குண்டு வீசி தொழிலதிபர் படுகொலை, போலீஸ் சுட்டு கூலிப்படையை சேர்ந்தவர் பலி: சென்னை கோயிலில் சம்பவம்

பட மூலாதாரம், Special Arrangement
சென்னை அருகே கோயிலுக்குள் வெடிகுண்டு வீசி தொழிலதிபர் ஒருவர் கொல்லப்பட்டார். போலீசார் திருப்பிச் சுட்டதில் கூலிப்படையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் என்ன நடந்தது?செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் வட்டாரங்களில் இதுபற்றிக் கூறியது: இங்குள்ள கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் திருமாறன். இவருக்கு வயது 50. இவர் அந்தப் பகுதியில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதற்கு முன்னதாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாக, தொழிலில் போட்டி அதிகரித்துள்ளது. இவருடன் தொழில்முறையில் பார்ட்னராக இருந்த ஒருவருடன் நேரடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, 2016 ஆம் ஆண்டில் திருமாறனைக் கொல்வதற்கு முயற்சிகள் நடந்துள்ளன.
`தனது உயிருக்கு எப்போது வேண்டுமானால் ஆபத்து வரலாம்' என்பதை உணர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தார் இவர். இந்நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மனைவி, குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகில் உள்ள செல்வ முத்துக்குமாரசாமி கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றுள்ளார். அப்போது, கோவிலுக்குள் நுழைந்த ஒரு கும்பல் திருமாறன் முகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிதறி ஓடியுள்ளனர்.

பட மூலாதாரம், Special Arrangement
அப்போது, திருமாறனின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர், தனது துப்பாக்கியால் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டார். இதையடுத்து, காஞ்சி சரக டி.ஜ.ஜி சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு எஸ்.பி சுந்தரவதனம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கூலிப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட திருமாறனின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருமண நாளில் கொலை
வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக, மறைமலை நகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் பேசியபோது, `` திருமாறனைக் கொல்வதற்குப் பலமுறை முயற்சிகள் நடந்துள்ளன. இன்று திருமண நாள் என்பதால் மனைவி, குழந்தைகளுடன் கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றுள்ளார். அப்போது பிரசாதம் வாங்கும் நேரத்தில் கூலிப்படையினர் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கூலிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் என்று சந்தேகிக்கப்படுபவரை பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலர் எழிலரசு சுட்டுக் கொன்றுவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் இறந்த நபரின் பெயர் சுரேஷ் (19) என்பதும் அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. திருமாறனுடன் தொழில்முறையில் பார்ட்னராக இருந்த ஒருவரின் மேல் சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது" என்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








