ராமதாஸ் - தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - தைலாபுரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், DR. S. RAMADOSS FB
(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லையென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணியும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப்பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த சந்திப்பு முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில், தேர்தல் குறித்துப் பேசவில்லை என தெரிவித்திருக்கிறார்.
"தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இது குறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும்தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் ராமதாஸ் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கென தனியாக 20 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது.

முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி

பட மூலாதாரம், C.T. RAVI TWITTER
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.கவே தீர்மானிக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்திருக்கிறார்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் என ஏற்கனவே அதிமுக அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பாகவே, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியே இருப்பார் என அக்கட்சி அறிவித்திருந்தது.
ஆனால், பாஜகவின் மாநில தலைவர்களைப் பொறுத்தவரை, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் அறிவிக்கும் என கூறி வந்தனர். இந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியே தீர்மானிக்கும் என்று பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி. ரவி, "இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் அமித் ஷா முன்பாக நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் என தெரிவித்தனர். நாம் ஒன்றாக போட்டியிடுவோம் என தெரிவித்தனர். தமிழகத்தில் இந்த கூட்டணியின் பெரிய கட்சி, அதிமுகதான். எனவே, யார் அடுத்த முதல்வர் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்" என்று சி.டி. ரவி கூறினார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த அஇஅதிமுக பிரசார கூட்டத்திலும் அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்திலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அக்கட்சி வலியுறுத்தியிருந்தது.
மேலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கே.பி. முனுசாமி, அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளரை ஏற்காத கட்சிகள் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

புதுச்சேரி: கிரண்பேடிக்கு எதிராக அமைச்சர் கந்தசாமி தர்ணா

புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் நடத்தி வந்த தர்ணா, மூன்று நாட்களுக்கு பிறகு நேற்றிரவு (ஜனவரி 11) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதே வேளை, ஜனவரி 22 முதல் கிரண் பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்போவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சமூக நலத்துறையின் கீழ் உள்ள 15 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கவும், ஆலோசனை நடத்த நேரம் கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அத்துறை அமைச்சர் கந்தசாமி கோரிக்கை வைத்திருந்தார். மேலும், கோப்புகள் தொடர்பாக தலைமைச் செயலர் மற்றும் துறை செயலர்கள் ஆய்வு செய்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் நேற்றிரவு முதல் உள்ளிருப்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
"மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும், நியாய விலைக்கடை ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 15 கோப்புகள் ஒப்புதல் அளிக்க அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோப்புகளுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் தொடரும்," என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது
- "அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, சமீபத்தில் தந்தையான இளைஞர்" - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்
- "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
- அட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












