இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தேர்தல் பிரசார கூட்டங்கள் காரணமா? #FACTCHECK

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷ்ருதி மேனன் மற்றும் ஜாக் குட்மேன்
- பதவி, பிபிசி உண்மை கண்டறியும் குழு
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இந்திய சுகாதார அமைப்பு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் கடுமையாக பரவியவதற்கு இந்தியாவின் அரசியல் கட்சிகள் தான் காரணம், அவர்கள் மாநிலத் தேர்தலை முன்னிட்டு மேற்கொண்ட பிரசாரக் கூட்டங்கள் தான் காரணம் என சிலர் குறை கூறுகிறார்கள்.
"இந்தியாவில் அதிகமாக கொரோனா பரவி வருவதற்கும் மதம் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என பாஜகவைச் சேர்ந்த மருத்துவர் விஜய் சோதாய்வாலா பிபிசியிடம் கூறினார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரங்களில் இருந்து மீண்டும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது கடந்த மார்ச் மாதத்தில் வேகம் எடுக்கத் தொடங்கி, தற்போது ஏப்ரல் மாதத்தில், முதல் அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எல்லாம் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல் கட்சிகள், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
தேர்தல் பிரசார பணிகள் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் வரை நடந்து கொண்டிருக்கின்றன.
தேர்தல் பிரசாரங்களால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததா?
சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல், முக கவசம் அணிந்து கொள்ளாமல் மக்கள் கூட்டம், கூட்டமாக தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
தேர்தல் பிரசாரக் குழுக்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட, அப்போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதை காண முடிந்தது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மேற்கு வங்கத்தில் பிரசார கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரித்தது.
பல அரசியல்வாதிகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று கூறி, மேற்கு வங்கத்தில் பிரசார கூட்டங்களை நடத்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் தடை விதித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை காண முடிகிறது.
அதேபோல சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட அசாம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் மார்ச் மாத பிற்பகுதி அல்லது ஏப்ரல் முற்பகுதியில் இருந்து தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் இல்லை. அதே போல, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் விவரங்களும் இல்லை.
மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட மாநிலங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை காண முடிகிறது.
உதாரணமாக மகாராஷ்டிரா, உத்த ரபிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடை பெறவில்லை. இருப்பினும் இம்மாநிலங்களில் ஒரு நாளில் கொரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, குறைந்த கால கட்டத்திற்குள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
எனவே தேர்தல் பிரசார கூட்டங்களுக்கும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் எந்தவித வலுவான ஆதாரங்களும் இதுவரை தரவுகளில் இல்லை.
வெளியே நடைபெறும் கூட்டங்களில் உள்ள ஆபத்துக்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அறைக்குள் நடக்கும் கூட்டத்தை விட, வெளியே நடைபெறும் கூட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து குறைவே என கூறுகிறார்கள் நிபுணர்கள்.
"ஒருவரிடமிருந்து வெளியாகும் கொரோனா வைரஸ் விரைவில் காற்றில் கலக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை" என்கிறார் வார்விக் மருத்துவ பள்ளியின் பேராசிரியர் லாரன்ஸ் யங்.
அரசியல் பிரசாரம் போன்ற மக்கள் கூட்டங்களில் கொரோனா பரவுவதற்கு வேறு சில காரணிகளால் அதிக வாய்ப்பு இருக்கின்றன.
மக்கள் நெருக்கமான இடங்களில் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியின்றி, நல்ல காற்றோட்டமின்றி நெருக்கமாக இருந்தால், கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
"தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கெடுக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக சிறிய இடத்தில் நெருக்கமாக இருக்க வேண்டி இருக்கும். அப்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் பேராசிரியர் லாரன்ஸ் யங்.
வெளியே கூடும் மக்கள் கூட்டத்தில் கொரோனா பரவுவதற்கான அபாயம் குறைவு என்றாலும், ஒருவருக்கொருவர் நெருக்கமாக, நேருக்கு நேராக ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளி உடன் இருப்பது, கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என ப்ரிஸ்டோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜானதன் ரெய்த் கூறுகிறார்.
எண்ணிக்கை அதிகரிப்பதற்கு புதிய திரிபு காரணமா?
கடந்த ஆண்டின் கடைசி காலகட்டத்தில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
தற்போதைய இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா திரிபு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள், ஆனால் அதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.
போதுமான தரவுகள் இல்லாததால், இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை இந்திய திரிபை 'ஆபத்தான திரிபு' பட்டியலில் சேர்க்கவில்லை. பிரிட்டன் திரிபு, பிரேசில் திரிபு, தென் ஆப்பிரிக்க திரிபு போன்றவை இப்பட்டியலில் இருக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முதல் வட இந்தியாவில் மிகப்பெரிய மதம் சார்ந்த திருவிழாவான கும்பமேளா நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பமேளா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்டார்கள். அத்திருவிழாவில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படவில்லை.
கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மட்டுமே கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 1,600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறையால் கலகலக்கும் இந்திய மருத்துவமனைகள் - என்ன நடக்கிறது?
- 48 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்தவர் டெல்லியில் கைது
- கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?
- கொரோனாவின் இந்திய திரிபு என்றால் என்ன? ஆபத்தும், பரவும் வேகமும் அதிகமா?
- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: டிராபிஃக் ராமசாமி எப்படி இருக்கிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













