தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி - எப்போது கிடைக்கும்?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கான தற்காலிக உரிமம் உடனடியாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பதாகவும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் தயாரிக்க முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

மேலும், தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 18 சதவீதம் பேருக்கும் 45 வயது முதல் 59 வயதுவரை உள்ளவர்களில் 13 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், இனி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளதால் தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து தடுப்பூசிகளை வழங்க ஊக்குவிக்கப்படும்.

இருந்தபோதும், 18 வயது முதல் 45 வயது வரையுள்ள கட்டடத் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை இலவசமாக வழங்க, மே 1ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

நோய்த் தொற்று உடையவர்களை கண்டறிந்து சோதிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள மாநில அரசு, நோய்த் தொற்று சதவீதத்தை 10 சதவீதத்திற்கு கீழே குறைக்க உத்தேசித்துள்ளது.

நோய் பரவும் தீவிரத்திற்கு ஏற்ப மருத்துவக் கட்டமைப்பு வசதியையும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளையும் உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி, ஏற்கெனவே நோய் ஏற்பட்டவர்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் மூலம் சமூகத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை (Herd immunity) 60 சதவீதம் என்ற அளவுக்கு அடைவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்துவதே மாநில அரசின் இலக்கு என தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: