இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர்: நீதி கேட்கும் ஒரு தாயின் பல ஆண்டுகால போராட்டம்

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP via Getty Images
- எழுதியவர், சிங்கி ஷர்மா
- பதவி, பிபிசி செய்தியாளர்
மும்பையின் தானேவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மும்ப்ராவில் உள்ள ரஷீத் காம்பவுண்டில் இருக்கும் தனது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கவ்ஷா இடுகாட்டில் உள்ளது இஷ்ரத் ஜஹானின் கல்லறை. இங்கு எப்போதும் மலர்களால் அஞ்சலி செலுத்தப்படுகிறது. யாராவது ஒருவர் அங்கு நீர் தெளித்து மலர் வைத்து அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளதை பார்க்க முடியும். இஷ்ரத் ஜஹான் இன்னும் மக்களின் நினைவை விட்டு அகலவில்லை என்பதை அவரது தாயார் ஷமிமா கௌசர் இதன் மூலம் அறிகிறார்.
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு அமைப்புகள் நடத்திய புலனாய்வுகள், பல குற்றப்பத்திரிகைகள், பல கைதுகளுக்குப் பிறகு, எந்த நீதிமன்ற விசாரணையும் இல்லாமல், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு காவல்துறை அதிகாரிகளும் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இஷ்ரத்தின் தாய் தனது மகளின் கதையை அத்துடன் விட்டுவிடத் தயாராக இல்லை.
யார் இந்த ஷமிமா கௌசர்?
ஆமதாபாத்தில் நடந்த ஒரு என்கவுன்ட்டரில் இஷ்ரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து அவரது குடும்பம் பல முறை வீடுகளை மாற்றி விட்டது. ஆனால் கல்லறை மும்ப்ராவில் உள்ளது. அதனால் அவளது நினைவாக வைக்கப்படும் பூக்களின் நறுமணம், அந்த இடத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளன.
அவளது தாயார் கல்லறைக்குச் செல்வதில்லை. இது அவரது மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் மகளின் கல்லறை கேட்பாரற்றுக் கிடக்கவில்லை என்பதைத் தனது மகன்களிடமிருந்து அவர் அறிந்து கொள்கிறார். தாங்கள் கைவிடப்பட்டது போல அவளது கல்லறை கைவிடப்படவில்லை என்பதை அறிந்தார்.
கல்லறையில் வைக்கப்படும் பூக்களை யார் கொண்டு வந்து வைக்கிறார்கள் என்று ஷமிமா அறியவில்லை. அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஆனால் அது அவருக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது.
"உங்களுக்கு அந்த இறுதிச் சடங்கு நினைவிருக்கிறதா? ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்," என்று 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்ட 19 வயதான இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமிமா கௌசர் கூறுகிறார்.
"அவளது பிறந்தநாளில், ஒவ்வொரு வருடமும் இந்தத் தாய் ஃபாத்திஹா படிக்கிறார். இந்த ஆண்டு அவருக்கு வயது 36 முடிந்திருக்கும்," என்கிறார் அவர்.
ஷமிமா திருமணத்திற்குப் பிறகு பாட்னாவிலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்தார். இஷ்ரத்தின் தந்தை முகமது ஷமிம் ராசா 2002 இல் காலமானார், எட்டு பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஷமிமாவின் தோள்களில் இறங்கியது.

பட மூலாதாரம், Getty Images
ஷமிமா மற்றும் அவரது மூத்த மகள் குடும்பத்தைக் காப்பாற்ற, ஒரு மருந்துத் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். இருவரும் 12 மணி நேர ஷிப்டுகளில் மாதம் 3000 ரூபாய் வருமானத்துக்கு வேலை செய்தனர். "வீட்டு வாடகை மட்டுமே சுமார் ரூ. 1,200 ஆகி விடும். குடும்பத்தை நிர்வகிப்பது ஒரு போராட்டம் தான். நான் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன், "என்று அவர் கூறுகிறார்.
இஷ்ரத் தனது உயர்நிலைப் பள்ளி நாட்களிலிருந்தே மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து உதவியுள்ளார். 2004 ஆம் ஆண்டில், குரு நானக் கல்சா கல்லூரியில் தனது இரண்டாம் ஆண்டு அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்தார்.
"அங்குள்ள மக்கள் எங்களை நன்றாக அறிவார்கள். எங்களைப் பற்றிக் கூறப்பட்ட எந்தக் கதையையும் அவர்கள் நம்பவில்லை, "என்று அவர் கூறுகிறார்.
தொலைபேசியில் உரையாடிய அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. சுதாரித்திக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

பட மூலாதாரம், PTI
"எனது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இப்படி நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. நான் எவ்வளவு தான் போராட முடியும்?, "என்று அவர் கூறுகிறார்.
ஷமிமா இப்போது வேலை செய்வதில்லை. தனது இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மருமகளுடன் ஒற்றையறையுள்ள குடியிருப்பில் வசிக்கிறார்.
போலி என்கவுன்ட்டர்?
அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர், ஜாவேத் குலாம் ஷேக் என்கிற பிராணேஷ் பிள்ளை மற்றும் இஷ்ரத் ஜஹான் ஆகியோர் தங்களது நீல டாடா இண்டிகா காரில் அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காவல் துறை துணை கமிஷனர் டி.ஜி.வன்சாரா தலைமையிலான குற்றப்பிரிவுக் காவல் துறைக் குழு அவர்களின் காரை துரத்தியது. ஜூன் 15, 2004 அன்று, அதிகாலை 5 மணிக்கு வெறிச்சோடிய சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது இந்தத் துரத்தல். இதில் அந்த நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த நான்கு பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் காவல் துறை கூறியது.
இந்தத் துப்பாக்கி சூட்டிற்குப் பிறகு, ஆமதாபாத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்குக் காவல்துறையினர் தகவல் கொடுத்தனர், குஜராத் முதல்வர் நரேந்திர மோதி மீதான தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக இரண்டு பாகிஸ்தான் விசுவாசிகள் காஷ்மீரில் இருந்து அகமதாபாத்திற்கு பயணம் செய்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும் ஜோஹர் மற்றும் ராணா ஆகியோர் பாகிஸ்தானியக் குடிமகன்களாக அடையாளம் காணப்பட்டதாககும், ஷேக் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளூரில் செய்து கொடுத்ததாகவும் பத்திரிக்கையாளர்களுக்குக் கூறப்பட்டது.
புகாரில் இஷ்ரத்தின் பெயர் இடம்பெறவில்லை. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்காவது தீவிரவாதி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 இல், ஆமதாபாத் நீதிமன்றம் இது திட்டமிடப்பட்ட போலி என்கவுன்ட்டர் என்று தீர்ப்பளித்தது.
பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.பி. தமாங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 243 பக்க அறிக்கையில், இஷ்ரத் மற்றும் மற்ற மூவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினரைக் குற்றம் சாட்டி அறிக்கை அளித்தார் தமாங்.
முதலமைச்சரிடமிருந்து பதவி உயர்வு மற்றும் பாராட்டுகளைப் பெறுவதில் காவல்துறை அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தால் தூண்டப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.
குஜராத் அரசாங்கம் மேல் முறையீடு செய்து, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியது. குஜராத் உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையைத் தடை செய்து, என்கவுன்ட்டரை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) ஒன்றை அமைக்க உத்தரவிட்டது. 2011 ஆம் ஆண்டில், இது திட்டமிட்ட போலி என்கவுன்ட்டர் தான் என்று எஸ்ஐடி கூறியது.
இதன் பிறகு, 2011 இல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 2013 ஜூலை 3 ஆம் தேதி, சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் இது திட்டமிடப்பட்ட கொடூரக் கொலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிபி பாண்டே, டி.ஜி.வன்சாரா, என்.கே.அமீன், ஜி.எல். சிங்கால், தருண் பரோட், ஜே.ஜி.பார்மர் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகிய ஏழு காவல்துறை அதிகாரிகளை சிபிஐ குற்றம்சாட்டியது.
குஜராத் அரசாங்கம் தன் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கவில்லை. அனுமதி இல்லாத நிலையில், அனைத்து அதிகாரிகளும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மார்ச் 31, 2021 அன்று, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் காவல் துறைப் பொது ஆய்வாளர் ஜி எல் சிங்கால் உட்பட குற்றம்சாட்டப்பட்ட கடைசி மூன்று காவலர்களை விடுவித்தது.

பட மூலாதாரம், PTI
குஜராத் அரசு மற்றும் சிபிஐ-யின் பங்கு
2002 -2006 க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில், குஜராத் காவல் துறை மீது 31 சட்டவிரோத கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. இவற்றில் பாதி, கொல்லப்பட்டவர்கள், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பிற அரசியல் தலைவர்களைக் கொல்ல சதி செய்த பயங்கரவாதிகள் என்று கூறும் காவலர்களால் நடத்தப்பட்டவை.
இந்தப் போலி துப்பாக்கி சூடுகளை நடத்திய காவல் துறை அதிகாரிகளை குஜராத் அரசாங்கம் பாதுகாப்பதாகவும் ஊக்குவிப்பதாகவும் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.
இஷ்ரத் ஜஹானை சட்டவிரோதமாக கொலை செய்த குஜராத் காவல்துறை அதிகாரிகளை விடுவிப்பது முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறும் செயல் என்று ஷமிமாவின் வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கூறுகிறார்.
"பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்து குஜராத் அரசு முன்வைத்த வாதத்தை மட்டுமே சிபிஐ நீதிமன்றம் நம்பியது. எந்தவொரு பயங்கரவாதச் செயலுடனும் இஷ்ரத்துக்குத் தொடர்பு இருந்ததை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை, "என்கிறார் க்ரோவர்.

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images
குற்றம்சாட்டப்பட்ட அனைத்து குஜராத் காவல்துறையினரையும் விடுவிக்கும் உத்தரவு, இறந்தவரின் கடந்த காலக் குற்றவியல் பின்னணியைக் குறிப்பிட்டுத் துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்தவதாகவும் கடந்த காலத்தைக் குறிப்பிடுவதன் மூலம் சந்திப்புகளை நியாயப்படுத்துவதாகவும், தண்டனையிலிருந்து தப்புவதை ஊக்குவிப்பதாகவும் இருப்பதாக க்ரோவர் கூறுகிறார். "எதிரிகள் அல்லது குற்றவாளிகள் என்று அரசால் கருதப்படுபவர்களை ஒழித்து விட முடியும் என்பதைத் தான் இது காட்டுகிறது என்றும் இது கவலைக்குரிய நிலை என்றும் க்ரோவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
இஷ்ரத்தின் தாயார் மட்டும் இல்லாதிருந்தால் இந்த வழக்கைப் பற்றிய பல உண்மைகள் ஒருபோதும் வெளிவந்திருக்காது என்று க்ரோவர் உறுதியாக நம்புகிறார்.
"2004-2019 வரை ஷமிமா தனது மகளுக்கு நீதி கோரி ஒரு பெரும் போரை நடத்தினார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஷமிமா நம்பினார், "என்று அவர் மேலும் கூறுகிறார்.
2019 ஆம் ஆண்டில், குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகள் வழக்குத் தொடர முன் அனுமதி இல்லாத காரணத்தினால் தங்களை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் விடுவிக்கவும்பட்டனர்.
இந்தக் காவல்துறை அதிகாரிகளின் விடுதலையை எதிர்த்து க்ரோவர் மேல் முறையீடு செய்துள்ளார். "சிபிஐ-யின் தீவிர விசாரணைக்குப் பிறகு இஷ்ரத் கடத்தப்பட்டு, சட்ட விரோதமாக ஒரு மறைவிடத்தில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, அதன் பிறகு கொடூரமாகக் கொல்லப்பட்டது உறுதியான நிலையில், ஒரு அரசு ஊழியரைத் தண்டிக்க முன் அனுமதி தேவைப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்பு செல்லுபடியாகாது என்பது குரோவரின் வாதம்.
சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் இஷ்ரத் கடத்தப்பட்டு, ஜூன் 12, 2004 முதல் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கிறது.
இது போன்ற வழக்கைப் பொருத்தவரை, எந்தவொரு காவல்துறை அதிகாரியும் தங்கள் காவலில் உள்ள ஒருவரைக் கொல்வது அலுவல்பூர்வ கடமையின் ஒரு பகுதியாக இல்லாததால், வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை. நீதிமன்றத்தின் முன் சிபிஐயின் நிலைப்பாடு கூட, இந்த வழக்குக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக குரோவர் கூறுகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை நம்பிய நீதிமன்றம், சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் இருந்த ஆதாரத்தை நம்பவில்லை என்றும் குரோவர் கூறுகிறார்.
"இந்த விடுதலை உத்தரவின் மிக ஆபத்தான அம்சம் என்னவென்றால், காவல்துறையினர் ஒருவரை ஒரு குற்றவாளி, பயங்கரவாதி என்று கருதினால், அவர்கள் அந்த நபரை இல்லாமலே செய்துவிடுவது வெகு எளிது என்ற நிலையை நியாயப்படுத்துகிறது" என்று குரோவர் கூறுகிறார்.
காவல் துறை அதிகாரிகளை விடுவித்தது குறித்து கருத்து தெரிவிக்க குஜராத் அரசு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
நீதிக்கான தாயின் போராட்டம்
"சத்தியத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது இவ்வளவு கடினமாகவும் வாழ்வையே இழக்கச் செய்யும், சாத்தியமே இல்லாத ஒரு செயலாக இருக்கும் என்று நான் கற்பனை கூடச் செய்து பார்க்கவில்லை," என்று இஷ்ரத்தின் தாய் ஷமிமா சிபிஐக்குக் கடிதம் எழுதினார். காவல் துறை அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து இக்கடிதம் எழுதப்பட்டது.
என்கவுன்ட்டரில் சிபிஐ விசாரணை கோரி ஷமிமா 2004 ல் இந்தக் கொலைக்கு எதிராகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். 2019 ஆம் ஆண்டில், நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டதால், தான் மிகவும் சோர்ந்து போய் விட்டதாகவும் தனக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்குமாறும் அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சிபிஐயிடம், 'சட்ட நடவடிக்கைகளால் தான் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தற்போதைக்கு எந்தச் சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடவிரும்பவில்லை' என்றும் கூறினார்.
ஷமிமா 2019 ல் சிபிஐ-இடம், "குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுவது இப்போது சிபிஐ-யின் கைகளில் தான் உள்ளது. இந்திய நீதித்துறை அமைப்பு ஒருவரின் நிலை மற்றும் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நீதி அளிக்கிறது என்று தான் நான் அறிந்திருந்தேன். எனக்கு நீதி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்." என்று கூறினார்.
மனித உரிமை ஆர்வலரும், பல ஆண்டுகளாக இஷ்ரத்தின் குடும்பத்தினரைச் சந்தித்த எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் கூறுகிறார்: "தங்கள் மகள் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்படலாம், ஆனால் அதற்குத் தங்களால் விளக்கமளிக்கவோ, எதிர்வினையாற்றவோ இயலாது என்ற நிலை, அவர்களுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. ஒரு விதவைத் தாயின் தலைமையிலான இந்த தொழிலாள வர்க்க முஸ்லீம் குடும்பம் நமது நிபந்தனையற்ற பாராட்டுக்கு தகுதியானது."
விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஷமிமா இப்போது தயாராகி வருகிறார். "2019 ஆம் ஆண்டில், நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், முயற்சியக் கைவிட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
வாழ்வில் எதையோ செய்து காட்டும் துடிப்புடன் இருந்த ஒரு பெண்ணின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக மட்டுமே இந்தத் தாய் உணர்கிறார்.
"இது ஒரு நீண்ட பயணம். நான் போராடிப் போராடிக் களைத்துப் போய் விட்டேன். ஆனால் என் மகளுக்கு நீதி வேண்டும். நான் பயப்படவில்லை. நாங்கள் அனைவரும் இறக்க வேண்டும், "என்று அவர் கூறுகிறார்.
புகைப்படம் இல்லாத நினைவுகள்
1992-93 மும்பை கலவரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடும்பங்கள் தஞ்சம் அடைந்த மும்ப்ராவில் இஷ்ரத் வளர்ந்தார். தானே சிற்றோடைக்கு அருகிலுள்ள வடகிழக்கு மும்பையில் உள்ள டவுன்ஷிப்பில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் சுவர்களிலும் ஒரு கனமான மௌனமான சோகம் இழையோடியிருக்கும்.
இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிலாள வர்க்க முஸ்லிம்கள், நகரத்தில் உள்ள புறக்கணிக்கப்பட்ட சாமானியர்களின் வசிப்பிடமாக உள்ளது. இன்னும் சிலருக்கு அபிலாஷைகள், கனவுகள் மற்றும் ஆசைகளின் இருப்பிடமாகவும் உள்ளது.
"மும்ப்ராவில் எல்லோரும் இஷ்ரத்தை அறிந்திருந்தனர். சிறு குழந்தை கூட அவள் பெயரைக் கேட்டால் அவள் வீட்டுக்கு வழி சொல்லும். அவர்கள் இன்னும் அவளை நினைவில் வைத்திருக்கிறார்கள் " என்று ஷமிமா நினைவு கூர்கிறார்.
மும்ப்ராவில் இஷ்ரத் ஜஹானிடம் கல்வி பயின்ற குழந்தைகள் அனைவரும் இப்போது வளர்ந்துவிட்டதாக ஷமிமா கூறுகிறார்.
ஆனால், இஷ்ரத்தின் குடும்பத்தைப் பொறுத்தவரை, 19 வயதான அவளது புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறார்.
ஜூன் 15, 2004 மாலை, பத்திரிகையாளர்கள் மும்ப்ராவில் உள்ள இஷ்ரத்தின் இல்லத்திற்கு வந்து இஷ்ரத்தின் புகைப்படத்தைக் கேட்டனர். "முதலில், அவர்கள் அவளது கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்றும் சில படிவங்களை நிரப்ப விரும்புவதாகவும் கூறினர்," என்கிறார் ஷமிமா.
நீல வானம் மற்றும் கூரை வீடுகளின் பின்னணியில், நீல சல்வார் கமீஸில் நிற்கும் இஷ்ரத்தின் இந்தப் புகைப்படம் தான் ஊடகங்கள் பயன்படுத்தியது
"எங்களிடம் இருந்த இஷ்ரத்தின் ஒரே புகைப்படம் அதுதான். இது ஒரு ஸ்டுடியோவில் கிளிக் செய்யப்பட்டது, "என்கிறார் ஷமிமா. அவர் எதை எதிர்த்துப் போராடுகிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அன்பு துணிச்சலை அளிக்கும். அவர், இஷ்ரத் மீது அன்பு கொண்டுள்ளார்.
எல்லா நேரங்களிலும் கல்லறையில் மணம் வீசும் மலர்கள், இஷ்ரத்தின் கதைக்கும் நீதிக்கும் மரியாதைக்கும் நடக்கும் போராட்டத்திற்கும் சாட்சியாக விளங்குகின்றன.
பிற செய்திகள்:
- அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி
- அலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா?
- கொரோனா அலை: உத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூடத் தடை, கும்பமேளாவுக்கு விலக்கு
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?
- புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












