ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது?

ஊழல்

பட மூலாதாரம், TWITTER

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பட்டு நெசவுக்குப் பெயர் போன காஞ்சியில் ஊழல் காரணமாக கைத்தறி சொசைட்டியின் நிர்வாகக் குழுவே கலைக்கப்பட்ட சம்பவம், ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

அந்த 5 பேர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 22 கைத்தறி சொசைட்டிகளில் மிகவும் பழைமையான சங்கமாக முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. 1957 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தச் சங்கத்தில் 3,599 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தச் சங்கத்துக்கு 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், ஆளும்கட்சியைச் சேர்ந்த 7 பேர் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கூட்டுறவுத் துறையின் தணிக்கைத் துறை நடத்திய ஆய்வில் 2017-18 ஆம் ஆண்டில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, போலி பில்களாலும் நிர்வாகச் சீர்கேட்டினாலும் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் சொசைட்டியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

கூண்டோடு கலைப்பு

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் துணை இயக்குநர் கணேசன், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு தகவல்களும், `இப்படியெல்லாம் ஊழல் செய்ய முடியுமா?' என அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது. அந்த அறிக்கையில், ` 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 36 (1)ன்படி நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தகுதியின்மை மற்றும் நீக்குதலுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை காஞ்சிபுரம் சரக கட்டுப்பாட்டில் ஜி 1653 காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கடந்த 2016-17 ஆம் ஆண்டு வரையில் லாபத்தில் இயங்கி வந்துள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் கூட்டுறவு சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு நிர்வாகம் செய்யத் தவறியதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து கூடுதல் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டு விட்டு, முறைகேடு தொடர்பான தகவல்களையும் பட்டியலிட்டுள்ளனர்.

போலி பில்கள், வவுச்சர்கள்

ஊழல்

பட மூலாதாரம், Govt of Tamil Nadu

அதில், ` 1.4.2017 முதல் 26.6.2018 வரையில் வாகன வாடகைக்கு வழங்கியதாக முறையான ஆவணங்கள் இல்லாமல், வவுச்சர்கள் இல்லாமல் ரூ.4,54,338 செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் முறையான கொள்முதல் பற்றுச்சீட்டு இல்லாமல் உபசரிப்பு மற்றும் விளம்பரத்துக்காக ரூ.3,55,246 செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் 3,34,644 ரூபாய்க்கு போலியான பில்கள் மற்றும் வவுச்சர்கள் மூலம் நிதி முறைகேடு நடப்பதற்கு காரணமாக இருந்த சங்கத்தின் முன்னாள் மேலாளர் முருகானந்தத்திடம் கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 87ன்படி தண்ட நடவடிக்கை மூலம் வசூல் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சங்கத்துக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அன்பளிப்பு பொருள் அளித்தல், பூ அலங்காரம், இதர செலவினங்களுக்கான பிரசாதப் பைகள் தயாரித்ததாகக் கூறி ரூபாய் 18,87,345 செலவிடப்பட்டது. இதற்காக எந்த பில்களும் இல்லாமல் 47 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை விடுவித்த நிர்வாக இயக்குநர் மோகன்குமாரிடம் இருந்து தண்ட நடவடிக்கை மூலம் வசூல் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் கூடுதல் பணியாளர் வேலைக்கு மனிதவள முகமை நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் செய்ததாகவும் கூலி வழங்கியதாகவும் கூறி நாள்வழி பதிவேட்டில் கணக்கு மட்டும் எழுதப்பட்டு ரூ.3,51,485 செலவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செலவுகளில் 2 கோடியே 82 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு கூட்டுறவு தணிக்கைத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தகவலே இல்லாத புதுக்கணக்கு

ஊழல்

பட மூலாதாரம், Govt of Tamil Nadu

இதில், நிர்வாக அனுமதியின்றி வாடகை முன்பணம் மற்றும் உள் அலங்காரப் பணிகளுக்கு ரூ.33,03,214 வழங்கப்பட்டுள்ளது.

செலவுச் சீட்டு இல்லாமல் நாளேட்டில் மட்டும் எழுதப்பட்ட கணக்குகள், எதற்காக கார் பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இல்லாமல் செலவிடப்பட்ட 4,41,938 ரூபாய், எதற்காக செலவிடப்பட்டது என்ற விவரமே இல்லாத 24,28,662 ரூபாய்,

முறையற்ற விளம்பர செலவுகளுக்கான 57,37,000 ரூபாய் என முறைகேட்டுக்கான கணக்கு வழக்குகள் நீளுகின்றன. இதன் மொத்த இழப்புத் தொகை ரூ.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கூட்டுறவு தணிக்கைத் துறையின் அறிக்கை மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அதிகாரிகள் நடத்திய விசாரணை அறிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு தலைவர் வள்ளிநாயகம், துணைத் தலைவர் ஜெயந்தி மற்றும் 3 நிர்வாகக் குழு உறுப்பினர்களை (கீதா, கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன்) பதவியிலிருந்து நிரந்தரமாக தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

`இவர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்கத்திலும் பதவி வகிக்கத் தகுதியற்றவர்கள்' என்ற வாசகமும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தம்

ஊழல்

பட மூலாதாரம், Getty Images

காஞ்சி கைத்தறி சொசைட்டி ஊழல் குறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இணை இயக்குநர் தமிழரசியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அரசு ஊழியராக இருப்பதால், இதைப் பற்றி என்னால் பேச முடியாது' என்றார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய கைத்தறித் துறையின் உயர் அதிகாரி ஒருவர், ``கைத்தறித் துறையின் அதிகாரிகளும் சங்கத்தின் உறுப்பினர்களும் கூட்டுறவு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இயங்க வேண்டும். அவ்வாறு விதிகளுக்குட்பட்டு செயல்படாததால் முருகன் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் நலிந்து போய்விட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆறு பெரிய சொசைட்டிகளில் இதுவும் ஒன்று. கடந்த 2017-18 ஆம் ஆண்டு வரையில் 5 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது," என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `அனைத்து சொசைட்டிகளிலும் தவறுகள் நடப்பது இயல்புதான். இங்கு சற்று அதிகப்படியாகவே நடந்துவிட்டது. சொசைட்டியின் நிர்வாகப் பொறுப்புகளில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்த்து அதிகாரிகளும் சரியான முறையில் இயங்க முடிவதில்லை. ஆளும்கட்சியின் அழுத்தங்களும் இருக்கின்றன. இதன் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வருகிறவர்களும் சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான்.

300 ரூபாய்தான் சிட்டிங் கட்டணம்

அங்கு அரசு சார்பில் ஒரே ஒரு நிர்வாக இயக்குநர் இருப்பார். அவர் தினசரி அன்றாட அலுவல்களை கவனிப்பார். இதில் முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகக் குழுவுக்கு உள்ளது. நிர்வாக இயக்குநரும் சங்கத்தின் தலைவரும் இணைந்துதான் கையொப்பமிட வேண்டும். இதில் ஏதேனும் தவறு நடந்தால் அறிவுறுத்தலாம். காஞ்சி சொசைட்டியில் நிர்வாக இயக்குநராக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது முருகன் சொசைட்டியில் இருந்த மொத்த நிர்வாகக் குழுவும் கூண்டோடு கலைக்கப்பட்டுவிட்டது" என்றார்.

` முறைகேட்டில் ஈடுபட்டது உண்மையா?' என காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் வள்ளிநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நிர்வாகக் குழுவைக் கலைப்பதாகக் கூறி அவர்கள் பேப்பரை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் தெரிவிக்கும் காரணத்தில் உடன்பாடு இல்லாததால் அந்தப் பேப்பரை நாங்கள் வாங்கவில்லை. ஆனால், இரண்டொரு நாள்களில் அந்தப் பேப்பரை வாங்கத்தான் போகிறோம். அவர்கள் சொல்லும் காரணத்தில், `நிர்வாகத்தை சரிவர நாங்கள் கவனிக்கவில்லை' என்கிறார்கள்.

நிர்வாகக் குழுவை கவனிக்க வேண்டிய பொறுப்பு, ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் எம்.டிக்கும் 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஆடிட்டருக்கும் 4 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கோ இல்லை. ஆனால், 300 ரூபாய் சிட்டிங் கட்டணம் வாங்கும் எங்களை மட்டும் எப்படிப் பொறுப்பாக்க முடியும்?" என்கிறார்.

அமைச்சர் கேட்டும் பதில் இல்லை

மேலும், ``கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்ட இழப்பை தணிக்கைத்துறை அதிகாரிகள் ஒரேநாளில் சமர்ப்பித்துவிட்டனர். `ஒரே ஆண்டில் எப்படி 5 கோடி இழப்பு வந்தது?' எனக் கேட்டால் அதிகாரிகளிடம் பதில் இல்லை. இந்த விவகாரத்தை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். இதே கேள்வியை அமைச்சர் கேட்டும் அதிகாரிகளிடம் பதில் இல்லை. இதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் உள்ளன.

காந்திரோட்டில் உள்ள முருகன் சொசைட்டி அமைந்துள்ள இடத்தின் மதிப்பே 20 கோடி ரூபாய் வரும். இந்த இடத்தில் உள்ள கட்டடம், 57 ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் இயங்கி வந்தது. இதனை மேலும் விரிவுபடுத்த நினைத்து பட்டா கேட்டோம். அப்போதுதான், இந்த இடம் நத்தம் புறம்போக்கு எனத் தெரிய வந்தது. உடனே சிறப்பு தாசில்தார் மூலம் இதற்குப் பட்டா பெறவும் முயற்சி செய்தோம். இதனை கட்டட உரிமையாளர் விரும்பவில்லை. அதிகாரிகளும் அவரோடு கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் சொசைட்டிக்குத்தான் லாபம். இதுதான் பிரச்னைக்குக் காரணம். மற்றபடி எந்தத் தவறும் நடைபெறவில்லை" என்கிறார்.

திசை திருப்பும் செயலா?

`என்னதான் நடக்கிறது?' என கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இயக்குநர் கருணாகரன் ஐ.ஏ.எஸ்ஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.``முருகன் பட்டு நூல் சொசைட்டியில் ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்துள்ளோம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இட விவகாரம் குறித்து சிலர் பேசி வருவதில் உண்மையில்லை. பல வருடங்களாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் விற்பனையகத்துக்கு திடீரென ஒரு போலி பட்டாவை வாங்கிக் கொண்டு சிலர் வந்துள்ளனர். இதையடுத்து, அந்தக் கட்டடத்துக்கான வாடகையையும் 2 வருடங்களாகக் கொடுக்காமல் நிறுத்திவிட்டனர். `இந்த இடத்தின் உண்மையான பட்டா யாரிடம் உள்ளது?' என்பதைக் கண்டறியுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்பேரில் இன்னும் அறிக்கை வரவில்லை. அதற்குள் சங்கத்தில் நடந்த முறைகேடு விவகாரத்தை சிலர் திசை திருப்பப் பார்க்கிறார்கள்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: