"கருத்துக் கணிப்புகள் பொய், மக்கள் ஏமாற மாட்டார்கள்" - பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேட்டி

பட மூலாதாரம், Facebook
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரபரப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ஹரிஹரனிடம் பேசினார்.
மக்கள் மத்தியில் உங்களுக்கான ஆதரவு எப்படி இருக்கிறது?
மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.
பாஜகவின் கொள்கை மக்களுக்கு புரியுமா? சின்னம் பிரபலமாக இருக்கிறதா? போன்ற பல விமர்சனங்கள் இருக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அப்படி ஒரு பொய் பிரச்சாரத்தின் மூலம் பாஜகவிற்கு எதிரான வியூகங்களை அமைத்தனர்.
இம்முறை அதை எல்லாம் தவிடுபொடியாக்கி, அதிக இடங்களை கைப்பற்றி, பாஜக சரித்திரம் படைக்க இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக, மக்களை குழப்பும் வகையில் திமுக ஜெயிக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். எத்தனை கருத்து கணிப்புகள் வந்தாலும், கண்டிப்பாக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

அதிமுக, பாஜக இடையே தேர்தல் பிரசாரங்களில் ஒற்றுமை இல்லை என்ற பார்வைக்கு உங்களின் பதில் என்ன?
இதே கேள்வியை நீங்கள் திமுகவிடம் கேட்க வேண்டும். ராகுல்காந்தி இதுவரை ஒருமுறை கூட எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் ஸ்டாலினின் பெயரை குறிப்பிடவில்லை. இதைப்பற்றி எல்லாம் பேசாமல், அதிமுக பாஜக கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை என பேசப்படுகிறது. தமிழக முதல்வர் எனக்காக அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தல் வேட்பாளராக அவரவர் தொகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.
பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை அதிமுக, பாஜக இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கிறது.
தேர்தல் களத்தில் மோடி அலை, எடப்பாடி அலை என இரு பெரும் அலைகள் ஒன்றாக சேர்ந்து மிகப்பெரும் எழுச்சியாக தமிழகத்தில் உருவாகியுள்ளது.
பெண்கள் குறித்த எதிர் கூட்டணியினரின் பேச்சை வைத்து அதிமுக மற்றும் பாஜக பெண்கள் வாக்குகளை கவர முயற்சிக்கிறது என்ற விமர்சனத்திற்கு உங்களின் பதில் என்ன?
பாஜக அரசியலுக்காகவோ, வாக்குகளுக்காகவோ எதையும் செய்வதில்லை. தமிழக முதல்வரின் தாயார் குறித்து பேசியதற்கு மானம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் வர வேண்டும் என கருதுகிறேன்.

பட மூலாதாரம், Facebook
பெண்கள் குறித்து திண்டுக்கல் லியோனி தரக்குறைவாக பேசியிருந்தார். இதைப் பார்த்துக்கொண்டு எப்படி பேசாமல் இருக்க முடியும்? பாஜகவை பொறுத்தவரை சில விஷயங்களுக்கு அரசியலைத் தாண்டி கட்டாயம் குரல் கொடுப்போம். தாராபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி, பெண்கள் மீதான திமுகவின் தரக்குறைவான விமர்சனங்களை தான் '2ஜி மிஸ்ஸைல்' என குறிப்பிட்டார்.
இந்தமுறை தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் பெண்களாக இருக்கின்றனர். அவர்கள் மொத்தமாக எங்கள் பக்கம் வந்துள்ளனர். சாது மிரண்டால் காடு தாங்காது என்பது போல், ஒரு பெண் மிரண்டால் அரசியல் களம் தாங்காது என்பதை திமுகவினர் உணரவிருக்கின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்ற பார்வையை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பாஜகவால் சிறுபான்மையினருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தான் அச்சுறுத்தல் இருக்கிறது. ஏனென்றால் சிறுபான்மையினரை வாக்குவங்கி என அவர்கள் கூறுகின்றனர். எங்களை பொருத்தவரை சிறுபான்மையினர் என்ற வார்த்தையைக்கூட உபயோகப்படுத்துவதில்லை. அனைவரும் சமம் அரவக்குறிச்சியில் தொகுதியில் உள்ள அனைவரையும் சமமாகத் தான் நான் பார்க்கிறேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது?

பட மூலாதாரம், Facebook
அது எனக்கு தெரியாது. நான் ஜோசியர் இல்லை. எனக்கு ஆருடம் பார்க்க தெரியாது. நான் சாதாரண விவசாயி. ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்பவன். யார் ஜெயிப்பார்கள் என சொல்லுமளவிற்கு எனக்கு அறிவு கிடையாது. ஆனால், அதிமுக கூட்டணி ஜெயிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரியும்.
கமல்ஹாசன், தினகரன் ஆகியோரால் அதிமுக மற்றும் பாஜகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?
எல்லோரும் அரசியல் களத்தில் இருக்கின்றனர். அவரவர் வேலைகளை அவரவர் செய்து வருகின்றனர். மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேச வேண்டும். என்னை பொறுத்தவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












