தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அம்பத்தூர் திமுக வேட்பாளர் மீது சொம்பு திருட்டு வழக்கா? #BBCFactCheck

திமுக, வழக்கு, உண்மை

பட மூலாதாரம், JOSEPH SAMUEL FB

படக்குறிப்பு, திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஜோசப் சாமுவேல்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோசப் சாமுவேல் மீது ஆறாயிரம் ரூபாய் மதிப்புடைய 'பழைய சொம்பை' திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவான சமூக வலைதள செயல்பாட்டார்கள் இதை அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் உண்மை குறித்து ஆராய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் ஜோசப் சாமுவேல் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுவுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தோம். அதில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் 2011-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக ஜோசப் சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். குற்ற எண் 789/2011. ஆறாயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் வேஸ்ட்(Copper Waste) அதாவது செம்புக் கழிவை சிலருடன் சேர்ந்து அவர் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் இதுவரை எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தனது பிரமாணப் பத்திரத்தில் ஜோசப் சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட காப்பர் வேஸ்ட்தான் பழைய செம்பு என சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. அவர் மீது திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது உண்மை என்றாலும் தொடர்புடைய பொருள் 'பழைய சொம்பு' அல்ல, செம்புக் கழிவு!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கில் தொடர்பு இருந்தாலே தேர்தலில் நிற்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்றை கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேறு சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. ஜோசப் சாமுவேலைப் பொறுத்தவரை அவர் மீதான வழக்கு விசாரணைக்கே வரவில்லை என்பதால் அவர் தேர்தலில் நிற்பதற்குத் தடை ஏற்படவில்லை.

அம்பத்தூர் தொகுதியில் ஜோசப் சாமுவேலுடன் சேர்த்து மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அதிமுக சார்பில் அலெக்சாண்டர், நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு தென்னரசன், அமமுக சார்பில் வேதாச்சலம், மக்கள் நீதி மய்யம் சார்பில் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: