இந்தியாவில் ஒரே நாளில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா, 2,760 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
(இன்று 25.05.2021 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து நான்காவது நாளாக 3 லட்சம் பேருக்கு மேல் பதிவாகி இருக்கிறது. அதே போல கொரோனாவால் பாதிக்கபட்டு இந்தியாவில் ஒரே நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 2,000 பேருக்கு மேல் பதிவாகி இருக்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி பிரசுரமாகி இருக்கிறது.
நேற்று (ஏப்ரல் 24, சனிக்கிழமை) ஒரே நாளில் இந்தியாவில் 3.49 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2,760 பேர் மரணித்து இருப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது உலக அளவில், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் மட்டுமே நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கூட, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 63,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா மற்றும் அமெரிக்கா தவிர வேறு எந்த நாட்டிலும் ஒரே நாளில் 50,000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆக்சிஜன் விநியோகத்தை தடுத்தால் தூக்கு' டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

பட மூலாதாரம், Getty Images
ஆக்சிஜன் விநியோகத்தை யாராவது தடுத்தால் அவரை தூக்கில் போடுவோம் என டெல்லி உயநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. அந்த வகையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ள மகாராஜா ஆக்ராசென் மருத்துவமனை, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது.
தங்களது மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வழக்கை நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "ஆக்சிஜன் சப்ளைக்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தாருங்கள். நாங்கள் அந்த மனிதரை தூக்கில் போடுவோம், யாரையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம்" என ஆவேசமாக கூறினார்கள். உள்ளூர் நிர்வாகத்தின் அத்தகைய அதிகாரிகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்குமாறு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
தேச விரோத சக்திகள் சதி: எச்சரிக்கையாக இருக்க ஆா்எஸ்எஸ் வேண்டுகோள்

பட மூலாதாரம், Getty Images
நாட்டில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலையால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் சதியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், அவா்களின் சதிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஆா்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் "நாட்டில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலையால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் மக்களிடையே எதிர்மறையான எண்ணங்களை விதைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கொரோனா தொற்றால் தற்போது நிலவும் சூழலுக்கு தங்கள் நோ்மறையான நடவடிக்கைகள் மூலம் தீா்வு காண முயற்சிக்கும் மக்கள், தேச விரோத சக்திகளின் சதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமூகத்தில் நோ்மறை மற்றும் நம்பிக்கையான சூழலை பராமரிக்க ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும். தற்போதுள்ள சவால்களுக்கு தீா்வு காண சமூக, மத அமைப்புகள் முன்வர வேண்டும்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் மோசமாக இருந்தாலும், சமூகத்தின் பலமும் அபரிவிதமாக உள்ளது.
மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு உள்ள திறன் குறித்து உலகம் நன்கு அறியும். பொறுமை, சுய ஒழுக்கம், பரஸ்பர ஆதரவு, மன வலிமை மூலம் தற்போதைய சூழலை கடந்து வருவோம் என்கிற நம்பிக்கை உள்ளது" அவர் தெரிவித்துள்ளார்.
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்

பட மூலாதாரம், Getty Images
மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர், அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அம்மன்பேட்டை வெள்ளாளத் தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (80). இவரது மனைவி அம்சவள்ளி (78). கணவன் - மனைவி இருவரும் இணைபிரியாது வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக அம்சவள்ளி கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மாலை உயிரிழந்தார். சோகத்தில் இருந்த அவரது கணவர் திருவேங்கடம் மிகுந்த கவலையுடன் அழுது கொண்டே இருந்தார்.
தந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை என அவரது மகன்கள் பார்த்த போது அவரும் இறந்தது தெரியவந்தது. இந்தத் தம்பதியர் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததைப் போல் இறப்பிலும் இணை பிரியவில்லை. இச்சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு மறும் காஷ்மீரில் இலவசமாக கொரோனா தடுப்பூசி - துணை நிலை ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images
மே 1-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 18 - 45 வயது வரம்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாகவும், அச்செலவை ஜம்மு காஷ்மீர் அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் துணை நிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக இருக்கிறார் மனோஜ் சின்ஹா. OfficeofLGJ&K என்கிற ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 18 - 45 வயதுடையவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மே 1-ம் தேதி முதல் 18 - 45 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவிருப்பது நினைவுகூரத்தக்கது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தேர்தல் பிரசார கூட்டங்கள் காரணமா? #FACTCHECK
- தமிழ்நாடு கொரோனா அலை: ஆக்சிஜன் தேவைப்பட்டால் என்ன செய்வது? ரெம்டிசிவிர் யாருக்கு?
- குண்டு வீசி தொழிலதிபர் படுகொலை, போலீஸ் சுட்டு கூலிப்படையை சேர்ந்தவர் பலி: கோயிலில் சம்பவம்
- இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்?
- ஆக்சிஜன் போதாமல் 26 நோயாளிகள் பலி: டெல்லி, பஞ்சாப் மருத்துவமனைகளில் அவலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












