சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் கோவிட் தொற்றால் மரணம்

பட மூலாதாரம், Social Media
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கோவிட் வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது மரணத்தை சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் தெரிவித்தார்.
35 வயதாகும் ஆஷிஷ் ஒரு பத்திரிகையாளர். சென்னை ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் இதழியல் பயின்றவர்.
ஆஷிஷ் மரணத்தை அறிவித்த யெச்சூரி, "எங்களுக்கு நம்பிக்கை தந்தவர்கள், ஆஷிஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் எங்களோடு நின்ற எண்ணற்ற யாவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அவர், டெல்லி அடுத்த குர்காவ்ன் மருத்துவமனை ஒன்றில் இறந்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஆஷிஷ் முதலில் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், பிறகு குர்காவ்ன் மேடாண்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஷிஷ் இரண்டு வாரங்களாக கோவிட் தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
பிரதமர் இரங்கல்
ஆஷிஷ் மரணம் பலரையும் கலங்க வைத்துள்ளது. பல்லாயிரம் பேர் சமூக ஊடகங்களில் சீதாரம் யெச்சூரிக்கு ஆறுதல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோதி, கேரள முதல்வர் பிரனராயி விஜயன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கட்சி எல்லைகளைக் கடந்து சீதாராம் யெச்சூரிக்கு ஆறுதல் தெரிவித்துள்ள சிலர்.
'இந்த துயரத்தில் தனித்து இல்லை'
நண்பகல் வாக்கில் தமது மகனுக்கு விடை கொடுத்ததாக மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சீதாராம் யெச்சூரி. இந்த இருண்ட காலத்தில் தங்களுக்கு தைரியம் தருகிறவர்களுக்கு, ஆறுதல் சொல்கிறவர்களுக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த உலகத் தொற்று எண்ணற்ற உயிர்களை விழுங்கிக்கொண்டிருக்கும்போது இந்த துயரத்தில் தான் மட்டும் தனித்து இல்லை என்று தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- "பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்" - ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்
- இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
- "எனக்கு சீட் தராததும் நல்லது தான்" - கமீலா நாசரின் மனம் திறந்த பேட்டி
- மோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












