அட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

Zoantharian

பட மூலாதாரம், ATLAS

படக்குறிப்பு, Epizoanthus martinsae என்ற சுமார் 400 மீட்டர் ஆழத்தில் வாழும் உயிரி.
    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, இதுவரை ஆராய்ச்சி செய்யப்படாத அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் இருக்கும் கடற்படுகைகளை இன்னும் முழுமையாக ஆராயாததால், கடல் பாசிகள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள், பவளப் பாறைகள் எல்லாம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைட் வாயுவை பெரிய அளவில் கடல்களும் மகாசமுத்திரங்களும் தான் உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே பெருங்கடல்களில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இது பவளப் பாறைகளின் எலும்புக் கூட்டை அரிக்க காரணமாகிறது.

இந்த சிறப்பு உயிரினங்கள் மற்றும் அவை வாழும் இடங்களைப் பாதுகாக்க நமக்கு இன்னும் நேர அவகாசமிருக்கிறது. இப்போது கூட ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அழுத்தமாகத் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.

ஆழ்கடல் பவழப்பாறை

பட மூலாதாரம், ATLAS

படக்குறிப்பு, ஆழ்கடல் உலகின் கடைக்கால்கள் இந்தப் பவழப்பாறைகளே. இவை தங்கள் நிழலில் பல உயிரிகளை வளர்க்கின்றன.

இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கிய விடயங்கள்

புதிய உயிரினங்கள்: குறைந்தபட்சமாக 12 புதிய ஆழ்கடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு இதுவரை தெரியாத 35 புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்திருக்கிறது இந்த ஆராய்ச்சிக் குழு.

பருவநிலை மாற்றம்: பெருங்கடலின் வெப்பநிலை, பெருங்கடலில் அதிகரிக்கும் அமிலத் தன்மை, ஆழ்கடல் உயிரினங்களுக்கு கிடைக்கும் உணவு குறைந்து வருவது போன்ற பல காரணங்களால், வரும் 2100-ம் ஆண்டுக்குள், ஆழ்கடல் உயிரினங்களின் வாழ்விடங்கள் பெரிய அளவில் குறையும்.

ஹைட்ரோதெர்மல் வென்ட்: ஆழ்கடலில் புவி மையத்தின் வெப்பத்தால், நீர் சூடாகி வெளியேறும் துவாரங்களைத் தான் ஹைட்ரோதெர்மல் வென்ட் என்கிறோம். இதையும் விஞ்ஞானிகள் கடலடியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வெப்ப நீரை வெளியிடும் ஹைட்ரோதெர்மல் வென்ட்கள், பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கும், பெருங்கடலுக்கு மத்தியில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மிகவும் அவசியமானவை.

ஆழ்கடலில் இருக்கும் நகரங்கள்

Antropora gemarita feeds on particles of food suspended in the water

பட மூலாதாரம், ATLAS

படக்குறிப்பு, Antropora gemarita என்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயிரி.

நம் ஆழ்கடலின் வரைபடங்களை விட, நிலவின் பரப்பு மற்றும் செவ்வாய் கிரகத்தின் பரப்பு தொடர்பான வரைபடங்கள் நம்மிடம் தெளிவாக இருக்கின்றன எனலாம் என்கிறார் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெருங்கடல் வேதியியலாளர் பேராசிரியர் ஜார்ஜ் வுல்ஃப். இவரும் இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்தார்.

எப்போதெல்லாம் நீங்கள் கடலின் ஆழமான பகுதிகளுக்குச் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் புதிய உயிரினங்களை மட்டுமல்ல, ஒரு புதிய சூழல் அமைப்பையே கண்டுபிடிக்கிறீர்கள் என்கிறார்.

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகால ஆய்வில் கடலில் சில பிரத்யேக சிறப்பு மிக்க இடங்களை வெளிப்படுத்தியுள்ளன என எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அட்லஸ் திட்டத்தை வழிநடத்திய பேராசிரியர் முர்ரே ராபர்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆழ்கடலில் கடற்பாசிகள் மற்றும் ஆழ்கடல் பவளப் பாறைகளால் முழு சமூகங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சமூகங்கள் ஆழ்கடல் நகரங்களை உருவாக்கியிருக்கின்றன. அந்நகரங்கள் பல உயிரினங்களின் வாழ்கைக்கு உதவுகின்றன. இந்த இடங்களைத் தான் மீன்கள் முட்டையிட பயன்படுத்துகின்றன.

இந்நகரங்கள் மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டால், மீன்கள் முட்டையிடுவதற்கு இடங்களே இல்லாமல் போகும். எதிர்கால சந்ததியினருக்கு இந்த மொத்த சூழல் செயல்பாடுகளும் இல்லாமல் போய்விடும் என்கிறார் ராபர்ட்ஸ்.

நிலத்தில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு எப்படி மழைக்காடுகள் அத்தியாவசியமானவையோ, அதே போல கடலுக்கடியில் இந்த மாதிரியான நகரங்கள் மிகவும் அவசியமானவை. அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் ராபர்ட்ஸ்.

குறையும் கடல் நீரோட்டம்

உலகம் வெப்பமடைந்து கொண்டிருக்கும் போதும், மனிதர்கள் மீன் வளத்துக்காகவும், தாது பொருட்களுக்காகவும் ஆழ்கடலைச் சுரண்டிக் கொண்டிருக்கும் போது, பெருங்கடலின் சுற்றுச்சூழல் எப்படி மாறிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க 13 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்தார்கள்.

A bryozoan named Microporella funbio

பட மூலாதாரம், ATLAS

படக்குறிப்பு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Microporella funbio என்ற உயிரி.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் சில பகுதிகளில் நீரோட்டத்தின் வேகம் கணிசமாகக் குறைந்திருக்கிறது என பெருங்கடலின் நீரோட்டம் மற்றும் கடற்படுகைகளில் புதைபடிமங்கள் இருப்பை ஆராயும் போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதனால் ஏற்படும் தாக்கங்கள் மிகவும் சிக்கலானவை. குறிப்பாக சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மத்தியிலான தொடர்பு குறைந்து வருகிறது என விளக்குகிறார் ராபர்ட்ஸ். பெருங்கடலின் நீரோட்டங்கள் தான் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உயிரினங்களின் வாழிடங்களை இணைக்கும் பாலம்.

கண்களுக்குத் தெரியவில்லை

எதை நாம் இழக்க நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த அறிவு பயன்படுகிறது என்கிறார் இயற்கை வள பொருளாதார நிபுணர் மற்றும் ட்ராம்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சார்லி ஆர்ம்ஸ்ட்ராங்.

மனிதர்கள் சென்றால் உடல் நொறுங்கிவிடும் ஆழத்தில் ரோபோட்கள் மூலம் ஆய்வு.

பட மூலாதாரம், ATLAS

படக்குறிப்பு, மனிதர்கள் சென்றால் உடல் நொறுங்கிவிடும் ஆழத்தில் ரோபோட்கள் மூலம் ஆய்வு.

"நாம் பெருங்கடலின் சுற்றுச்சூழலுக்கு என்ன செய்கிறோம், இதனால் நாம் என்ன மாதிரியான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற உண்மையான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். ஆழ்கடல்கள் நம் பார்வைக்கும் நம் அறிவுக்கும் தெரிவதில்லை"

உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவது, மாசுபாடு அதிகரித்து வருவது போன்றவைகளால், ஆழ்கடலில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பெருங்கடல் குறித்த அறிவைப் பெறுவது அவசியம் என கடல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அட்லாண்டிக்கில் ஆராய்ச்சி கப்பல்.

பட மூலாதாரம், ATLAS

படக்குறிப்பு, அட்லாண்டிக்கில் ஆராய்ச்சி கப்பல்.

பெருங்கடல் ஒன்றும் வற்றாத வளம் அல்ல. அதை பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தில் நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம் என்கிறார் பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :