ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை: ஒருநபர் ஆணையத்தில் ரஜினி தகவல்

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

(இன்று 23.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த், ஒருநபர் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோரிடம், 26 கட்டங்களாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

27-வதுகட்ட விசாரணை தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 19-ம்தேதி முதல் நடைபெற்றது. இதுகுறித்து, ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியதாவது:

"நடிகர் ரஜினிகாந்துக்கு, ஆணையம் சார்பில் கேள்விகள் எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டன. அவற்றுக்கான பதிலை ரஜினிகாந்த் சமர்ப்பித்துள்ளார். அதில், தூத்துக்குடியில் அன்றைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, திட்டமிட்ட சந்திப்பு அல்ல. அது எதிர்பாராத, தற்செயலாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. எனவே, அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் திட்டமிட்டு எதுவும் சொல்லவில்லை. தூத்துக்குடியில் ஊர்வலம் தொடர்பாக எந்த ஆவணங்களோ, ஆதாரங்களோ, பத்திரிகை மற்றும் ஊடக பதிவுகளோ தன்னிடம் இல்லை என்று ரஜினி கூறியுள்ளார்.

இருப்பினும் சில விளக்கங்களை அவரிடம் கேட்க வேண்டியுள்ளது. கொரோனா நிலைமை சீரானதும், ஆணையத்தின் சில சந்தேகங்களையும், அவர் அளித்த பதில்கள் தொடர்பாக சில விளக்கங்களையும் ரஜினியிடம் கேட்கவுள்ளோம்" என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொரோனா நோயாளிகள் உயிரை காப்பாற்ற மத்திய அரசின் காலில் விழத் தயார்; மராட்டிய சுகாதார அமைச்சர் உருக்கம்

ராஜேஷ் தோபே, மகாராஷ்டிர சுகாதார அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசின் காலில் விழத் தயார் என மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்து வருகிறது. தற்போது சுமார் 7 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் மகாராஷ்டிர அரசு திணறி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சமீபத்தில் மும்பை அருகே உள்ள நாலச்சோப்ராவில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால் நேற்று முன்தினம் நாசிக் அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகளின் உயிர் ஊசலாடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசுக்கு மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:

"நோயாளிகளின் உயிரைக் காக்க மகாராஷ்டிர அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த தருணத்தில் நாங்கள் மத்திய அரசுக்கு மிகவும் தாழ்மையான முறையில் வேண்டுகோள் விடுக்கிறோம். மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழக்கூட மராட்டியம் தயாராக உள்ளது.

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோக உரிமை மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே மராட்டியத்திற்கு போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் எனது கோரிக்கையை முன்வைக்கிறேன். ஆக்சிஜன் எடுத்து வரும் டேங்கர் லாரிகள் விரைவாக செல்ல தனி வழித்தடத்துக்கும் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்" என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் இறந்த தாயின் உடல் இருந்த ஆம்புலன்சை கட்டிப்பிடித்து அழுத போலீஸ்காரர்

ஆம்புலன்ஸ் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

பெங்களூருவில் கொரோனாவால் இறந்த தன் தாயின் உடல் இருந்த ஆம்புலன்சை, காவல் துறை அதிகாரி ஒருவர் கட்டிப்பிடித்து அழுததாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

பெங்களூரு அல்சூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 58). இவரது மகன் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில கடந்த 10 நாட்களுக்கு முன்பு லட்சுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் அவரை மருத்துவமனையில் சேர்க்க குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் படுக்கை வசதி, ஆக்சிஜன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை காரணம் காட்டி லட்சுமிக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மறுத்து விட்டன.

இறுதியாக லட்சுமி, விஜயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு ஒருநாள் மருத்துவ செலவாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. லட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமி இறந்தார். அவரது உடல் சும்மனஹள்ளியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.

விவரமறிந்த லட்சுமியின் மகனான போலீஸ்காரர், போலீஸ் சீருடையில் சும்மனஹள்ளியில் உள்ள மின்மயானத்திற்கு வந்தார். பின்னர் ஆம்புலன்சுக்குள் வைக்கப்பட்டு இருந்த தாயின் உடலை வெளியே நின்று அவர் பார்த்து கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென தாயின் உடல் இருந்த ஆம்புலன்சை கட்டிப்பிடித்து அவர் அழுதார். அவரை குடும்பத்தினர் சமாதானம் கூறி தேற்றினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: