"அடிமைகளின் கூடாரமானது அதிமுக" - செந்தில் பாலாஜி சிறப்புப்பேட்டி

செந்தில் பாலாஜி
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் மக்கள் ஏற்றுக் கொள்ளாத சட்டங்களை நிறைவேற்றும் ஆளும் அதிமுக, மக்கள் விரோத அரசுதான் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் கரூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி.

இந்த தொகுதியில் ஆளும் கட்சி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து களம் காணும் செந்தில் பாலாஜி, தமது பார்வையில் கரூர் தொகுதியில் உள்ள தேர்தல் நிலவரம், வாக்குகளை பெற பட்டுவாடா நடப்பதாக வெளிவரும் தகவல் உள்பட பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார். அவரது பேட்டியில் இருந்து...

திமுக சார்பில் போட்டியிடும் உங்களுக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ச்சியாக 11 மணி நேரம், நடந்தே வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறேன். 10ல் 8 வீடுகளில் உதயசூரியன் கோலத்தை வீட்டு வாசலில் போட்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என கரூர் தொகுதி மக்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். நிச்சயமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

பதவிக்காகத்தான் நீங்கள் திமுகவில் இணைந்துள்ளதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?

இதுவரை எந்த பத்திரிகையிலும் நான் பெயர் குறிப்பிட்டுப் பேசியதில்லை. யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியை யார் கொடுத்தார் என்பதையும், அதை காப்பாற்றிக் கொள்வதற்கு என்னவெல்லாம் அவர் செய்தார் என்பதையும் நினைத்துப் பார்த்து அவர்கள் இப்படி பேச வேண்டும்.

யாரும் செய்யாத மிகப்பெரிய துரோகத்தை அவர்கள் (அதிமுகவினர்) செய்துள்ளனர். முதல்வர் பதவிக்காக எப்படி தவழ்ந்து சென்றார் என்பதையும், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் எல்லோரும் எப்படி வாக்கு சேகரித்தார்கள் என்பதையெல்லாம் மறந்து விட்டு இப்படி பேசுகிறார்கள்.

அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'என் வாழ்நாளில் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது' என முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) கூறினார். அந்த அதிமுக இப்போது இருக்கிறதா? பாஜகவிடம் கட்சியை அடமானம் வைப்பது வேறு. தமிழக மக்களை அடமானம் வைப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

மக்கள் ஏற்றுக் கொள்ளாத சட்டங்களை நிறைவேற்றும் இந்த அரசு, மக்கள் விரோத அரசு தான். அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் பெயர்களும், சின்னங்களும் வேறாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே தலைமைதான். இரண்டுமே ஒன்றுதான். அதனால் தமிழக மக்களை காப்பாற்றி மாநில உரிமையை பாதுகாக்கவிருக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், Senthil balaji/twitter

உங்கள் மீதான போக்குவரத்து ஊழியர்கள் நியமன ஊழல் குற்றப்பத்திரிகை மற்றும் வருமான வரி சோதனைகளை தேர்தல் நேர நெருக்கடிகளாக பார்க்கிறீர்களா?

அந்த வழக்குக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என நீதிமன்றமே என்னை விடுவித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பின்பு, "அதிமுக" அடிமைகளின் கூடாரமாகி விட்டது என நான் வெளியில் வந்தபோது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு அது. தேர்தலைக் காரணம் காட்டி வழக்கை வேகப்படுத்தி என் மீது அந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள். சட்டப்படியான போராட்டங்களோடு நான் அதை எதிர் கொள்வேன். பொய்யான குற்றச்சாட்டு என நான் நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்டுவேன்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், Senthil Balaji/twitter

இதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. ஒரு குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டு பணியிடம் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, இந்த அரசு எப்படி மீண்டும் அதே துறையில் வேலை கொடுக்கிறது? எனவே யாருடைய பின்புலம் இதில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் காலங்களில் வருமான வரித்துறையினரை அரசு இயக்கும்போது தான் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுகிறது. இதை தேர்தல் ஆணையம் தான் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும் பகுதிகளில், கரூர் முக்கிய இடத்தில் உள்ளதாக கருதப்படுகிறதே. இது உண்மையா?

அரவக்குறிச்சியில் நான் ஏற்கனவே போட்டியிட்டபோதும் இதே கருத்துக்கள்தான் வெளியில் பேசப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் இப்போது பாஜக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், ஆரத்தி எடுப்பதற்கு பணம் கொடுக்கிறார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் கூட்டமில்லை என்பதற்காக வந்து நிற்கக் கூடிய மக்களுக்கு பணம் கொடுக்கின்றனர்.

வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என சொல்லக்கூடிய வேட்பாளர்களே அதை செய்கின்றனர். அதைப்பற்றியெல்லாம் பேசாமல் ஏன் என்னை மட்டும் குறிவைத்து இதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டும்? திமுகவின் திட்டங்களை முன்வைத்து மட்டுமே நான் கரூரில் தேர்தல் பிரசாரம் செய்கிறேன்.

திமுக தலைமையிலிருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே நீங்கள் பிரசாரத்தை துவங்கியது விமர்சனத்துக்குள்ளானதே...

என்னுடைய தொகுதியில் நான் பிரசாரத்தை தொடங்கவில்லை. 'இல்லம் தோறும் உதயசூரியன்' என்ற தலைப்பில் மக்களை சந்தித்த நிகழ்ச்சி அது. கரூரில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அந்த பணிகளைத் தொடங்கினோம். நான் தொடங்கிய இடம் கரூர் என்பதால் இந்த விமர்சனம் எழுந்தது.

சுவர் விளம்பரம் உட்பட அனைத்து தேர்தல் வேலைகளையும் தலைமை அறிவித்த பின்புதான் தொடங்கினோம். அதற்கு முன்னர் கட்சி ரீதியான பணிகளை மட்டுமே மேற்கொண்டோம்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், Senthil balaji/twitter

ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடாமல் கரூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

என்னுடைய வாக்கு கரூர் தொகுதியில் தான் உள்ளது. ஒரு வேட்பாளர் எப்போதும் அவருடைய வாக்கை, அவருக்கே போட வேண்டும் என ஆசைப்படுவார். அந்த வகையில் என்னுடைய ஓட்டு எனக்கே போட வேண்டும் என எனக்கு விருப்பம்.

இடைத்தேர்தல் என்றால் அரவக்குறிச்சி, சட்டமன்றத்தேர்தல் என்றால் கரூர் தொகுதியில் போட்டியிடவே நான் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்தேன்.

என்னை எதிர்த்து நிற்பவர்கள் யார் என நான் எப்போதும் பார்ப்பதில்லை. தளபதி எனக்கு வாய்ப்பு கொடுத்தார் நான் போட்டியிடுகிறேன் அவ்வளவுதான். நான் எப்போதும் பின்னால் வருபவர்கள் பற்றி யோசிப்பதில்லை. நான் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில், நான் யாரையும் குறைத்து மதிப்பிடவுமில்லை. என்னுடைய இலக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் திமுக ஜெயிக்க வேண்டும் என்பதுதான்.

அதிமுக அல்லது திமுகவின் வாக்கு வங்கிகளை அமமுக பாதிக்குமா?

களத்தில் இப்போது போட்டி என்று கூட சொல்லமுடியாது, ஸ்டாலின் தான் முதல்வர் என மக்கள் உறுதியாக முடிவு செய்து விட்டனர். அதிமுக ஒற்றை இலக்கத்தில் கூட ஜெயிக்க மாட்டார்கள், படுதோல்வியை சந்திக்க போகிறார்கள். மேலும், நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் பற்றி பேச எனக்கு விரும்பவில்லை, பேசுவது சரியாகவும் இருக்காது. எங்களுடைய இலக்கு, கரூர் மாவட்டத்தில் பதிவாக கூடிய வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கை திமுக எடுக்க வேண்டும். முதுகெலும்பில்லாத ஆட்சியாளர்களை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மக்களும் முடிவெடுத்துள்ளனர். அதைத்தான் தேர்தல் முடிவுகளும் காட்டப்போகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: