நரேந்திர மோதி அழைத்த கூட்டத்திற்கு ஏன் போகவில்லை? மம்தா சொல்லும் காரணம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுபம் கிஷோர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிரதமர் மோதி கூட்டிய கூட்டத்தில், மம்தா பேனர்ஜி தாமதமாக வந்ததும், ஆவணங்களை ஒப்படைத்த பின்னர் அவர் உடனடியாக வெளியேறியதாக் கூறப்படுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த நிகழ்வுக்குப்பின்னர், மேற்கு வங்க தலைமை செயலாளர் அல்பன் பந்தோபாத்யாய, டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பந்தோபாத்யாயவுக்கு மத்திய அரசு, பணி நீட்டிப்பு வழங்கியது.
அவரை பணியிலிருந்து விடுவிப்பது குறித்து மம்தா பானர்ஜி எதுவும் கூறவில்லை. மேலும் இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.
இந்த விஷயத்தில் மம்தா சட்ட ஆலோசனையைப் பெறக்கூடும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாக மேற்கு வங்கத்தின் மூத்த பத்திரிகையாளர் பிரபாகர் மணி திவாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
மம்தா மரபை மீறியதாகவும், பிரதமரை அவமதித்ததாகவும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER / @ JDHANKHAR1
மம்தா என்ன சொன்னார்?
சனிக்கிழமையன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய மம்தா, ஆய்வுக் கூட்டம் முதலில் பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையில் நடைபெற இருந்தது என்றும். இதற்காக தனது சுற்றுப்பயணத்தை குறைத்துக்கொண்டு, கலைகுண்டாவைப் பார்வையிட ஒரு திட்டத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
"ஆனால் பின்னர் ,ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பெயர்களும், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களின் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆகவே இது பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு அல்ல என்பதால் நான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை." என்றார்.
இருப்பினும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மமதாவின் குற்றச்சாட்டுகள் தவறு என்று கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "ஒதிஷா மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் இருவருக்கும் , ஒரே நடவடிக்கையின் கீழ் கூட்டம் குறித்து கூறப்பட்டது. அவர் (மம்தா பானர்ஜி) சாக்கு போக்கு சொல்கிறார்,"என்று குறிப்பிட்டார்.
"எதிர்க்கட்சித் தலைவர் வருவதன் காரணமாகத்தான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அவர் தனது முக்கியத்துவத்தை பேணுவதற்காக பொய் சொல்கிறார். அவர் தன்னை மேற்குவங்க முதலமைச்சராக அல்லாமல் முழு நாட்டின் முதல்வராகவும் நினைக்கிறார்,"என்கிறார் சுவேந்து அதிகாரி.

பட மூலாதாரம், SANJAY DAS
`நான் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது` - மம்தா
"பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதால், சாகர் தீவிலிருந்து கலைகுண்டாவுக்கு 20 நிமிடங்கள் தாமதமாகச்செல்லுமாறு ஏடிசி (விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகம்) என்னிடம் கேட்டுக் கொண்டது," என்று மம்தா கூறினார்.
"அதன்பிறகு, ஹெலிகாப்டரை கலைக்குண்டாவில் தரையிறக்க சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகுதான் எனக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள் பிரதமர் வந்துவிட்டார். நான் அங்கு சென்று அவரை சந்திக்க அனுமதி கேட்டேன். ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. "
"நான் அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தேன். அவரது அனுமதியுடன் திகாவுக்கு புறப்பட்டேன். ஆனால் மாலையில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் இருந்து என்னை இழிவுபடுத்தும் விதமாக தொடர்ச்சியான செய்திகளும் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன."

பட மூலாதாரம், TWITTER / @ PMOINDIA
"அதன்பிறகு, மாநிலஅரசை கலந்தாலோசிக்காமல் திடீரென தலைமைச் செயலர் டெல்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோதியும் மத்திய அரசும் எப்போதுமே மோதல் மனப்போக்கிலேயே உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், ஆளுநரும் பிற தலைவர்களும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு மனநிலையுடன் இருக்கிறார்கள். "
"உண்மையில், பாரதிய ஜனதா கட்சியால் தனது தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் பழிவாங்கும் அரசியலாக இதையெல்லாம் செய்து வருகிறது," என்று மம்தா குற்றம் சாட்டினார்.
தலைமைச் செயலரை டெல்லிக்கு திரும்ப அழைப்பதன் மூலம், புயல் நிவாரணப் பணிகள், கோவிட்டுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகிறது என்று மம்தா மேலும் கூறினார்.
தலைமைச் செயலரை வேறு பணிக்காக டெல்லிக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்யுமாறு மம்தா, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். "அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் தலைமைச்செயலரை பலிகடா ஆக்க வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதிகாரபூர்வ சந்திப்பு குறித்து சந்தேகம் ஏன்?
பிரதமர் காத்திருக்க வேண்டியிருந்தது என்று பாஜக கூறுகிறது. அதே நேரம் அவருடைய அனுமதியை தான் பெற்றதாக மம்தா கூறுகிறார். இரண்டிற்கும் இடையே முரண்பாடு உள்ளது. பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பாக இத்தகைய முரண்பாடு நிலவுவது மிகவும் அரிது.
சரியான நேரத்தில் இரு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் தகவல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு அட்டவணை தயாரிக்கப்படுகிறது.
ஆனால் கூட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டது என்றும் அது "முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு" அல்ல. எனவே தான் கூட்டத்திற்குச் செல்லாதது குறித்து எந்த விதமான சர்ச்சையும் இருக்கக்கூடாது என்றும் மமதா தெரிவித்துள்ளார்.
"இது முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அல்ல என்றால், முதலமைச்சர் அத்தகைய கூட்டத்தை விட்டு வெளியேறுவது முன்பும் நடந்துள்ளது. பிரதமர் மோதியும், தான் முதலமைச்சராக இருந்தபோது இவ்வாறு செய்துள்ளார்," என்று மூத்த பத்திரிகையாளர் பிரபாகர் மணி திவாரி குறிப்பிட்டார்.
ஆனால் தற்போதைய இந்த நிகழ்வு காரணமாக, மம்தா அரசியல் செய்வதாகவும், பிரதமரை அவமதித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது.
"மம்தா தனது பிடிவாதத்தை மக்களின் நல்வாழ்வுக்கு மேலாக வைத்திருக்கிறார். இதைத்தான் அவரது நடத்தை காட்டுகிறது," என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஒற்றுமையான கூட்டாட்சியை தனது கொள்கையாக மோதி கடைப்பிடிக்கிறார். கட்சி வேறுபாடின்றி அனைத்து முதலமைச்சர்களுடனும் பணியாற்றி வருகிறார் ஆனால் மம்தாவின் இந்த திட்டம் மேற்கு வங்க மக்களை துன்புறுத்துவதாக உள்ளது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மம்தாவின் முடிவு , எதிர்ப்பை காட்டுவதற்கா?
பிரதமர் மீதும் அரசியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. "சில திரிணாமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகிறபடி பார்த்தால், பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரியும் அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். மம்தாவுக்கு இது தெரிந்ததும், அவர் கூட்டத்திற்கு செல்ல மறுத்துவிட்டார்" என்று பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரபாகர் மணி திவாரி கூறினார்.
"ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்" பெயர்களைச் சேர்த்ததன் மூலம் இது முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அல்ல என்று மம்தா தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசவில்லை.
அதே நாளில் ஒடிஷா முதல்வர், ஆளுநர் மற்றும் அதிகாரிகளை பிரதமர் சந்தித்தார். ஆனால் அந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது ஏன் என்று மமதா கேள்வி எழுப்பியுள்ளார்.
"குஜராத் மற்றும் ஒடிஷாவில் நடந்த இத்தகைய சந்திப்புக்களில், எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்படவில்லை," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மமதா அரசியல் செய்கிறார் என்று சுவேந்து ஆதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அவர் ஒரு சில படங்களை ட்வீட் செய்து, "கடந்த காலங்களில், வெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத முதலமைச்சர்களையும் பிரதமர் சந்தித்துள்ளார். மம்தா தீதியைப் போல யாரும் நடந்துகொள்ளவில்லை. இது அரசியல் செய்யும் நேரம் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். " என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி, மமதா பானர்ஜியை தோற்கடித்தார். இதற்கு முன்னரும் இருவருக்கும் இடையே சுமூக உறவு இல்லை என செய்திகள் வந்துள்ளன.
முதல்வராக இருந்தபோது கூட்டத்தில் கலந்துகொள்ளாத மோதி
பிரதமரை அவமதித்ததாக மமதா மீது பாஜக குற்றம் சாட்டுகிறது. ஆனால் முதல்வராக இருந்தபோது மோதி, பிரதமருடனான ஒரு சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
2013ல் முசாஃபர்நகர் கலவரத்திற்குப் பிறகு, பிரதமர் மன்மோகன் சிங் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை அழைத்தார். அதில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதி பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பாஜகவின் அப்போதைய சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்கும் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக நரேந்திர மோதி நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
செங்கோட்டை உரையை விமர்சனம் செய்தி மோதி
2013ல் பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையிலிருந்து ஆற்றிய உரையை அப்போதைய குஜராத் முதல்வர் மோதி, கட்ச் நகரில் விமர்சனம் செய்தார். "தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஊடகங்கள், இது பிரதமர் மன்மோகன் சிங்கின் கடைசி உரை என்று கூறுகின்றன. ஆனால் தான் வெகுதூரம் செல்லவிரும்புவதாக பிரதமர் கூறுகிறார். அவர் இந்த தூரத்தை எந்த ராக்கெட் மூலம் கடப்பார்? " என்று மோதி வினவினார்.
அதற்கு சில நாட்களுக்குப் பிறகு சத்தீஸ்கரில் செங்கோட்டை போல வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையிலிருந்து நரேந்திர மோதி உரை நிகழ்த்தினார்.

பட மூலாதாரம், TWITTER / @ PMOINDIA
பேரிடரின் போது அரசியல்
மும்பை தாக்குதல் பேரிடர் நேரத்தில் அரசியல் செய்ததாக நரேந்திர மோதி மீது குற்றம் சாட்டப்பட்டது. 2008, நவம்பர் 28 அன்று பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பையில் ஹோட்டல் ஓபராய் அருகே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி மன்மோகன் சிங்கை விமர்சித்தார்.
"பிரதமரிடமிருந்து நாடு அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது, ஆனால் நேற்றைய அவருடைய உரை ஏமாற்றத்தை அளித்தது" என்று அவர் கூறியிருந்தார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியை அங்கிருந்து மோதி அறிவித்தார்.
மோதி பிரதமரான பிறகு பல சந்தர்ப்பங்களில் மாநில முதல்வர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்த கேஜ்ரிவால்
ஏப்ரல் 23 ம் தேதி நரேந்திர மோதி, நாட்டில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களை காணொளி மூலம் சந்தித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசத் தொடங்கியபோது, அவரது உரை நேரடியாக ஒளிபரப்பாகத் தொடங்கியது.
இதற்கு நரேந்திர மோதி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். " ஒரு முதலமைச்சர் இது போன்ற ஒரு உள்ளரங்க கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்வது நமது பாரம்பரியம் மற்றும் நெறிமுறைக்கு எதிரானது. இது சரியானதல்ல. நாம் நெறிமுறைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும்," என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
மோதியின் இந்தக் கருத்து முதலமைச்சர் கேஜ்ரிவாலை பதற்றமடையச்செய்தது. அவர் உடனேயே, "வருங்காலத்தில் இதை கவனத்தில் கொள்கிறேன். என் தரப்பில் ஏதேனும் மரியாதைக் குறைவு ஏற்பட்டிருந்தால், நான் கடுமையாக ஏதாவது பேசியிருந்தால், என் நடத்தையில் தவறு இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
அரவிந்த் கேஜ்ரிவால் தனது உரையில் கொரோனாவின் தேசிய திட்டம் குறித்து பேசினார். ஆக்சிஜன் பற்றாக்குறை ஆக்சிஜன் டேங்கர்கள் தடுக்கப்படுவது போன்ற விஷயங்கள் குறித்துப் பேசிய அவர் அவற்றுக்கு தீர்வு காணுமாறு பிரதமர் மோதியிடம் வேண்டுகோள் விடுத்தார். கூட்டம் நேரலையில் காண்பிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.
ஹேமந்த் சோரென் மோதி மீது சாட்டிய குற்றச்சாட்டு
மே 6 ம் தேதி, பிரதமர் மோதியுடன் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் ட்விட்டரில்,
"இன்று மதிப்பிற்குரிய பிரதமர் தொலைபேசியில் அழைத்தார். அவர் தனது மனதில் இருப்பதை பேசினார். அவர் வேலையைப் பற்றிப் பேசியிருந்தால், வேலை பற்றிக்கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்."
இந்த அறிக்கை குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்தன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பாஜக தலைவர்கள் சோரெனை கடுமையாக விமர்சித்தனர்.
மமதா இதற்கு முன்பு தொடுத்த குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று நோய் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியுடன் நடந்த கூட்டத்தில் பல முதலமைச்சர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் அது 'அவமரியாதை' என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மே 20 ஆம் தேதி குற்றம்சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பை சூப்பர் ஃப்ளாப் என்று மமதா பானர்ஜி விவரித்திருந்தார். அதே நேரத்தில், பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் கூட்டத்தில் மமதா பானர்ஜி கலந்து கொள்வதில்லை என்று மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் நிலைமை குறித்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோதியுடன் கூடவே , உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் 'பொம்மலாட்ட பொம்மைகள்' போல ஆக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட மத்திய அரசிடம் முறையான திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். "இது ஒரு சாதாரணமான, சூப்பர் ஃப்ளாப் கூட்டம். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம். இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கும் முயற்சி. பிரதமர் மோதி மிகவும் பாதுகாப்பற்றவராக உணர்வதால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை."என்று மமதா பானர்ஜி கூறினார்.
டி.எம்.சி-பாஜக இடையே தேர்தலுக்கு முன்பே சர்ச்சை
திரிணமூல் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது பரஸ்பரம் மோசமான கருத்துக்களை தெரிவித்தனர்.
ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாக ஒருவர் மற்றவர் மீது குற்றம் சாட்டினர். மோதியின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மம்தா குற்றம் சாட்டினார். அதேநேரம் மோதியின் 'தீதி ஓ தீதி' என்ற சொற்பிரயோகம் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் வன்முறை ஏற்பட்டது. ஆளுநரும் பாஜக தலைவர்களும் , திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டினர். அதை திரிணமூல் தொடர்ந்து மறுத்து வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












