கமீலா நாசரின் மனம் திறந்த பேட்டி: "எனக்கு சீட் தராததும் நல்லது தான்"

கமீலா நாசர்

பட மூலாதாரம், KAMEELA NAZER

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து கமீலா நாசர் விலகியுள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதற்கு காரணம், சட்டமன்ற தேர்தலை பிரதான ஒன்றாக ம.நீ.ம நிர்வாகிகள் முன்வைக்கின்றனர். என்ன நடந்தது?

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார்.

`தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்று' என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 14 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து 3.72 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் ம.நீ.ம சார்பாக மத்திய சென்னையில் நடிகர் நாசரின் மனைவி கமீலா களமிறங்கினார்.

அந்தத் தேர்தலில் 92,000 வாக்குகளை அவர் பெற்றார். ம.நீ.ம தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பரபரப்பாக இயங்கி வந்த கமீலா, தற்போது கட்சியில் இருந்து விலகி விட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ` நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களாக தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்

பட மூலாதாரம், Makkal Neethi Maiyam

என்ன நடந்தது?

`` ம.நீ.மவில் இணைந்த காலத்தில் இருந்தே கட்சிக்குள் தனக்கென ஓர் ஆதரவு வளையத்தை கமீலா பெற்றிருந்தார். எந்தத் தகவலாக இருந்தாலும் தலைவரிடம் நேரடியாகத் தெரிவிப்பது அவரின் வழக்கம்.

ஆனால், அண்மைக்காலமாக கமலின் கையை மீறி சில விஷயங்கள் நடப்பதாக அவர் உணர்ந்தார். உதாரணமாக, சென்னை மண்டலத்துக்கு பொறுப்பாளராக இருப்பதால் சட்டமன்றத் தேர்தலில் தான் விரும்பிய தொகுதியை ஒதுக்குவார்கள் என நினைத்தார்.

அதற்கேற்ப, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு மனு கொடுத்திருந்தார். கட்சியின் புரோட்டோகால்படி பார்த்தாலும் கமீலாவுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அந்தத் தொகுதி சிநேகனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட சிநேகனுக்கு ஏன் இந்தமுறை கமீலா விரும்பிய தொகுதி ஒதுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கமீலா, தேர்தல் பணிகளையும் சரிவர ஆர்வம் காட்டவில்லை. முடிவில், தனது விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்" என்கின்றனர் ம.நீ.ம நிர்வாகிகள் சிலர்.

இது தொடர்பாக, ம.நீ.ம பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் அவர் விலகும் முடிவை எடுத்துள்ளார். வேறு எந்தக் காரணங்களும் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.

`ஏன் இப்படியொரு திடீர் முடிவு?' என கமீலா நாசரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

`` என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் விலகுகிறேன். எனக்கு வீட்டில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. கட்சி தொடங்கியபோது வேலைப்பளு குறைவாக இருந்தது. இப்போது வேலை அதிகமாகிவிட்டதால் கட்சியையும் வீட்டையும் சரியாகக் கையாள முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தேன். இதுதொடர்பாக முன்னரே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். இப்போதுதான் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அந்த நேரத்தில் விலகினால் கேள்வி வரும் என்பதால் அறிவிக்கவில்லை. கொரோனா பரவல் இருந்ததால், தேர்தல் வேலைகளையும் நான் செய்யவில்லை. இப்போதுதான் அவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்."

நாசர்

பட மூலாதாரம், Kameela Nazer

ம.நீ.மவில் உள்ள சிலரின் செயல்பாடுகளால்தான் நீங்கள் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்களே?

`` அப்படியெல்லாம் இல்லை. எதுவாக இருந்தாலும் தலைவரிடம் என்னால் நேரில் கேட்க முடியும். குடும்பத்துக்காகத்தான் நான் வெளியில் வருகிறேன். இல்லாவிட்டால், 24 மணிநேரத்தையும் கட்சிப் பணிக்காகவே செலவிட்டிருப்பேன். அதற்காக மக்கள் பணியை நான் நிறுத்தவில்லை. வேறு வழிகளில் செயல்படுவேன்."

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நீங்கள் விரும்பிய தொகுதி கிடைக்காததும் ஒரு காரணம் என்கிறார்களே?

``நான் மாநில செயலாளராக இருக்கிறேன். தேர்தலில் போட்டியிட அனைத்து நிர்வாகிகளும் மனு கொடுக்க வேண்டும். நானும் கொடுத்தேன். எனக்குத் தொகுதியை ஒதுக்கியிருந்தால் நான் தேர்தல் வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும். அதைக் கொடுக்காமல் இருந்ததும் ஒருவகையில் நல்லதுதான். என்னுடைய குடும்பத்தைப் பற்றி தலைவருக்கு நன்றாகத் தெரியும். வேறு ஒருவருக்கு கொடுத்ததால் அதிருப்தி என்பதெல்லாம் தவறான தகவல். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பது தலைவர் எடுக்கக்கூடிய முடிவு."

அரசியலுக்கு நீங்கள் புதியவர். சில காலம் இயங்கினாலும் எப்படி உணர்கிறீர்கள்?

``என்னுடைய வாழ்க்கைப் பொக்கிஷமாகவே அதைப் பார்க்கிறேன். என் மேல் அன்பு செலுத்தக் கூடிய ஏராளமானோர் கிடைத்தனர். வேறு எந்தத் துறையில் இருந்திருந்தாலும் இப்படியொரு அனுபவம் கிடைத்திருக்காது. கட்சியில் இருக்கிறேனோ இல்லையோ, அவர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பேன். என்னுடைய முடிவுக்காக அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் வேலைகளைச் செய்வேன். மீண்டும் அரசியலுக்குள் வருவேனா என்பதை காலம் முடிவு செய்யும்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: