புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா?

புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா?

பட மூலாதாரம், Facebook/ Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

புதுச்சேரியில் கடந்த தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட தி.மு.கவும் காங்கிரசும் தற்போது எதிரும் புதிருமாக நிற்கின்றன. காங்கிரஸ் தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டும் தி.மு.க., தனித்து நிற்கப் போவதாகக் கூறுகிறது.

தமிழ்நாட்டோடு சேர்த்து வரும் ஏப்ரல் - மே மாதங்களில் புதுச்சேரிக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக நாராயணசாமி தேர்வுசெய்யப்பட்டார். தற்போது புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்கள் உள்ளன. தி.மு.க. 3 இடங்களைப் பிடித்துள்ளது.

ஆரம்பத்தில் சுமுகமாக சென்றுகொண்டிருந்த இந்தக் கூட்டணியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகவே முட்டலும் மோதலும்தான் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, புதுச்சேரி மாநில தி.மு.கவின் மேலிடப் பொறுப்பாளராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டார். புதுச்சேரியில் ஜனவரி 18ஆம் தேதி அக்கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தபோது, அதற்காக வந்த ஜெகத்ரட்சகனுக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல போஸ்டர்கள், அவரை புதுச்சேரியின் வருங்கால முதல்வர் என அழைத்தன.

புதுச்சேரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த தி.மு.கவின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தி.மு.க. நிர்வாகிகள், தற்போதைய ஆட்சி குறித்து கடுமையாகப் பேசினர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, கீதா ஆனந்த், வெங்கடேசன் மற்றும் வடக்கு மண்டல செயலாளர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்று, ஆட்சியை விளாசித் தள்ளினர்.

வெற்றிபெறாவிட்டால் இங்கேயே தற்கொலை: ஜெகத்ரட்சகன் சபதம்

திமுக கூட்டம்

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன், "23 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பு - சிவப்பு கொடி பறந்த மண் இந்த புதுச்சேரி. மீண்டும் இங்கு தி.மு.கவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் கூறுவேன். எந்த கட்சி மற்றும் இயக்கத்தோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்" என்று பேசினார். புதுச்சேரி மண்ணை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டதாகவும் ஆட்சியாளர்கள் மீது ஜெகத்ரட்சகன் குற்றம்சாட்டினார்.

தேர்தல் குறித்துப் பேசிய அவர், "தி.மு.க. தலைமையில் கூட்டணி அமையும். இந்தக் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதை கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். ஸ்டாலின் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். 30 தொகுதியையும் வெற்றிபெற்றுத்தான் வருவேன். இல்லையென்றால் இந்த மேடையிலேயே நான் தற்கொலை செய்துக்கொள்வேன்," என்றார் ஜெகத்ரட்சகன்.

அவருக்கு முன்பாக கூட்டத்தில் பேசிய புதுச்சேரி தெற்கு மண்டல செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவாவும் வடக்கு மண்டல செயலாளர் சிவக்குமாரும் ஜெகத்ரட்சகன்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டுமென்று பேசினர்.

மேலும், நாராயணசாமி தலைமையிலான தற்போதைய அரசு மீது நீண்ட குற்றப்பத்திரிகை ஒன்றையும் சிவா வாசித்தார். "இந்த ஆட்சியில் நமது சுயமரியாதையும் தன்மானமும் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியால் அவர்களது கட்சியினருக்கோ கூட்டணி கட்சியினருக்கோ பொதுமக்களுக்கோ பயன் இல்லை. சுற்றுலா, தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என எதுவுமே இல்லை. சாலை வசதிகள் கூட சரியாக இல்லை. எதன் மீதும் முடிவு எடுக்க முடியாத அரசாகவும், துணை நிலை ஆளுநரை குறைகூறிக்கொண்டு காலம் கடத்தும் அரசாகவும் இந்த அரசு இருக்கிறது. துணை சபாநாயகரே அரசையும், அமைச்சர்களையும் விமர்சிக்கிறார். ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு அமைச்சர் வேறு கட்சிக்கு போக முயற்சிக்கிறார். ஆனால், திமுகவால் நிச்சயம் இந்த ஆட்சி கவிழாது. 2 மாதங்களுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி நடைபெறும்" என்றார்.

திமுக கூட்டம்

தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான மோதலின் பின்னணி என்ன?

தி.மு.கவுக்கும் காங்கிரசிற்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீறு பூத்த நெருப்பாக இருந்த இந்தக் கருத்து வேறுபாடு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிப்படையாகவே வெடித்தது. காங்கிரஸ் கூட்டணி நடத்தும் போராட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் தி.மு.க. பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தது. சமீபத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைக்கூட தி.மு.க. புறக்கணித்தது.

இந்த நிலையில்தான் தங்கள் தலைமையில் கூட்டணி என்ற கோஷத்தை தி.மு.க. தற்போது முன்வைத்திருக்கிறது. ஆனால், தாங்கள் தி.மு.க. கூட்டணியையே விரும்புவதாக சொல்கிறது காங்கிரஸ்.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது, 3 நியமன எம்.எல்.ஏக்களை தி.மு.கவிற்குத் தருவதாக காங்கிரஸ் சொல்லியிருந்த நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தார் துணைநிலை ஆளுநர். "இதனால், நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. வாரியங்களை அமைத்திருந்தால் அதில் தி.மு.கவினருக்கு இடம் அளித்திருக்க முடியும். அதிலும் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டார். ஆகவே அதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இந்த அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன்.

ஆனால், இதனை தி.மு.கவினர் மறுக்கிறார்கள். "இதெல்லாம் சாக்குப்போக்கு சொல்லும் வேலை. நியமன எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை ஆட்சி அமைத்த 3 மாதங்களுக்குள் அதைச் செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், ஒரு வருடத்திற்கு மேல் தாமதம் செய்ததால்தான் கிரண்பேடி அந்த நியமனங்களைச் செய்தார். வாரியங்களைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் யாரும் தங்கள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. குறிப்பாக கந்தசாமி, நமச்சிவாயம் போன்றவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனால்தான் வாரியங்களுக்கு ஆட்களை நியமிக்கவில்லை" எனக் குற்றம்சாட்டுகிறார் சிவா.

1967லிருந்தே பல சட்டமன்றத் தேர்தல்களில் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் சிவா, 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் தாங்கள் ஏமாந்துவிட்டதாகச் சொல்கிறார்.

"நாங்கள் வெல்ல முடியாத இடங்களைக் கொடுத்தார்கள். தவிர, நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த அதிருப்தி ஆட்கள் போட்டியிட்டார்கள். இப்படி ஒரு தொகுதியில் ஏ.வி. சுப்ரமணியத்தின் மகன் போட்டியிட்டதால்தான் நாஜிம் தோற்றுப்போனார். பல தொகுதிகளில் இந்த அதிருப்தி நபர்களால் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். தேர்தல் பணியிலும் ஈடுபாடு காட்டமாட்டார்கள். மொத்தத்தில் நல்ல மனதோடு அந்தக் கூட்டணியை அணுக மாட்டார்கள். பிறகு எதற்குத்தான் அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும்?" என்று கேட்கிறார் சிவா.

நாராயணசாமி

பட மூலாதாரம், Getty Images

கோவில் கமிட்டிகளில்கூட தி.மு.கவைச் சேர்ந்தவர்களை நியமிக்காததைச் சுட்டிக்காட்டும் சிவா, "இப்படியே போய்க்கொண்டிருந்தால் எங்கள் கட்சியை எப்படி வளர்க்க முடியும். ஆகவே இந்த முறை எங்கள் தலைமையில்தான் கூட்டணி" என்கிறார்.

"நாங்கள் தி.மு.க. கூட்டணியையே விரும்புகிறோம். மதச்சார்பற்ற கூட்டணிக்கு எதிரான கூட்டணியை வீழ்த்த வேண்டும். அதற்கு நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். சில வருத்தங்கள் உண்டு. சில காரியங்களை செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் கிரண்பேடிதான்" என்கிறார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன்.

கடந்த முறை ஒன்றாக நின்ற தி.மு.கவும் காங்கிரசும் தற்போது எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில், எதிர் முனையில் உள்ள அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியில் பெரிய சலனங்கள் இல்லை. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகும்பட்சத்தில், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தை, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடலாம். இந்தக் கூட்டணியில் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் இணைவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.

"அப்படி நடந்தால், யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை ஏற்படும். ஆகவே அந்தக் கூட்டணிக்கான சாத்தியங்கள் குறைவு" என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான நடராஜன். "புதுச்சேரியில் தேர்தல் வெற்றி என்பது போட்டியிடும் வேட்பாளரைப் பொறுத்துத்தான் இருக்கும். தனி மாநிலக் கோரிக்கையை யார் வலுவாக முன்னிறுத்துகிறார்களோ அவர்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும். ஆனால், மத்தியிலும் புதுச்சேரியிலும் ஓரே கட்சியின் ஆட்சி இல்லாவிட்டால், சிக்கல் ஏற்படும். அதுதான் இப்போது புதுச்சேரியில் நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார் நடராஜன்.

தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைந்தால் காங்கிரஸ் என்ன செய்யும்? என்று கேட்டபோது, "இங்கிருக்கும் தி.மு.கவினர் தங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறார்கள். அதற்காக இப்படிப் பேசுகிறார்கள். கூட்டணி குறித்தெல்லாம் எங்கள் கட்சி மேலிடமும் மு.க. ஸ்டாலினும்தான் முடிவுசெய்வார்கள்" என்கிறார் ஏ.வி. சுப்ரமணியன்.

ஆனால், தமிழ்நாட்டில் எவ்விதமான கூட்டணி அமைகிறது என்பதும் புதுச்சேரி அரசியலில் எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமையும்பட்சத்தில், அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியிலும் கூட்டணி தொடரலாம் என நம்பிக்கையோடு இருக்கிறது காங்கிரஸ். ஆனால், தனித்தே நிற்கும் முடிவில் இருக்கிறார்கள் புதுச்சேரி தி.மு.கவினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: