கொரோனா தடுப்பூசிய போட்டுக்கொண்டவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று தெரியுமா? ஐசிஎம்ஆர் தகவல்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 22.04.2021 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.)
கொரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நாட்டில் 13 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
எவ்வளவு பேருக்கு இப்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தினத்தந்தியில் வெளியான செய்தி:
ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் இது பற்றிய தரவுகளை வெளியிட்டார்.
"கோவேக்சின் தடுப்பூசி இதுவரை 1.1 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேருக்கு முதல் டோசாக செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4,208 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல், 17,37,178 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் 698 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸ் 10,03,02,745 (சுமார் 10 கோடி பேர்) பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் 17,145 (0.02%) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 1,57,32,754 பேர் செலுத்திக் கொண்டனர். இவர்களில் 5,014 (0.03%) பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது மிகவும் குறைவான அளவுதான். யாரும் கவலைப்பட தேவையில்லை" என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது கடைசி 'குட் மார்னிங்' ஆக இருக்கலாம் - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மருத்துவர் உயிரிழந்தார்

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் காசநோய் சிகிச்சை நிபுணர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும், அவர் இறப்பதற்கு முன் தன் முகநூலில் கடைசியாக பதிவிட்ட சில விஷயங்களையும் குறிப்பிட்டு செய்தி பிரசுரித்திருக்கிறது இந்து தமிழ் திசை.
மும்பை ஷிவ்ரி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மனீஷா ஜாதவ் (51) கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது முகநூல் பதிவில், தான் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் "இதுவே எனது கடைசி 'குட் மார்னிங்' ஆக இருக்கலாம்" என பதிவிட்டர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில் பல்வேறு மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் சிலர் தங்கள் அனுபவங்கள் மற்றும் கவலைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். மும்பையைச் சேர்ந்த திருப்தி கிளாடா என்ற மருத்துவர் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வைரலானது.
"நாங்கள் உதவியற்றவர்களாக உள்ளோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. மக்கள் பீதியடைகிறார்கள். நான் மனம் உடைந்துள்ளேன். எனது கவலைகளை உங்களிடம் சொல்வதால், நீங்கள் நிலைமையை புரிந்துகொள்ள உதவினேன் என்ற முறையில் நான் மனம் அமைதி அடைவேன்" என்று அவர் கண்ணீர் மல்க கூறியிருந்தார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
70 கோடி ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள்: 6 இந்திய நிறுவனங்கள் தயாரிப்பு

பட மூலாதாரம், Getty Images
ஆண்டுதோறும் 70 கோடி ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறை செயலா் ரேணு ஸ்வருப் புதன்கிழமை கூறியது:
"தற்போது 3 கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர பாரத் பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து, ஸைடஸ் கெடிலா, பயோஇ, ஜெனோவா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
அவற்றை உருவாக்கும் ஆரம்பகட்டப் பணிகளின் போது அந்த நிறுவனங்களுக்கு மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கியது. அந்தத் தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளுக்கு சுமார் ரூ.400 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.
அந்தத் தடுப்பூசிகளை மாதந்தோறும் 1.5 கோடி முதல் 2 கோடி அளவில் தயாரிக்கும் விதமாக ஏற்கெனவே உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அந்தத் தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.
ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசியை ஆண்டுதோறும் 70 கோடி அளவில் 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன" என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- உயிர் காக்கும் ஆக்சிஜன் எப்படி உற்பத்தியாகிறது, விலை என்ன?
- "பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்" - ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்
- இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
- "எனக்கு சீட் தராததும் நல்லது தான்" - கமீலா நாசரின் மனம் திறந்த பேட்டி
- மோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












