கேரள எம்.எல்.ஏ. ராஜா சிறப்புப் பேட்டி: "நான் ஏன் தமிழ் மொழியில் பதவியேற்றேன்?"

பட மூலாதாரம், A.RAJA
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான ஏ. ராஜா, தனது தாய்மொழியான தமிழ்மொழியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஏ. ராஜா ஆகிய நான்…
கேரளாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த நிலையில், கேரளாவின் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுடன் இன்று (மே 24, திங்கட்கிழமை) தொடங்கியது.
அப்போது நடந்து முடிந்த தேர்தலில், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழரான ராஜாவும் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,848 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, இன்று நடைபெற்ற நடப்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பதவியேற்ற ராஜா தமிழ் மொழியில் பதவியேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
"ஏ. ராஜா ஆகிய நான் சட்டமன்ற பேரவையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், சட்டப்படி அமலில் உள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்திடம் நான் உண்மையான விசுவாசமும் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் பொறுப்பேற்க இருக்கிற கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி கூறி அவர் பதவியேற்று கொண்டார்.
இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், அவற்றை பதிவு செய்த பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சு. வெங்கடேசன்,"கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
"என் தாய்மொழியில் பதவியேற்றது பெருமையே!"
கேரள சட்டப்பேரவையில் தமிழ் மொழியில் பதவியேற்றது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஏ. ராஜா, "திருப்பூர் - தேனி ஆகிய தமிழ்நாட்டின் மாவட்டங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் மற்றும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்ற தேவிகுளம் தொகுதியில் பிறந்து வளர்ந்த நான் என் தாய்மொழியாகிய தமிழ் மொழியில், வேறொரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் பதவியேற்றத்தை பெருமையாக கருதுகிறேன்," என்று கூறினார்.

பட மூலாதாரம், A Raja
தமிழ் மொழியில் பதவியேற்றதற்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்டபோது, "தமிழ் மொழியில் பதவியேற்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட ஆர்வம். அதற்காக கேரள சட்டப்பேரவை செயலாளரிடம் முன்னரே விருப்பம் தெரிவித்து அனுமதியும் பெற்று விட்டேன். இதுமட்டுமின்றி, என் தொகுதியில் மலையாளம் பேசும் மக்களுக்கு ஈடான அளவில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்களும் உள்ளனர். அவர்களின் பிரதிநிதியாக தமிழ் மொழியில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சியே" என்று கூறினார்.
தனது பள்ளிக்கல்வி முதல் சட்டப்படிப்பு வரை முழுவதும் தமிழ் வழியிலேயே ராஜா பயின்றுள்ளார்.
"நான் மட்டுமல்ல, என் பெற்றோரும் தேவிகுளத்தில்தான் பிறந்தனர். எனினும், எங்களது தமிழ் மொழியுடனான பிணைப்பு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக, நான் கேரளாவில் பள்ளிக்கல்வி முழுவதையும் தமிழ்வழியில்தான் படித்து முடித்தேன். இதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரில் சட்டம் பயின்றபோதும் தமிழில்தான் படித்தேன்" என்று பெருமைப்பட கூறுகிறார்.
தேவிகுளம் தொகுதியில் வெற்றி சாத்தியமானதற்கான காரணம் குறித்து பேசிய அவர், "கடந்த ஐந்தாண்டுகாலமாக கேரளாவில் ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்பதை முதலாக கொண்டே எனது தேர்தல் பிரசாரம் அமைந்தது" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், A Raja
தேவிகுளம் தொகுதியின் முக்கிய பிரச்னைகள் குறித்தும் அவற்றை தீர்ப்பதற்கு உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கிய ராஜா, "அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே என் முதன்மையான நோக்கம். ஏற்கனவே, எனது தொகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பல்லாண்டுகால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே பலருக்கும் 5 முதல் 10 சென்ட் நிலம் அரசால் வழங்கப்பட்டதுடன் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டன். மேலும், அவர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நலத்திட்டங்களை விவசாயிகள், பாமர மக்கள் என அனைத்துதரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதும், என் தொகுதிக்கு உட்பட பிரபல சுற்றுலாத்தலமான மூணாறில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு அதை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் என் பதவிக்காலத்தின் இலக்குகளாக இருக்கும்" என்று கூறினார்.
யார் இந்த ராஜா?

பட மூலாதாரம், A.RAJA
தோட்டத் தொழிலாளர்களான அந்தோணி லக்ஷ்மன் - ஈஸ்வரி தம்பதிக்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ராஜா மகனாக பிறந்தார். கேரள சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்து வருகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடுக்கி மாவட்ட பொருளாளராகவும் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 2009 முதல் தேவிகுளம் முன்சிஃப் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜா, 2018 முதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்திய சுதந்திரம் பெற்றதும் அப்போது இருந்த மதராஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது, தமிழர்கள் அதிகம் வசித்து வந்த தேவிகுளம் உள்ளிட்ட சில பகுதிகள் கேரள மாநிலத்தின் எல்லைக்குள் சென்று விட்டன. இன்றளவும் அந்த பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- Super Blood Moon: இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
- மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?
- 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்' - ராகுல் காந்தி
- அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரவேண்டும்: மருத்துவ சங்கம் நோட்டீஸ்
- "இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












