பாலியல் வல்லுறவு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்ட இரண்டு கேள்விகள் - பதவி விலகக் கோரி எழும் விமர்சனங்கள்

பாப்டே

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி டெல்லி செய்தியாளர்

இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே இரு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் கூறிய வார்த்தைகளால், அவர் பதவி விலக வேண்டும் என்கிற குரல் வலுத்துக் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகளால் தாங்கள் `சீற்றம் அடைந்துள்ளதாகவும்` அவர் பேசியதைப் திரும்பப் பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நல செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு நீதிபதி பாப்டேவுக்கு `திறந்த மடல்` ஒன்றை எழுதியுள்ளனர்.

இப்படி மக்கள் கொந்தளிக்கும் அளவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன கூறினார்?

அவர் இரண்டு `மோசமான` கேள்விகளைக் கேட்டார்.

முதல் கேள்வி: "நீங்கள் அவரைத் திருமணம் செய்துகொள்வீர்களா?"

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியான எஸ்.ஏ.பாப்டே, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது நபரைப் பார்த்து, அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா எனக் கேட்டார்.

"அவரை (பெண்ணை) திருமணம் செய்து கொள்ள விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், இல்லை எனில் நீங்கள் உங்கள் வேலையை இழப்பீர்கள் அதோடு சிறைக்கும் செல்வீர்கள்," என்றார் பாப்டே.

இந்த வார்த்தைகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத்தனைக்கும் 2014 - 15-ல் அந்தப் பெண் 16 வயதில், தன் உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொந்தரவு கொடுக்கும் விதத்தில் பெண்ணைப் பின் தொடர்வது, பள்ளிக்குச் செல்லும் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது, பெட்ரோலை ஊற்றி எரித்துவிடுவேன் என மிரட்டியது, அமிலத்தை முகத்தில் எரிந்துவிடுவேன் என மிரட்டியது, பெண்ணின் சகோதரரைக் கொன்றுவிடுவேன் என மிரட்டியது என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

பள்ளிக்குச் செல்லும் அப்பெண் தற்கொலைக்கு முயன்ற போது தான் இந்த விவகாரம் வெளியே வந்தது.

பாதிக்கப்பட்ட பெண் சட்ட ரீதியாக மேஜரான பிறகு திருமணம் செய்து வைப்பதாக, குற்றம்சுமத்தப்பட்ட ஆணின் குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினருக்கு வாக்கு கொடுத்திருந்ததால் காவல் துறையிடம் அப்போது இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்றவைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மீதே குறைச் சொல்லப்படுவதால், பெண்ணின் குடும்பத்தினர் இந்த ஏற்பாடுக்குச் சம்மதித்தார்கள்.

ஆனால் வாக்களித்தபடி நடந்து கொள்ளாமல், பாலியல் ரீதியாக பெண்ணைத் துன்புறுத்தியவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், அப்பெண் காவலர்களிடம் முறையிட்டார்.

குற்றம்சுமத்தப்பட்ட ஆண் மாகாராஷ்டிராவில் ஓர் அரசு ஊழியர். தான் கைது செய்யப்பட்டால் தன் அரசுப் பணி பறிபோய்விடும் என நீதிமன்றத்தில் முறையிட்டதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் அந்த ஆணையை "கொடியது" என மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்தது. அதோடு, அந்த ஆணுக்கு வழங்கிய ஜாமீனையும் ரத்து செய்தது.

பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

அதன் பின் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அந்த ஆண் கைது செய்யப்படுவதிலிருந்து நான்கு வார காலத்துக்கு பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின் போதுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவுக்கும், அந்த ஆணின் வழக்குரைஞருக்கும் இடையில் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்தது.

அதிகரித்த எதிர்ப்புகள்

இந்தியாவின் பிரபலமான பெண்ணியவாதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள், எஸ்.ஏ.பாப்டேவுக்கு கையெழுத்திட்டு அனுப்பியிருந்த திறந்த மடலில், இந்தியாவின் தலைமை நீதிபதியான பாப்டேவின் வார்த்தைகளை விவரிக்க, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிட்டிருந்த `கொடிய` என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

"ஒரு மைனர் பெண் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டிருக்கும் வழக்கை சுமூகமாக தீர்த்து வைக்க திருமண ஆலோசனை நடத்துவது மிகக் கொடியது மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்டவர் நீதி கேட்கும் உரிமையையே சீரழிக்கும் செயல்".

"பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றத்தால் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொள்ளும்படி பரிந்துரைப்பதன் மூலம், இந்தியத் தலைமை நீதிபதியான நீங்களே அந்தப் பெண்ணை, தீங்கிழைத்தவரே வாழ்நாள் முழுவதும் வல்லுறவு செய்யும் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள். அந்த நபர்தான் அந்தப் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியவர்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பரில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் கூட்டு பாலியல் வல்லுணர்வுக்கு ஆளாகி இறந்த பிறகு, டெல்லியில் நாள் கணக்கில் போராட்டங்கள் நடந்து உலக அளவில் தலைப்புச் செய்தியானது. அதன் பிறகு இந்தியாவில் பாலியல் வல்லுணர்வு மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிக கவனத்தைப் பெறத் தொடங்கின.

அதன் பிறகு, அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகள் அதிக கவனம் பெறத் தொடங்கின.

இருதரப்பினருக்கு மத்தியில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சி எனப் பார்க்கப்படுவதால், இந்தியாவின் தலைமை நீதிபதியின் கருத்துகள் விமர்சிக்கப்படுகின்றன.

ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில், கிராமபுறங்களில் ஊர் பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி இப்படிப்பட்ட சமரசத்தை வழங்குவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில தீர்ப்புகளும் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவரை இணைக்கும் வேலையைச் செய்ய முயன்றிருக்கிறது.

திருமணம் மற்றும் பாலியல் வல்லுணர்வை எந்த சூழலிலும் ஒன்றாகப் பார்க்க முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"திருமணம் என்பது பாலியல் வல்லுணர்வு செய்வதற்கான உரிமம்" என்கிற செய்தி தான் நீதிபதியின் இந்த கூற்றுமூலம் சென்று சேரும்.

அதே நாளில் நீதிபதி பாப்டே விசாரித்த மற்றொரு வழக்கில் மற்றொரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டார். இதுகுறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மத்தியில் நடந்த உடலுறவு, பாலியல் வல்லுணர்வு எனக் கருத முடியுமா?`

இரண்டு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் மனம் ஒத்து வாழும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தது ஒரு ஜோடி. அதில் பெண் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக ஆண் மீது புகார் கொடுத்திருக்கிறார். அவ்வழக்கு கடந்த திங்கட்கிழமை (மேலே குறிப்பிட்ட வழக்கை விசாரித்த அதே நாளில்) விசாரணைக்கு வந்தது.

விழிப்புணர்வு வாசகம்

பட மூலாதாரம், Getty Images

திருமணம் செய்து கொள்ளும் வரை உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது எனக் கூறிய பின், அந்த ஆண், தன் (பெண்ணின்) சம்மதத்தை `ஏமாற்றி` பெற்றதாக குற்றம்சுமத்தி இருப்பதாக `பார் அண்ட் பெஞ்ச்` வலைதளம் கூறுகிறது.

தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும், உறவு வைத்துக் கொள்ள, தான் (பெண்) சம்மதித்ததாகவும் கடந்த 2014-ம் ஆண்டு கூறினார்.

ஆனால் அந்த ஆணோ, தங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை எனவும், இருவருக்கும் இடையில் நடந்த உடலுறவு இருவரின் சம்மதத்தோடு தான் நடந்தது என கூறுகிறார்.

இந்த ஆண், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், தன்னை பாலியல் வல்லுணர்வுக்கு ஆளாக்கியதாக, அந்த ஆணின் மீது குற்றம் சுமத்தினார் அந்தப் பெண்.

"திருமணம் செய்து கொள்வேன் என போலி வாக்குறுதிகள் கொடுப்பது தவறு" என்பதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாப்டே, "ஒரு ஆணும் பெண்ணும் லிவ் இன் முறையில் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள், ஆண் முரட்டுத்தனமான ஒருவராக இருக்கலாம், ஆனால் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட ஆணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்வதை ஒரு பாலியல் வல்லுணர்வு எனக் கூற முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.

எதிர்வினை என்ன?

திருமணம் செய்த பின் நடக்கும் பாலியல் வல்லுணர்வை அங்கீகரிக்க, தொடர்ந்து இந்தியாவுக்குள் நடந்த பிரசாரம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்குப் பின்பும், இந்தியா உட்பட 36 நாடுகள் மனைவியை கணவன் பாலியல் துன்புறுத்தல் செய்வதை குற்றமாகக் கருதவில்லை.

வீட்டில் பாலியல் ரீதியிலான வன்முறைகளை ஏற்றுக் கொள்வதை சகஜப்படுத்தும் பிற்போக்கு மனநிலையை எதிர்த்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் வாழும் நாட்டில், உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் `மிகவும் பிரச்னைக்குரியது` என ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

"நீதிபதியின் கருத்து கணவன்மார்களால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்யப்படும் வன்முறையை இது சட்டப்பூர்மாக்குவதோடு மட்டுமின்றி, இந்திய பெண்கள் பல ஆண்டுகளாக திருமணத்தில் எதிர்கொள்ளும் சித்திரவதைகளை எந்த வித சட்ட எதிர்வினைகளுமின்றி சகஜமானதாக்குகிறது,"

நீதிபதி பாப்டேவின் கருத்துக்களை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என அக்கடிதத்தை எழுதியவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் தலைமை நீதிபதியிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தது, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரனமாக அமையலாம்.

"இந்திய தலைமை நீதிபதி என்கிற உயர்ந்த பதவியிலிருந்து, மற்ற நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவலர்கள், பிற சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு, நீதி என்பது இந்தியாவில் வாழும் பெண்களின் அரசியலமைப்பு உரிமை அல்ல என்கிற செய்தியை அனுப்புகிறது" என அக்கடிதம் கூறுகிறது. நீதிபதி பாப்டே உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

தலைமை நீதிபதி போப்டே இந்த விமர்சனத்திற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: