1984 தேர்தலில் 3வது முறை வென்ற எம்.ஜி.ஆர்.: அதிமுக வெல்ல அனுதாப அலை காரணமா? - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாறு

பட மூலாதாரம், Imran qureshi / bbc
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பிரதமர் இந்திரா காந்தியின் மரணம், எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவு ஆகியவற்றுக்கு மத்தியில், 1984இல் அ.இ.அ.தி.மு.க. சந்தித்த மூன்றாவது தேர்தலிலும் அக்கட்சி வென்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதற்கு அனுதாப அலை காரணமா? அந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்சனைகள் என்னென்ன?
1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்றிருந்த எம்.ஜி.ஆர். இந்த இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சில வரவேற்கத் தக்க நடவடிக்கைகளை செய்தார் என்றாலும், கடுமையான விமர்சிக்கத்தக்க நிகழ்வுகளும் இந்த ஆட்சிக் காலத்தில் நடந்தேறின.
அ.தி.மு.க. தனது வரலாற்றுச் சாதனையாகச் சொல்லிவரும் ஒரு மிகப் பெரிய திட்டத்தை இந்த கால கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். நிறைவேற்றினார். அது சத்துணவுத் திட்டம். நீதிக் கட்சியின் காலத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்டு, அடுத்ததாக காமராஜர் ஆட்சிக் காலத்தில் இன்னும் சற்று பெரிய அளவில் அது செயல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1982ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் நடத்திவந்த போராட்டம் தமிழ்நாட்டின் கவனத்தைக் கவர ஆரம்பித்தது. 1983ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, ஜெகன் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. முழு கடையடைப்பு, ரயில் மறியல் எனப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன.
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியும் பொதுச் செயலாளர் அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்தார்.
இதற்கு நடுவில், தமிழக அரசியல் வானில் ஒரு புதிய தாரகையை அறிமுகம் செய்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்தத் தாரகை ஜெயலலிதா. 1982 ஜூன் 18ஆம் தேதி அ.தி.மு.கவில் இணைந்த ஜெயலலிதாவுக்கு கொள்கை பரப்புச் செயலாளர், சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டன. அதன் உச்சகட்டமாக மாநிலங்களவைக்கும் தேர்வுசெய்யப்பட்டார் ஜெயலலிதா.

பட மூலாதாரம், Hindustan Times via getty images
இந்த ஆட்சிக்காலத்தில் விமர்சனத்திற்குரிய பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 80களின் துவக்கத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்கள் தலையெடுத்தன. அந்தக் காலகட்டத்தில் இருந்த வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை முன்வைத்து மக்களிடம் ஆதரவைத் திரட்டிவந்தன இந்தக் குழுக்கள். இதனை ஒடுக்க காவல்துறைக்கு முழு அதிகாரம் தரப்பட்டது.
போலீஸ் அதிகாரி தேவாரம் தலைமையில் இந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 11 வயது முதல் 70 வயது வரையிலான 370 பேர் கொல்லப்பட்டதாக அந்த சமயத்தில் வெளியான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மனித உரிமைகளை மனதில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
அடுத்ததாக, தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக எரிசாராயம் கடத்தப்படுவதாக தி.மு.க. குற்றம்சாட்டியது. இதற்காக ஆளும் தரப்பிற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறியது அக்கட்சி. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை பெரிதாக எழுப்பினார் வைகோ. முடிவில் எஸ்.கே. ரே என்பவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், திருச்செந்தூரில் அறநிலைத் துறையின் நகை சரிபார்ப்பு அதிகாரியான சுப்பிரமணிய பிள்ளை ஆலய வாளகத்தில் இருந்த விடுதியில் இறந்து கிடந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்த நிலையில், அதனை வெளியிட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். முரசொலி பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினார்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 1984ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதியன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவர். முதலில் ஆஸ்துமா தொந்தரவினால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. விரைவிலேயே அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மூளையில் ரத்தம் உறைந்ததால், அவருக்கு வலதுபுற கை, கால்களும் செயலிழந்தன. இதையடுத்து அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க முடிவுசெய்யப்பட்டது.
இந்த நிலையில், நாடு முழுவதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அக்டோபர் 31ஆம் தேதியன்று பிரதமர் இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். உடனடியாக அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றிருந்தார்.
இதற்குப் பிறகு, நவம்பர் 5ஆம் தேதியன்று எம்.ஜி.ஆர். தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்திராவின் மரணத்திற்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தி, தேர்தலை சந்தித்து தன் பலத்தை நிரூபிக்கவிரும்பினார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நவம்பர் 13ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில் மாநில அரசையும் கலைத்துவிட்டு, தேர்தலைச் சந்திக்கலாம் என அ.தி.மு.க. தலைவர்கள் விரும்பினர். அந்தத் தருணத்தில் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று செயல்பட்டுவந்த நெடுஞ்செழியன், பிரதமரைச் சந்தித்துப் பேசினார். இதற்கு ராஜீவ் ஒப்புதல் அளித்தார்.
இதற்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 15ஆம் தேதியன்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார். ஆனால், தி.மு.க. இதற்குக் கடும் எதிர்ப்பத் தெரிவித்தது. முதலமைச்சரின் அறிவுரை இல்லாமல் ஆளுநர் இம்மாதிரி முடிவெடுத்தது தவறான முன்னுதாரணம் என்றது தி.மு.க.

ஆனால், விரைவிலேயே தமிழகத்திற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. டிசம்பர் 24ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுவிட்டது.
எதிர்பார்த்ததைப் போலவே அ.தி.மு.க. - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. 153 இடங்களில் அ.தி.மு.க.வும் 72 தொகுதிகளில் காங்கிரசும் 4 இடங்களில் கா.கா.தே.கவும் 3 இடங்களில் ஃபார்வர்ட் பிளாக்கும் போட்டியிடுவதென்று முடிவுசெய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு கூடுதல் இடங்களை விட்டுக்கொடுத்தது அ.தி.மு.க. அதன்படி காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 27 தொகுதிகளில் போட்டியிட்டது. அ.தி.மு.க. 13 தொகுதிகளில் போட்டியிட்டது. கா.கா.தே.கா.வுக்கு (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்) ஒரு இடம் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணி முடிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், தி.மு.க கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள், ஜனதா, முஸ்லீம் லீக், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்நாடு ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தி.மு.க. 158 இடங்களிலும் ஜனதா கட்சி 17 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும் காமராஜர் காங்கிரஸ் 7 இடங்களிலும் முஸ்லிம் லீக் 6 இடங்களிலும் தமிழ்நாடு ஃபார்வர்ட் பிளாக் 3 இடங்களிலும் உழவர் உழைப்பாளர் கட்சி 10 இடங்களிலும் போட்டியிட்டன.
அமெரிக்காவில் சிகிச்சைபெற்றுவந்த எம்.ஜி.ஆர். இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக வேட்புமனு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் அருண் பட்வர்தன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இப்படி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்தபோதும் எம்.ஜி.ஆரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், எதிர்க் கட்சிகள் எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து சந்தேகங்களை எழுப்பவே, அவரைப் பற்றிய ஒரு வீடியோ படம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலில் திரையிடப்பட்டது. 'வெற்றித் திருமகன்' என்று பெயரிடப்பட்ட, 10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ, 100 பிரிண்டுகள் போடப்பட்டு, திரைப்படங்கள் துவங்குவதற்கு முன்போ, இடைவேளையின்போதோ போடப்பட்டன. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் எழுந்து அமர்ந்திருப்பது, உணவு அருந்துவது, இரட்டை இலையைக் காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தப் படம் வாக்காளர்களின் ஆர்வத்தை பெருமளவில் தூண்டியதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தேர்தல் டிசம்பர் 24ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக 19ஆம் தேதியன்று எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையும் எம்.ஜி.ஆர். உடல் நலமில்லாமல் இருப்பதால் ஏற்பட்ட பச்சாதாப உணர்வும் அ.தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தருமென்று கணிக்கப்பட்டது.
மேலவை உறுப்பினராக இருந்ததால் இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில்தான் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
டிசம்பர் 24ஆம் தேதி 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வேட்பாளர்கள் இறந்ததால் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் பெரம்பூர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தப்பட்டது. டிசம்பர் 28ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
முடிவுகள் வெளியானபோது யாருக்கும் ஆச்சரியமில்லை. எதிர்பார்த்ததைப் போலவே அ.தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றிருந்தது. 153 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 132 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 72 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 61 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கா.கா.தே.கா. இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றது.

பட மூலாதாரம், @MGR100years twitter page
தி.மு.க.வைப் பொறுத்தவரை 24 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஐந்து இடங்களிலும் ஜனதா கட்சி 3 இடங்களிலும் முஸ்லிம் லீக், சி.பி.ஐ. ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் தமிழ்நாடு ஃபார்வர்ட் பிளாக் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பத்மநாபபுரம் தொகுதியில் வி. பாலச்சந்திரன் என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்ரார்.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருந்தது. அந்தக் கூட்டணியில் கா.கா.தே.க. மட்டும் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தது. பிற அனைத்து தொகுதிகளிலும் அந்தக் கூட்டணியே வெற்றிபெற்றது. தி.மு.கவின் மத்திய சென்னை வேட்பாளரான அ.கலாநிதி மட்டும் வெற்றிபெற்றார்.
இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி தவிர, எஸ்.டி. சோமசுந்தரம் தலைமையிலான நமது கழகமும் போட்டியிட்டது. அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அபார வெற்றி பெற்றிருந்தாலும் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்ததால் உடனடியாக முதலமைச்சர் பதவியேற்கவில்லை. அமெரிக்காவுக்குச் சென்ற நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசினார். பிப்ரவரி முதல்வாரத்தில் சென்னை திரும்புகிறேன். பிறகு பதவியேற்பு குறித்து முடிவுசெய்யலாம் என அதில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். ஆனால், திருப்தியடையாத ஆளுநர் குரானா, முதலமைச்சராக இருப்பதற்கான தகுதியுடன் எம்.ஜி.ஆர். இருப்பதாக மருத்துவச் சான்றிதழைக் கோரினார். ஆனால், எம்.ஜி.ஆர். சிகிச்சைபெற்றுவந்த ப்ரூக்ளின் மருத்துவமனை அப்படி ஒரு சான்றதழைத் தர மறுத்துவிட்டது.
இந்தப் பிரச்னைகளுக்கு நடுவில் பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர்., அன்றைய தினமே ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். பிறகு பிப்ரவரி 10 தேதி எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்பார் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி ஆளுநர் மாளிகையில் எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் அன்றைய தினம் பதவியேற்கவில்லை. இந்தப் பதவியேற்பு ரகசியமாக நடந்ததாகக் குற்றம்சாட்டினார் மு. கருணாநிதி.
இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பியது தி.மு.க. "ஆளுநருக்கு உதவவும் ஆலோசனை கூறவும் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை தேவை" என்று கூறிய தி.மு.க. வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது.
நெருக்கடி முற்றிய நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி ஆளுநரை சந்தித்த எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான 16 பேர் அடங்கிய அடங்கிய பட்டியலை சமர்ப்பித்தார். அப்போது அவருடன் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் சென்றிருந்தனர். முதலில் இவர்கள் இருவருக்குமாவது பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன் எனக் கூறிய ஆளுநர், உடனடியாக அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மற்ற 14 பேரும் அடுத்த நாள் பதவியேற்றனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 பேருக்கு இந்த அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
இதற்குப் பிறகு வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி, எழும்பூர், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












