியத்தின் பக்கம் திரும்பினார். அமெரிக்க அரசு வேலையை உதறிவிட்டு இந்தியாவிற்கு திரும்பிய பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

பட மூலாதாரம், Getty Images
'ரேடிகல் ரிவ்யூ' என்கிற பத்திரிகையை முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். அப்பதவியில் இருந்து அவர் விலகிய பிறகு, அப்பொறுப்பை ஏற்று நடத்தியவர் மைதிலி சிவராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
1968ம் ஆண்டு கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிகல் ரிவ்யூ பத்திரிகையில் அதை ஆவணப்படுத்தி, அக்கொடூரச் சம்பவத்தை தன் எழுத்துக்கள் மூலம் உரக்கப் பேசி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர் மைதிலி.
கீழ்வெண்மணி படுகொலை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை ஆணையத்துக்கு பல்வேறு ஆவணங்களை திரட்டிக் கொடுத்து உதவினார்.
கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம், டேப்ளட் தொழிலாளர் போராட்டம், டன்லப் தொழிற்சங்கம், பொன்வண்டு சோப் கம்பெனி, பாலு கார்மெண்ட்ஸ், குவாரி தொழிற்சங்கம் என பல தொழிற்சங்கங்களில் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியவர். குறிப்பாக கார்மென்ட் தொழில்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார சுரண்டல்களையும், பாலியல் தாக்குதல்களையும் வலுவான முறையில் தலையிட்டு சட்டரீதியாக தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு மைதிலி சிவராமனுக்கு உண்டு.
சிறு நிறுவனங்கள் தொடங்கி மெட்டல்பாக்ஸ், அசோக் லேலண்டு, யூனியன் கார்பைடு, டிவிஎஸ் என பெரு நிறுவனங்கள் வரை நடந்த தொழிற்சங்க போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் தோழர் மைதிலி.
1973-ல் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரோடு இணைந்து தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய நிறுவனர்களில் ஒருவர் தோழர் மைதிலி சிவராமன்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சென்னை நடுக்குப்பத்தில் மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை அறியும் குழுவாகச் சென்று விவரங்களை வெளிக்கொண்டு வந்தவர்.
பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு என பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என உழைத்த தலைவர்களில் மைதிலி சிவராமனும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- பிபிஇ பாதுகாப்பு ஆடையுடன் கொரோனா வார்டில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சாம்சன் திருமணம் எளிமையாக நடந்தது
- நரேந்திர மோதி அழைத்த கூட்டத்திற்கு ஏன் போகவில்லை? மம்தா சொல்லும் காரணம்
- 1933ஆம் ஆண்டிலேயே சாதனை படைத்த எகிப்தின் முதல் பெண் விமானி
- அரசு விழாக்களில் ஓ.பி.எஸ்ஸுக்கு தனி மரியாதையா? என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?
- வியட்நாம் - காற்றில் வேகமாக பரவி வரும் `புதிய கலவையான` கொரோனா வைரஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












