கொரோனா வைரஸின் இந்திய திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் பலனளிக்குமா? இந்திய திரிபு மற்ற திரிபுகளை விட அதிவேகமாக பரவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிபைக் குறித்து உலகம் முழுக்க பரவியுள்ள அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் அந்தத் திரிபு எவ்வளவு பரவி இருக்கிறது என்கிற விவரமோ, அத்திரிபுதான் இந்தியாவில் இரண்டாம் அலையை முன்னெடுத்து வருகிறதா என்கிற விவரங்களோ தெரியவில்லை.
இந்திய திரிபு என்றால் என்ன?
கொரோனா வைரஸ் காலப் போக்கில் தன்னைத் தானே மரபணு ரீதியாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. அதை ஆங்கிலத்தில் மியூட்டேஷன் என்கிறோம். இப்படி மாற்றமடையும் வைரஸ்களை, திரிபுகள் (வேரியன்ட்) என்கிறோம்.
வைரஸில் காணப்படும் பல மாற்றங்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. சில மாற்றங்கள் வைரஸை பலவீனப்படுத்தும், சில மாற்றங்கள் வைரஸை அதிக ஆபத்தானதாக்கும். அதிவேகமாக பரவக் கூடியதாகவும், தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படக் கூடியதாக்கும்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸின் திரிபை B1617 என்கிறார்கள். இந்த திரிபு கடந்த அக்டோபர் 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வளவு பரவி இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
B1617 கொரோனா திரிபு இந்தியாவில் எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது, எத்தனை விரைவாக பரவி இருக்கிறது என பெரிய அளவில் மாதிரிகள் பரிசோதிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள், மாகாராஷ்டிர மாநிலத்தில் பரிசோதித்த 361 மாதிரிகளில் 220 மாதிரிகள் இந்த B1617 திரிபு என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதே காலகட்டத்தில் இந்த B1617 கொரோனா திரிபு 21 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக 'குளோபல் இன்ஃப்லுயன்ஸா சர்வைலன்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்' (GISAID) என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல், பிரிட்டன் நாட்டில் 103 பேர் இந்த B1617 திரிபால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் திறந்துவிடப்பட்ட பயணங்களால் இந்த திரிபு பரவி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தற்போது பெரும்பாலான இந்தியர்கள், பிரிட்டன் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு, இந்தியாவின் கொரோனா திரிபை 'ஆய்வில் இருக்கும் திரிபுகளில் ஒன்று' என வகைப்படுத்தி இருக்கிறது. இந்திய திரிபை 'ஆபத்தான திரிபு' என இதுவரை வகைப்படுத்தவில்லை.

- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
- கொரோனா இரண்டாவது அலை: நோயாளிகள் உடலில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் என்ன சிகிச்சை?

இந்த திரிபு ஆபத்தானதா?
இந்திய திரிபு ஆபத்தானதா அல்லது எளிதில் பரவக் கூடியதா, கொரோனா தடுப்பூசிகளை எதிர்கொள்ளக் கூடியதா என அறிவியலாளர்களுக்கு எதுவும் இதுவரை பிடிபடவில்லை.
தென் ஆப்பிரிக்க திரிபு மற்றும் பிரேசில் திரிபில் காணப்படும் மியுட்டேஷன்களில் ஒன்று, இந்திய திரிபோடு ஒத்துப் போகிறது என லூசியானா மாகாண பல்கலைக்கழகத்தில் வைராலஜிஸ்டாக இருக்கும் மருத்துவர் ஜெரிமி கமில் கூறுகிறார்.
இந்திய திரிபு வைரஸில் காணப்படும் இந்த மியூட்டேஷன், மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆன்டிபாடிகளை எதிர்கொள்ள உதவும். பொதுவாக ஆன்டிபாடிக்கள் எனப்படும் எதிர்ப்பான்கள் தான் இதற்கு முன் ஏற்பட்ட தொற்று அல்லது கொரோனா தடுப்பூசி மூலம் கிடைத்த தன் முந்தைய அனுபவத்தை வைத்து கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆன்டிபாடிக்களையே இந்த மியூட்டேஷன் எதிர்கொள்ளும் என்பதுதான் கவலைக்குரியது.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிபு, பிரிட்டனில் அதிகம் காணப்படுகிறது. அதோடு சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.
இப்போது நம்மை எல்லாம் கவலையில் ஆழ்த்தும் விஷயம் என்னவெனில் இந்திய கொரோனா வைரஸ் திரிபு, பிரிட்டன் திரிபை விட அதிவேகமாக பரவக் கூடியாதா என்கிற கேள்விதான்.
"இந்திய திரிபு, பிரிட்டன் திரிபை விட அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்குமா என நான் சந்தேகிக்கிறேன். நாம் பயப்படக் கூடாது" என்கிறார் மருத்துவர் கமில்.
ஏன் இந்திய திரிபு குறித்த தகவல்கள் குறைவாக இருக்கின்றன?
கொரோனா வைரஸின் இந்திய திரிபு குறித்த தரவுகள் முழுமையாக இல்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்திய அளவில் வெறும் 298 மாதிரிகளும், உலக அளவில் 656 மாதிரிகள் மட்டுமே பகிரப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வைரஸின் பிரிட்டன் திரிபை எடுத்துக் கொண்டால் 3.84 லட்சம் மாதிரிகள் பகிரப்பட்டுள்ளன என்கிறார்கள்.
கொரோனா வைரஸின் இந்திய திரிபு, இந்தியாவில் முதல் முறையாகப் பரவத் தொடங்கிய போது, உலகம் முழுக்க 400 பேருக்கும் குறைவானவர்களே அத்திரிபால் பாதிக்கப்பட்டார்கள் என்கிறார் மருத்துவர் கமில்.
இந்த திரிபுதான் இந்தியாவில் இரண்டாம் அலையை முன்னெடுத்து வருகிறதா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது கடந்த ஆண்டின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சமான 93,000-த்தை விடவும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கையும் இதே நிலை தான்.
"இந்தியாவில் இருக்கும் அதிக மக்கள் தொகை மற்றும் நெருக்கமாக மக்கள் வாழ்வது போன்ற விஷயங்கள், கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பல்வேறு மாற்றத்துடன் (மியூட்டேஷனுடன்) வளர மிகச் சரியான சூழலாக அமைந்திருக்கிறது" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் க்ளினிகல் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியர் ராஜிவ் குப்தா.
இருப்பினும், இந்தியாவில் இத்தனை அதிகமாக கொரோனா பரவுவதற்கு மக்கள் கூட்டமாகக் கூடியது, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதது போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.
புதிய இந்திய திரிபில் cause-and-effect relationship (காரணம் மற்றும் பின்விளைவு தொடர்பு) இருக்கலாம். ஆனால் போதுமான ஆதாரம் இல்லை என்கிறார் வெல்கம் சாங்கெர் இன்ஸ்டிட்யூட்டின் மருத்துவர் ஜெஃப்ரே பரெட்.
கொரோனா வைரஸின் இந்திய திரிபு கடந்த ஆண்டின் கடைசி மாதங்களிலேயே பரவத் தொடங்கி இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். "கொரோனா வைரஸின் இந்திய திரிபு தான் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை முன்னெடுத்து வருகிறது என்றால், இந்த நிலையை அடைய சில மாத காலம் ஆகி இருக்கும். ஆக, இந்த திரிபு, கொரோனா வைரஸின் கென்ட் 117 திரிபை விட குறைந்த அளவிலேயே பரவக் கூடியது என்பதைக் காட்டுவதாக அமைகிறது" என்கிறார்.
தடுப்பூசிகள் இப்போது பலனளிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸின் திரிபுகளைக் கட்டுபடுத்தவும், நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்கவும் கொரோனா தடுப்பூசிகள் உதவும் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.
"கொரோனா வைரசின் சில திரிபுகள், தற்போது இருக்கும் கொரோனா தடுப்பூசிகளிலிந்து தப்பித்துவிடும்" என நேச்சர் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், பேராசிரியர் குப்தா மற்றும் அவரோடு ஆராய்ச்சியில் ஈடுபட்ட சக ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
எனவே புதிய திரிபை எதிர்கொள்ள, தடுப்பூசிகளின் செயல்திறனை மேம்படுத்த, அதற்குத் தகுந்த மாற்றங்கள் தேவை.
தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகள், வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
"மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருப்பதற்கும், கொரோனாவால் பாதிக்கப்பட அல்லது முழுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதற்குமான வித்தியாசத்தை இந்த தடுப்பூசிகள் பல மக்களுக்கு உருவாக்கும்" என்கிறார் மருத்துவர் கமில்.
"தயவு செய்து உங்களுக்கான முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். மிகச் சிறந்த கொரோனா தடுப்பூசி வரும் வரை காத்திருப்பது அல்லது இருக்கும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டும் தவறை செய்யாதீர்கள்" எனவும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- ரூ. 12,110 கோடி கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பால் பாதகமா? செல்லூர் ராஜு சொல்வது என்ன?
- 'தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்' - ஸ்பெயின் அதிர்ச்சி
- ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை: ரஜினிகாந்த்
- டெல்லி கொரோனா: காலியான ஆக்சிஜன் - ஆபத்தான கட்டத்தில் நோயாளிகள் - கதறி அழும் மருத்துவர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












