மைனர் சிறுமியை திருமணம் செய்ய சம்மதமா? - பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்
தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
மைனர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் பதின்ம வயது கடந்த பிறகு திருமணம் செய்வீர்களா என குற்றம் சுமத்தப்பட்ட நபரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக செஷன் நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீன் மனுவை நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளையின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு சமீபத்தில் விசாரித்தது.
அப்போது, அவரை (சிறுமி) திருமணம் செய்து கொள்வீர்களா என மனுதாரரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த அரசு ஊழியரின் வழக்கறிஞர் இது பற்றி எனது கட்சிக்காரரிடம் பேசிய பிறகு பதில் தெரிவிக்கிறேன் என கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, "இளம் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்வதற்கு முன்பு இது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். உங்கள் கட்சிக்காரர் ஒரு அரசு ஊழியர் என்பதை அறிவீர்களா?" என கேட்டார்.
மேலும், "சிறுமியை திருமணம் செய்ய உங்களை கட்டாயப்படுத்தவில்லை. அந்த எண்ணம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம். இல்லையென்றால் நீதிமன்றம்தான் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாக நீங்கள் கூறலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.
அப்போது அந்த அரசு ஊழியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது கட்சிக்காரர் திருமணம் செய்து கொள்ளவே நினைத்தார். ஆனால், அந்த சிறுமி மறுத்து விட்டார். ஆனால், இப்போது எனது கட்சிக்காரரால் திருமணம் செய்ய முடியாது. அவருக்கு திருமணம் நடந்து விட்டது. விசாரணையும் நடந்து வருகிறது. குற்றச்சாட்டுகள் இன்னும் பதிவாக வேண்டியுள்ளது," என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மனுதாரரான அரசு ஊழியர், நான்கு வாரங்களுக்கு கைது செய்யப்படாமல் இருக்க இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், அவர் முறைப்படி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியது.
அந்த அரசு ஊழியர் தனது தூரத்து உறவுக்காரரான 16 வயது சிறுமியை அவர் பள்ளிக்கு செல்லும் வழியில் பின் தொடர்ந்து வந்ததாகவும், ஒரு நாள் அந்த சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து உள்ளே நுழைந்து அவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி காரணமாக அந்த சிறுமி ஒரு நாள் தற்கொலை முயற்சிக்கு துணிய அவரது தாயாரால் அவர் தடுக்கப்பட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்தே அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் அரசு ஊழியருக்கு எதிராக புகார் கொடுத்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதை அடைந்த பிறகு அவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக அவரது தாய் உறுதியளித்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அரசு ஊழியர் நபருக்கும் இடையே விருப்பத்தின் பேரில் உடலுறவு நடந்ததாக ஒரு பத்திரத்தில் எழுத்தறிவில்லாத சிறுமியின் தாயை கையெழுத்திட அந்த நபரின் தாய் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, 18 வயதை கடந்த நிலையில், அவரை தனது மகனுக்கு முன்பு கூறியபடி திருமணம் செய்து வைக்க அந்த நபரின் பெற்றோர் முன்வரவில்லை. இதையடுத்து, அந்த நபருக்கு எதிராக பாலியல் வல்லுறவு புகாரை சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த நபருக்கு எதிராக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது, மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அந்த நபருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து ஒளரங்காபாத் உயர் நீதிமன்ற கிளையில் சிறுமியின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற போக்சோ சட்ட பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவில், இத்தகைய நுட்பமான வழக்கில் பிரச்னையின் தீவிரத்தை உணராமல் கீழமை நீதிமன்ற நீதிபதி முன் ஜாமீன் வழங்கியிருப்பது தவறானது என்று கூறி, முன்ஜாமீன் உத்தரவை தள்ளுபடி செய்தனர்.
இதை எதிர்த்து அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து சம்பவம் பற்றி புகார் அளிக்க வந்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். மைனர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் பதின்ம வயது கடந்த பிறகு திருமணம் செய்வீர்களா என குற்றம் சுமத்தப்பட்ட நபரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லிக், மனித நேய மக்கள் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியென்பது இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை.
தி.மு.க. கூட்டணியில், தொகுதி எண்ணிக்கை தொடர்பான பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதில் இடங்கள் குறித்து முடிவு ஏதும் செய்யப்படவில்லை.
இதற்குப் பிறகு இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுடன் தி.மு.க. பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களும் மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், தாங்கள் ஐந்து தொகுதிகளில் போட்டியிட விரும்பியதாகத் தெரிவித்தார். "தேர்தல் கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியின் சார்பில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் தி.மு.க. குழுவினருடன் நேற்றும் இன்றும் பேச்சு வார்த்தை நடத்தினோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஐந்து தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், தி.மு.கவுக்கு அதிக இடங்கள் தேவைப்படுகின்றன என்பதாலும் புதிய கட்சிகளுக்கும் இடம் தேவை என்பதாலும் எங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை ஏணிச் சின்னத்தில் போட்டியிடுவோம். அது கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம். அதில்தான் போட்டியிடுவோம். எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது முடிவுசெய்யப்படவில்லை. எங்களது விருப்பப் பட்டியலில் 25 தொகுதிகள் உள்ளன. அடுத்த கட்டமாக எந்தெந்தத் தொகுதிகள் என்பது முடிவுசெய்யப்படும்" என்று கூறினார்.
அதேபோல, மனித நேய மக்கள் கட்சியும் கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்பினாலும் சூழலை மனதில் கொண்டு இரண்டு இடங்களை ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். "தி.மு.க. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே நாட்டு நலன், தமிழக நலனை கவனத்தில் கொண்டு, தியாக மனப்பான்மையுடன் இயங்கக்கூடிய மனித நேய மக்கள் கட்சி தி.மு.கவுடன் தொகுதி உடன்பாடு செய்துள்ளது. நாங்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவோம். எந்தச் சின்னம் என்பதும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் முடிவுசெய்யப்படும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஜவாஹிருல்லா.
தொடர்ந்து வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன. வி.சி.கவின் சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












