இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண் ஏன் நியமிக்கப்படவில்லை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனகா பதக்
- பதவி, பிபிசி மராட்டி
"இந்தியாவில் பெண் ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதிகளை (அட்ஹாக் ஜட்ஜஸ்) நியமனம் செய்வது குறித்த மனு மீதான விசாரணையின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
ஷரத் பாப்டே இந்தியாவின் 47ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவருக்கு முன் இருந்த 46 தலைமை நீதிபதிகளும் ஆண்கள்தான். இவருக்கு அடுத்தபடியாக அந்த பொறுப்பை ஏற்க இருப்பவரும் ஆண் தான். என்.வி.ரமணா 48ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
"பெண்களுக்கான தேவை குறித்து நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். அதை நாங்கள் அமலாக்கியும் வருகிறோம். எங்களின் மனநிலையில் மாற்றம் இல்லை. ஒரு நல்ல மனிதர் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." என்று விசாரணையின்போது தெரிவித்தார் பாப்டே.
நீதித்துறையின் உயர் பொறுப்புகளில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு தொடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வெறும் 11 சதவீத பெண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த கூட்டமைப்பு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய மனுதாரர்களில் ஒருவரான ஸ்னேகா காலிடா, "நீதித்துறையில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை இன்றும் குறைந்த அளவில் இருப்பது வருத்தமளிக்கக் கூடிய விஷயம்தான். இந்த விஷயம் தொடர்பாக பேசுவது இது முதல்முறையல்ல. இதற்கும் முன்பு 2015ஆம் ஆண்டு அரசமைப்பு அமர்வு முன்பு வாதாடினேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் அப்போது நான் சமர்ப்பித்த எண்ணிக்கை தற்போது வரை மாறவில்லை." என்றார்.
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை
இந்திய உச்ச நீதிமன்றம் 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு பதிலாக உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 47 பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 8ஆகும். இருப்பினும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு அதிகாரம் வழங்குகிறது. வழக்குகள் அதிகரிக்க நீதிபதிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் அதிகரித்தது.
1956ஆம் ஆண்டு 11 ஆக அதிகரித்தது. 1960ஆம் ஆண்டு 14ஆக அதிகரித்தது. 1978ஆம் ஆண்டு 18ஆக அதிகரித்தது. 1986ஆம் ஆண்டு 26ஆகவும், 2009ஆம் ஆண்டு 31ஆகவும், 2019ஆம் ஆண்டு 34ஆகவும் அதிகரித்தது.
இதுவரை எட்டு பெண்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஃபாத்திமா ஃபீவி 1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். தற்போதைய சூழலில் 34 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இந்திரா பானர்ஜி மட்டுமே ஒரே ஒரு பெண் நீதிபதியாகவுள்ளார்.
நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் ஒன்றில் மட்டுமே பெண் நீதிபதி தலைமை நீதிபதியாகவுள்ளார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவுள்ளார் ஹிமா கோலி. நாட்டில் உள்ள 661 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 73 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். மணிப்பூர், மேகாலயா, பாட்னா, திரிபுரா மற்றும் உத்தராகண்டில் பெண் நீதிபதிகள் யாரும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவு ஏன்?
தற்போது இம்மாதிரியான மனு ஒன்றை தொடுக்க என்ன காரணம் என்று மனுதாரர்களிடம் கேட்டேன்.
"இப்போதே இது தாமதமாகத்தான் எழுப்பப்பட்டுள்ளது என்று நம்புகிறேன். 50-50 என்ற ரீதியில் ஆண் பெண் மக்கள் தொகை கணக்கு இருந்தால் நீதித்துறையிலும் அது பிரதிபலிக்க வேண்டும். இந்த விஷயம் முன்னதாகவே எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தால் இன்று எண்ணிக்கை அதிகமாகியிருக்கலாம்" என்கிறார் மனுதாரர்களில் ஒருவரான ஷோபா குப்தா.
ஓய்வுப் பெற்ற நீதிபதியான சுஜாதா மனோகர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். இதுகுறித்து அவர் பேசும்போது இந்த விஷயம் மிக ஆழமானது என்கிறார்.
"இது ஒரு ஆபத்தான சுழற்சி. முதலில் நன்கு அனுபவமிக்க பெண் வழக்குரைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இதுவே முதல் தேவை. உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். எனவே நல்ல உயர் நீதிமன்ற நீதிபதிகள் இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்திலும் பிரதிநிதித்துவம் குறைவானதாகவே இருக்கும்." என்கிறார் அவர்.
உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற அமர்வுகளில் பெண் நீதிபதிகள் அதிகம் இல்லை என்பதை பார்த்து பெண் வழக்குரைஞர்கள் மனமுடைந்து போகின்றனர். நாம் இந்த ஆபத்தான சுழற்சியை உடைக்க வேண்டும். என்கிறார் அவர்.
"உயர் நீதிமன்ற நீதிபதிகளாக சேவையாற்றக் கூடிய தகுதியான பல பெண் வழக்குரைஞர்கள் உள்ளனர் இருப்பினும் இந்த எண்ணிக்கை ஏன் அதிகரிக்கவில்லை," என கேள்வி எழுப்புகிறார் ஷோபா.
"தொடக்கத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் வழக்குரைஞர்கள் இல்லை. நான் பணியை தொடங்கியபோது மிக குறைந்த பெண் வழக்குரைஞர்களே இருந்தனர். 1997ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வெறும் 130 பெண் வழக்குரைஞர்களே இருந்தனர். ஆனால் இப்போது மாநிலங்கள் முழுவதும் பல பெண் வழக்குரைஞர்கள் உள்ளனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை." என்கிறார் ஷோபா.

பட மூலாதாரம், Getty Images
இந்த மனு குறித்து விசாரிக்கும்போது `எங்களின் மனநிலையில் மாற்றம் இல்லை` என பாப்டே தெரிவித்தார். அதன்பொருள் பெண் நீதிபதிகளை உயர் பொறுப்பில் நியமிக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம். ஆனால் அதுபோதாது என்கிறார் ஷோபா குப்தா. அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.
"இது ஒரு அழகி போட்டியை போன்றது. எல்லாரும் நல்லதையே பேசுவார்கள். எல்லோருக்கும் எது சரி என்று தெரியும். ஆனால் அதை செயலாக்கும் முறை வரும்போது. அங்கு தோற்று விடுகிறோம். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், நீதிபதி முகுந்தகம் ஷர்மா, நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் பிற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் பல சிறந்த பெண் வழக்குரைஞர்கள் இருப்பதாக சொன்னார்கள். இம்மாதிரியாக பல நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் அளவுக்கு பல பெண் வழக்குரைஞர்கள் உள்ளார்கள் என்று சொல்லும்பட்சத்தில் அவர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை," என்கிறார் ஷோபா.
நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரைக்கப்படும் முறை குறித்தும் விளக்குகிறார் ஷோபா. "பெயர்கள் பரிந்துரைக்கப்படும்போது, உயர் நீதிமன்றம் 20 பெயர்களை அனுப்பினால் அதில் ஒன்றோ இரண்டோ பெண் நீதிபதிகளின் பெயர்கள் இருக்கும். ஆண் மற்றும் பெண் வழக்குரைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதில் பெரும் வித்தியாசம் இருக்கும். எனவே கடைசியில் உயர் பொறுப்பில் குறைந்த பெண் நீதிபதிகளே இருப்பர்."
வீட்டுப் பொறுப்புகளால் பெண்கள் உயர் பொறுப்பை மறுக்கிறார்களா?
தலைமை நீதிபதியின் கருத்து ஒன்று பலரை முகம் சுளிக்க செய்தது. "உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பெண்கள் நீதிபதி பொறுப்பை ஏற்க அழைத்தால் அந்த அழைப்பை மறுத்துவிட்டனர் என்று தெரிவித்தார். வீட்டுப் பொறுப்புகள் என்ற பெயரிலும், பிள்ளைகள் 12ஆம் வகுப்பில் உள்ளதாகவும் கூறி மறுத்தனர் என உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்னிடம் தெரிவித்தார். இது விவாதிக்ககூடிய விஷயமல்ல. அனைத்து இடங்களிலும் பெண் நீதிபதிகளை நியமிக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என்றார்.
பெண்கள் வீட்டுப் பொறுப்புகளுக்காக பதவியை நிராகரிக்கிறார்களா?
"எனக்கு தெரிந்து வீட்டு பொறுப்புகளுக்காக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை எந்த பெண் வழக்குரைஞரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்." என்கிறார் நீதிபதி மனோஹர்.
"தலைமை நீதிபதி சொன்ன கருத்து தவறு என்று நான் சொல்லவில்லை. அவர் அம்மாதிரியான வழக்குரைஞர்களை எதிர்கொண்டிருக்கலாம்," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதேசமயம் ஆண்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்மாதிரியான பொறுப்புகளை மறுப்பதுண்டு என்கிறார் ஷோபா.
"நீதிபதி பொறுப்பிற்கு பல வழக்குரைஞர்கள் மறுப்பு தெரிவித்த கதையை கேட்டிருக்கிறோம். நான் கேட்டவை அனைத்தும் ஆண்கள் சொன்னவைதான். இருப்பினும் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் ஆண் நீதிபதிகளே உள்ளனர். 20 பேரில் 2 பெண் வழக்குரைஞர்களே மட்டுமே நீதிபதிகள் நியமன தேர்வுக்குழுக்கு பரிந்துரைப்பதிலிருந்து பிரச்னை ஆரம்பமாகிறது. அந்த இருவரில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வேண்டாம் என்று சொன்னவுடன் பெண்கள் அனைவரும் இந்த பொறுப்பை மறுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 10 பெண் வழக்குரைஞர்களின் பெயரை ஏன் பரிந்துரை செய்யக்கூடாது?" என்கிறார் ஷோபா.
பெண்களின் பெயரை ஏதோ நடைமுறைக்காக பரிந்துரைக்கிறார்கள். "இந்த நிலை 1950ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டால் சரி ஆனால் இன்றளவும் இது இவ்வாறாக இருந்தால் ஒரு சமூதாயமாக நாம் தோற்றுவிட்டோம் என்றும் அர்த்தம்" என்கிறார் அவர்.
நீதித்துறையில் பெண்களின் வரலாறு
நீதித்துறையிலும் பிற துறையை போல பெண்கள் தடைகளை உடைக்க வேண்டியுள்ளது. இன்றளவும் தொழிலை பாலினத்துடன் பொறுத்தி பார்க்கிறார்கள் என்கிறார் ஷோபா.
வரலாறு நெடுகவே நீதித்துறையில் இடம் பெற பெண்கள் சிரமப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
"சட்டம் பயின்று நீதித்துறையில் பங்கெடுக்க பெண்கள் போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. யாருக்காகவும் வாதாட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. சட்டம் பயலவும் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இது 1923ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தால் மாறியது. பெண்கள் அதற்காக போராட வேண்டியிருந்தது," என விவரிக்கிறார் ஸ்னேகா.
சட்டப் பயிற்சியாளர் சட்டம் (பெண்கள்) 1923 (Legal practitioner (women) act of 1923), பெண்கள் சட்டம் பயில்வதற்கான உரிமையை வழங்கியது. அதுவரை வழக்குரைஞர் பணி ஆண்களின் பணியாகவே கருதப்பட்ட்து. ரெஜினா குஹா, குஷன்சு பாலா ஹஸ்ரா, கார்னெலியா சொராப்ஜி ஆகியோர் அந்த நிலையை மாற்ற எத்தனித்தனர்.
சட்டம் பயின்ற ரெஜினா குஹா, வழக்குரைஞராக 1916ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அவரின் விண்ணப்பம் கல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கு பின்னாளில் `ஃபர்ஸ்ட் பெர்சன் கேஸ்` என்று அழைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சட்டப் பயிற்சியாளர்கள் சட்டம் 1879, பெண்கள் வழக்குரைஞராக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த துறையிலிருந்து மொத்தமாக பெண்களை விலக்கி வைத்தது.
குஹாவின் மனு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது ஆனால் ஒருமனதாக அது நிராகரிக்கப்பட்டது.
1921ஆம் ஆண்டு சுஷன்சு பாலா ஹஸ்ரா, ரெஜினா குஹா எடுத்த அதே முயற்சிகளை மேற்கொண்டார். பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக விண்ணப்பித்தார். இது `இரண்டாம் பர்சன் கேஸ்` என்று அழைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த சமயம் பிரிட்டன் நீதிமன்றம் பாலின தகுதி நீக்க சட்டம் 1919ஐ கொண்டு வந்தது இது பெண்களை சட்டம் உரைக்கும் பணியில் அனுமதித்தது.
அந்த அமர்வு பெண்கள் சட்டம் பயில விருப்பம் தெரிவித்தாலும், பாட்னா உயர் நீதிமன்றம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மும்மொழிந்து ஹஸ்ராவின் விண்ணப்பத்தை நிராகரித்த்து.
அதே ஆண்டு, கார்னெலியா சொராப்ஜி அலாகாபாத் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக விண்ணப்பித்து வெற்றிப் பெற்றார். எனவே இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் என்ற சிறப்பை பெற்றார் அவர்.
அதன்பின் கல்கத்தா மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை திருத்த சட்டப் பயிற்சியாளர்கள் (பெண்கள்) சட்டம் இயற்றப்பட்டது. இது பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடுத்தது.
பெண்கள் ஏன் உயர் பதவியில் இருக்க வேண்டும்?
"இதற்கு முதலில் நாம் ஏன் காரணம் தேட வேண்டும்? சமூகத்தில் 50 சதவீத அளவில் பெண்கள் இருக்கும்போது. அதுவே போதாதா? பெண் நீதிபதிகள் அதிக கரிசனுத்துடன் நடந்து கொள்வார்கள் என்றோ அல்லது அவர்கள் மட்டுமே நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றோ நான் நம்பவில்லை. இதுவரை உச்ச நீதிமன்றத்தில் வெறும் 8 பெண் நீதிபதிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவே பல பெண்கள் தொடர்பான விஷயத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கவில்லை என்று பொருள் இல்லை." என்கிறார் ஷோபா.
அதேபோல உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சுழற்சி முறையில்தான் வழக்குகள் வரும். எனவே பெண்கள் தொடர்பான பிரச்னைகள் பெண் நீதிபதிகளால் மட்டுமே தீர்ப்பு கூற முடியும் என்றோ, ஆண் நீதிபதிகள் குற்றவியல் வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு கூறமுடியும் என்றோ இல்லை.
இருப்பினும் இது பெண் வழக்குரைஞர்களுக்கு ஒரு உத்வேகமளிக்கும் என நீதிபதி மனோகர் தெரிவிக்கிறார்.
"பெண் வழக்குரைஞர்கள், பெண் நீதிபதிகளை அமர்வில் கண்டால் அவர்களுக்கு அது உத்வேகமாக இருக்கும்" என்கிறார் ஸ்னேகா காலிட்டா.
"பாலின பாகுபாடு குறித்து நீதிமன்றங்கள் பேசுகின்றன. இல்லத்தரசிகளுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும் என பேசுகிறோம். சபரிமலை தீர்ப்பு வந்தது. எனவே நீதித்துறையின் உள் சென்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது." என்கிறார் ஸ்னேகா.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












