ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி விலகலும் அரசியல் பிரவேசமும் - அழகா ஆபத்தா?

ஐஏஎஸ்
படக்குறிப்பு, இந்திய குடிமைப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலில் இறங்கியுள்ள சரவணகுமார் (ஐஆர்எஸ்), சசிகாந்த் செந்தில் (ஐஏஎஸ்), அண்ணாமலை (ஐபிஎஸ்)
    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய குடிமைப்பணியில் சேர்ந்த 10, 15 ஆண்டுகளிலேயே ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வில் பணியில் இருந்து வெளியேறி வரும் செயல்பாடு, ஜனநாயக அமைப்பில் அடுத்த கட்டத்துக்கு அந்த அதிகாரிகளை அழைத்துச் செல்கிறதா அல்லது அதே அமைப்பில் அந்த அதிகாரிகள் எதிர்கொண்ட அழுத்தத்தின் வெளிப்பாடா போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

இதில் குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் குரூப் 1 அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளாக பணியாற்றிய கர்நாடகா மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கர்நாடகா மாநில பிரிவு ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதில் சசிகாந்த் சர்மா வருவாய்த்துறை துணை ஆணையராக பணியாற்றியவர். அண்ணாமலை நகர காவல்துறை துணை ஆணையாளராக இருந்தவர். ஐஆர்எஸ் பணியில் கூடுதல் ஆணையாளராக இருந்தவர் சரவண குமார்.

இவர்கள் மூவருமே பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வெளியேறிய இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த ஆண்டு அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கின்றனர்.

அண்ணாமலையும் சரவணகுமாரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிலும், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்துள்ளனர்.

அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணிக்கு வந்ததற்காக இவர்கள் மூவரும் தெரிவிக்கும் காரணம், "கட்டுப்பாடுகளுடன் கூடிய அரசுப் பணியை விட வரம்புகளுக்கு உட்படாத அரசியல் பணியில் அதிகமாக மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கை அடிப்படையில் புதிய பயணத்தை தேர்வு செய்தோம்," என்று கூறுகின்றனர்.

இவர்களில் சசிகாந்த் செந்தில், சமூக சமத்துவம் மீது எப்போதுமே தமிழ்நாடு நம்பிக்கை கொண்டிருப்பதால், இங்குள்ள சிறார்கள், வகுப்புக்கலவரங்களுக்காக வீதிகளில் பங்கேற்பதை விட பள்ளிகளுக்கு செல்வதையே தாம் விரும்புவதாக கூறினார். அப்போது அவர், தான் ஏன் காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால், இதே சசிகாந்த் செந்தில் சரியாக ஓராண்டுக்கு முன்பு பதவி விலகபோது, தான் பணியாற்றிய தக்ஷின கன்னடா நகர மக்களிடம் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் இருந்து பாதியிலேயே விலகுவதற்காக மன்னிப்பு தெரிவித்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

சசிகாந்த்

பட மூலாதாரம், Sasikanth Senthil

படக்குறிப்பு, சசிகாாந்த் செந்தில்

40 வயதாகும் சசிகாந்த் செந்தில், காஞ்சிபுரம் மாவட்டம், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பதவியேற்றார். திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், 2009லிருந்து 2012ஆம் ஆண்டு வரை பெல்லாரியில் துணை ஆணையராக இருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தாதரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்தவரும் கேரளாவைச் சேர்ந்தவருமான ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

கண்ணன் கோபிநாத்

பட மூலாதாரம், KANNAN GOPINATH

படக்குறிப்பு, கண்ணன் கோபிநாதன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி - தற்போது சமூக செயல்பாட்டாளர்

அப்போது பிபிசியிடம் பேசிய அவர், ''காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும் என எனக்குள் ஏதோ ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆனால் என் கருத்துகளை வெளிப்படுத்த முடியாமல் என் அரசு வேலை என்னைத் தடுக்கிறது. எளிமையான மக்களின் உரிமைகளுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தேன். ஆனால், நாட்டில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அது சரியானது அல்ல என என் மனம் சொல்கிறது,'' என்று பணி விலகலுக்கான காரணத்தை விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்த சசிகாந்த் சர்மா, ஜனநாயகத்தின் அடிப்படை சமரசம் செய்து கொள்ளப்படுவதாகக் கருதியதால் அரசுப் பணியைத் துறந்ததாகத் தெரிவித்தார். பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது என்றும் சசிகாந்த் சர்மா கூறினார்.

இப்போது கண்ணன் கோபிநாதன் சமூக ஆர்வலராக, சமூக செயல்பாட்டாளராக பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்த இரு அதிகாரிகளும் சமூக பணியில் தங்களுக்கான வரம்புகள், அரசுப்பணிகளில் உள்ளதால் பணிகளைத் துறப்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். இதில் சசிகாந்த் தற்போது காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார்.

சசிகாந்த் செந்தில்

பட மூலாதாரம், SASIKANTH SENTHIL

படக்குறிப்பு, சசிகாந்த் செந்தில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி - தற்போது காங்கிரஸ் உறுப்பினர்

ஆனால், இவர்களுக்கு முன்னதாகவே கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு மே மாதமே தமது பதவியை ராஜிநாமா செய்தார். தொடக்கத்தில் அரசியலுக்கு வராமல் மக்கள் பணியாற்றப்போவதாக அவர் கூறி வந்தார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து சமீபத்தில் ஐஆர்எஸ் அதிகாரியான சரவண குமாரும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவரும், அரசுப் பணியில் இருப்பதை விட அரசியல் பணியில் இருந்தால், மக்களுடன் நேரடியாகவும் கட்டுப்பாடுகளின்றியும் தொடர்பில் இருக்க முடியும் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

மோதி

பட மூலாதாரம், PMINDIA

படக்குறிப்பு, ஐஎஸ் அதிகாரிகளின் பணித்திறன் தொடர்பாக டெல்லியில் உரையாடும் பிரதமர் நரேந்திர மோதி

சுருங்கி வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை

இந்தியாவில் இந்திய குடிமைப்பணியின் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை, 1951ஆம் ஆண்டில் அகில் இந்திய சேவை சட்ட விதிகள் மூலம் வரையறுக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் மாநில மக்கள்தொகை விகிதாசாரப்படி இடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்ட்டு வருகின்றன.

ஆனால், 2009 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் எடுக்கப்பட்டபோதும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு குறைவாகவே பணியிடங்கள் நிரப்பட்டு வருகின்றன.

இதில் மிக, மிகக் குறைவாக 2009ஆம் ஆண்டில் 580 பேர் மட்டுமே குடிமைப்பணியில் சேர்ந்தார்கள். 2010இல் 965, 2011இல் 880, 2012 (1037), 2013 (1000), 2014 (1291), 2015 (1129), 2016 (1079), 2017 (980), 2018 (782), 2019 (896), 2020 (796) என்ற வகையிலேயே அதிகாரிகள் தேர்வானார்கள்.

இந்தவகையில் நாடு முழுவதும் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 1400 என்ற அளவிலும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 900 என்ற அளவிலும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கு காரணம், பணியில் சேர்ந்த சில அதிகாரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 1000க்கு 10, 20 என்ற அளவில் பணிக்காலம் முடியும் முன்பே அதிகாரிகள் விருப்ப ஓய்வில் செல்வதுதான் என மத்திய பொதுப்பணித்தேர்வாணைய ஆண்டறிக்கை புள்ளிவிவரம் கூறுகிறது.

புள்ளியியல் அளவில் ஐஏஎஸ் பணிக்காக இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 6,396 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிரப்பப்பட்ட அளவு என்னவோ 4,926. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு 1,470.

இதுவே, ஐபிஎஸ் அதிகாரிகள் என எடுத்துக் கொண்டால் அனுமதிக்கப்பட்ட அளவு 4,802. ஆனால், நிரப்பப்பட்ட இடங்களோ 3,894. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு 908.

ஐஎஃப்எஸ் அதிகாரிகள் என எடுத்துக் கொண்டால் அனுமதிக்கப்பட்ட அளவு 3,157. நிரப்பட்ட இடங்கள் 2,597. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு 560.

மோதி

பட மூலாதாரம், PMINDIA

படக்குறிப்பு, ஐபிஎஸ் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

LBSNAA எனப்படும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 160 பேருக்கு மட்டுமே ஒரு பிரிவில் பயிற்சி தரப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரித்தால் பயிற்சியின் தரம் பாதிக்கப்படும் என பயிற்சி மைய நிர்வாகம் கருதுகிறது. மேலும், இதுதான் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்குரிய எண்ணிக்கையாகவும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டு குடிமைப்பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகும் அதிகாரிகள், வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே திடீரென விருப்ப ஓய்வில் செல்ல, பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பணியில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளில் பலரும் அரசியல் அழுத்தங்கள், பணியிட உளைச்சல்கள், பதவி சமநிலையின்மை, விரும்பிய வாழ்க்கை சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு, அரசு அதிகார ஆசையை கடந்து வேறு துறையில் ஏற்படும் நாட்டம், மனச்சோர்வு, குடும்ப சூழ்நிலை, ஊதிய ஏற்றத்தாழ்வு தொடர்பான மனப்பான்மை போன்றவற்றையை பணி விலகலுக்கான காரணங்களாக அந்த அதிகாரிகள் பட்டியலிடுகிறார்கள்.

அண்ணாமலை

பட மூலாதாரம், ANNAMALAI

படக்குறிப்பு, அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி - தற்போது பாஜக உறுப்பினர்

ஆனால், சில அதிகாரிகளின் திடீர் ராஜிநாமா குறித்து சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் பார்வை வேறு விதமாக உள்ளது.

அதற்கு அவர், "சமூக பணிகளில் சேருவதற்காக என்னைப் போன்றோர் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசுப் பணிக்கு தேர்வாகி மக்கள் பணியாற்றினோம். அதில் சில ஆண்டுகள் அனுபவங்களைப் பெற்ற நிலையில் பலதரப்பட்ட மக்களை சந்தித்தோம். அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வெறும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட அதிகாரியாக இருந்து கொண்டு தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்ததன் விளைவே, எங்களைப் போன்றோரின் அரசியல் வருகை," என்று பதிலளித்தார்.

தேவசகாயம் பார்வை

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி. தேவசகாயம், இவ்வாறு முன்கூட்டியே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குரூப் 1 அதிகாரிகளின் நிலை தொடர்பாக எழுதிய வலைபதிவில், ஐஏஎஸ் அதிகாரிகள் என வரும்போது இந்த நாட்டின் அடித்தள கட்டமைப்பை வழிநடத்துவது இளம் ஐஏஎஸ் அதிகாரிகள்தான் என்று கூறினார். இந்த அதிகாரிகளில் பலர்தான் இன்று பதவிக்காலத்துக்கு முன்பே ராஜிநாமா செய்பவர்கள் என்பதால் அவர்களின் பிரச்னைகளையும் பதவி விலகத்தூண்டும் எண்ணங்களையும் உரிய காலத்தில் ஆராய்ந்து தீர்க்காவிட்டால் இது மிகப்பெரிய பிரச்னையாக வெடிக்கலாம் என்று தேவசகாயம் எச்சரிக்கிறார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசில் மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் இணைச்செயலாளர், துணைச்செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை நேரடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பதவிகளில் கிட்டத்தட்ட 60 சதவீத இடங்களுக்கு, இதுவரை ஐஏஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மட்டுமின்றி தேசிய அளவிலும் அவ்வப்போது சில இளம் அதிகாரிகள் முன்கூட்டியே பதவியில் இருந்து விலகுவது தொடர்கிறது.

ஷா

பட மூலாதாரம், SHAH FAESAL

படக்குறிப்பு, ஷா ஃபேசல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷா ஃபேசல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு கண்ணன் கோபிநாதன், சிகாந்த் செந்தில் அடுத்தடுத்து சில மாதங்களில் விருப்ப ஓய்வில் சென்றனர். இவர்களுக்கு எல்லாம் சமூக கோபம் இருந்ததை பதவி விலகிய பிறகு அவர்கள் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி மூலம் உணர முடிந்தது.

இதில் கண்ணன் கோபிநாதனின் பதவி விலகலை இன்னும் அவர் பணியாற்றிய யூனியன் பிரதேச பிரிவுக்கான மத்திய உள்துறை ஏற்காததால் அவர் பணிக்கு திரும்புமாறு கொரோனா வைரஸ் தீவிரமானபோது கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக தன்னால் பணிக்கு திரும்ப முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர், ஒரு தன்னார்வலராக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறினார்.

யூனியன் பிரதேச ஐஏஎஸ் பிரிவில் 2011ஆம் ஆண்டில் சேர்ந்த காஷிஷ் மிட்டல் (30), தனக்கு அருணாசல பிரதேசத்தில் இடமாற்ற உத்தரவு கொடுக்கப்பட்டதை ஏற்காமல் பதவி விலகுவதாக தெரிவித்தார். பதவி விலகியபோது நீத்தி ஆயோக் (இந்திய கொள்கை வகுப்புக்குழு) அமைப்பின் கூடுதல் முதன்மைச் செயலாளராக அவர் பணியாற்றினார்.

சலுகையுடன் அரசியலில் குதித்த அதிகாரிகள்

அபரஜிதா

பட மூலாதாரம், APARAJITHA SARANGI

படக்குறிப்பு, அபரஜிதா சாரங்கி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி - தற்போது பாஜக எம்.பி (புவனேஸ்வர், ஒடிஷா)

சில அதிகாரிகளின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை ஏற்காமல் மாதக்கணக்கில் காலம் தாழ்த்தும் மத்திய அரசு, ஒடிசா மாநில பிரிவைச் சேர்ந்த அபரஜிதா சாரங்கி என்ற ஐஏஎஸ் அதிகாரியின் ராஜிநாமா கடிதத்தை ஒரு சில நாட்களிலேயே ஏற்றுக் கொண்டது. அந்த அதிகாரி புவனேஸ்வர் தொகுதியில் 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது எம்.பி ஆக இருக்கிறார்.

2005ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஓ.பி. செளத்ரி என்ற அதிகாரியும் கடந்த ஆண்டு விருப்ப ஓய்வில் சென்ற ஒரு சில நாட்களில் பாஜகவில் சேர்ந்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முன்கூட்டியே ராஜிநாமா முடிவை எடுப்பது தவறான முன்னுதாரணமாகி விடாதா என்று அண்ணாமலையிடம் கேட்டபோது, "இன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கு நிறைய பேர் வருவது நல்ல அறிகுறியாகவே நான் பார்க்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு ஒருவர் பல போட்டித்தேர்வு முறைகளை கடந்து தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை அறிவோம். அதற்காக அனுபவித்த சோதனைகள், வலிகளை கடந்து வேலையை உதறி விட்டு மக்கள் பணிக்கு வருகிறோமென்றால் அதற்கு எவ்வளவு திடமான முடிவை நாங்கள் எடுத்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று அண்ணாமலை கூறினார்.

தனியார் துறையில் பரிணமிக்கும் அதிகாரிகள்

ஆனால், அரசியலுக்குள் நுழையாமல் தனியாக தொழில் முனைவோராக பரிணமித்த சில அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

சையத் சபாஹத் அஸீம்

சையது

பட மூலாதாரம், Syed Sahabat Azim

படக்குறிப்பு, மருத்துவர் சையத் சபாஹத் அஸீம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சையத் சபாஹத் அஸீம், 10 ஆண்டுகளாக ஐஏஎஸ் பணியில் இருந்த பிறகு விருப்ப ஓய்வில் சென்றார். அடிப்படையில் மருத்துவரான இவர், குளோகல் ஹெல்த் கேர் சிஸ்டெம்ஸ் என்ற பெயரில் மருத்துவமனைகளை தொடங்கினார்.

ராஜன் சிங்

ராஜன் சிங்

பட மூலாதாரம், Rajan Singh

படக்குறிப்பு, ராஜன் சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

1996ஆம் ஆண்டு கேரளா மாநில ஐபிஎஸ் அதிகாரியான ஐஐடி கான்பூரில் படித்த ராஜன் சிங், 8 ஆண்டுகள் காவல் பணியில் இருந்தார். திருவனந்தபுரம் நகர காவல் ஆணையாளராக பணியாற்றிய அவர் பணியில் இருந்து விலகியதும் கான்செப்ட்அவுல் என்ற ஆன்லைன் கல்விப்பயிற்சி தளத்தை அமைத்து ஆன்லைன் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ரோமன்

பட மூலாதாரம், Roman Saini

படக்குறிப்பு, ரோமன் சைனி

ரோமன் சைனி

ரோமன் சைனி, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வில் 16 வயதிலேயே எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர். எம்பிபிஎஸ் படித்து முடித்ததும் 2014இல் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார். மத்திய பிரதேச மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே Unacademy என்ற பெயரில் சொந்தமாக ஒரு ஆன்லைன் பயிற்சி நிறுவனத்தை உருவாக்கி ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இவர்கள் அனைவரின் வயதும் 40களிலும் 30களிலும் உள்ளது.

"என்னைப் பொருத்தவரை, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளின் ஆணி வேரில் இருந்து பிரச்னைகளை சரிப்படுத்த விரும்பினேன். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்" என்று அண்ணாமலை கூறினார்.

இதே கருத்தை ஆமோதிப்பவராக பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமாரும் காணப்படுகிறார்.

பாஜக

பட மூலாதாரம், Saravana kumar

படக்குறிப்பு, சரவணகுமார், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி (வலமிருந்து முதலாவது)

"ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசுப்பணியில் இருந்து விலக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கலாம். ஆனால், இன்னார்தான் வர வேண்டும் என்ற தகுதியில்லாத ஒரே துறையாக உள்ள அரசியலில் ஆர்வத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற அரசு பணிகளில் பணியாற்றியவர்கள் வருவது ஆரோக்கியமான நிலையின் அறிகுறி" என்று அவர் கூறுகிறார்.

"அரசியலுக்குள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்று வருவது மட்டுமின்றி, படித்தவர்கள் பலரும் அவர்கள் ஊடகத்துறையினராக இருந்தாலும் சரி, வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி, மருத்துவர்களாக இருந்தாலும் சரி - அவர்கள் அரசியலிலும் சேர்ந்து மக்கள் பணியாற்ற அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இவர்களெல்லாம் வராவிட்டால் எதிர்கால அரசியலின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு நேரலாம்," என்று சரவணகுமார் தெரிவித்தார்.

இவர் ஐஆர்எஸ் பணியில் இந்திய வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய நிலையில், அதில் இருந்து விலகி வழக்கறிஞராக இரண்டு ஆண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி விட்டு தற்போது அரசியல் பாதையை தேர்வு செய்திருக்கிறார்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதற்கென பிரத்யேக தகுதிகள் ஏதும் நிர்ணயிக்கப்படாதது ஜனநாயகத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களும் அந்தத்துறையில் பரிணமிக்க கிடைத்த வாய்ப்பாக பார்க்கப்படுவதில் தவறேதும் கிடையாதுதான். ஆனாலும், அரசுப் பணியில் முழுமையாக பணிக்காலத்தை நிறைவு செய்யாமல், பாதியிலேயே ராஜிநாமா செய்து விட்டு அரசியலுக்கு வரும்போது, அதுவரை அவர்களின் நிர்வாக பயிற்சிக்காகவும், ஞானத்துக்காகவும் அரசு செலவிட்ட தொகை வீணாகி விடக்கூடாது என்ற கவலை சமூக ஆர்வலர்களிடம் இருக்கிறது.

மறுபுறம் தேவசகாயம் முன்பே சுட்டிக்காட்டியது போல, இளம் அதிகாரிகளின் திடீர் ராஜிநாமா செயல்பாடுகளின் பின்னணி பிரச்னையை அணுகி சரிப்படுத்தா விட்டால், அது ஜனநாயக அடிப்படை கட்டமைப்புக்கே பாதிப்பாகலாம். இது தொடர்பான விவாதத்தையும் இளம் முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கை தூண்டக்கூடியதாக மாறலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: