பிகார் தேர்தல்: தேஜஸ்வி, நிதிஷ் குமார், பாஜக, காங்கிரஸ் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images
பிகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அனேகமாக காலை 11 மணிக்கு பிறகு அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது ஓரளவுக்கு கணிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்கலாம் என்று தெரிவித்துள்ளன. இந்த கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மறுபுறம் ஆளும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பிடித்துள்ளது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற முனைப்புடன் இந்த கூட்டணி தேர்தல் களம் கண்டுள்ளது.
கருத்துக் கணிப்புகளின்படி முடிவுகள் வருமானால், பிகார் மாநிலத்தில் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. அது நடந்தால் அவரே இந்தியாவின் முதலாவது இளம் முதலமைச்சராக பதவியேற்கக் கூடியவராக விளங்குவார்.
இந்த தேர்தல் முடிவுகள், பிகாரில் தற்போது மாநில அமைச்சர்களாக இருக்கும் நந்த் கிஷோர் யாதவ் (பாட்னா சாஹேப்), பிரமோத் குமார் (மோதிஹாரி), ராணா ரந்தீர் (மதுபன்), சுரேஷ் சர்மா (முஸாஃபர்பூர்), ஷ்ராவன் குமார் (நாலந்தா), ஜெய் குமார் (தினாரா), கிருஷ்ணானந்தன் பிரசாத் வெர்மா (ஜெஹானாபாத்) ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
பிகாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 7ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் மூன்றாம் கட்டமாக 78 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும் நடந்தது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி இந்த தேர்தலில் சுமார் மூன்று கட்டங்களிலும் தலா 53 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் அதற்கு அரசியல் கட்சிகளுக்கோ அவை அங்கம் வகிக்கும் அணிக்கோ குறைந்தபட்சம் 122 இடங்கள் தேவைப்படும்.
2015 தேர்தலுக்கு பிறகு மாறிய தேர்தல் களம்
பிகாரில் தற்போது ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அரசில் முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுஷில் குமார் யாதவும் உள்ளனர். ஆனால், இந்த இரு கட்சிகளும் 2015இல் மாநில சட்டப்பேரவை தேர்தலை பிகார் எதிர்கொண்டபோது நேரெதிர் களத்தில் இருந்தன.
2015ஆம் ஆண்டு தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தன. அப்போது இருவரும் சேர்ந்து உருவாக்கிய மகா கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்தன. அந்த தேர்தலில் ஆர்ஜேடிக்கு 80, ஜேடியுக்கு 71, காங்கிரஸுக்கு 27 என்ற அளவில் இடங்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து மாநில முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக ஆர்ஜேடியைச் சேர்ந்த தேஜஸ்வியும் பதவியேற்றனர்.
அந்த தேர்தலில் பாஜகவுக்கு 53 இடங்களே கிடைத்தன. இந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளால் ஆர்ஜேடி, காங்கிரஸ் உடனான கூட்டணி உறவை முதல்வர் நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். பிறகு அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். அப்போது முதல் நிதிஷ் குமாருக்கு எதிரான கடும் விமர்சனங்களை முன்வைக்கும் வழக்கத்தை ஆர்ஜேடி கொண்டிருக்கிறது.
15 ஆண்டுகளாக தொடரும் முதல்வர் நிதிஷ்
பிகாரில் மாநில முதல்வராக நிதிஷ் குமார் 2005ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகிறார். 2005இல் ஆட்சி அமைத்தபோது அம்மாநிலத்தில் பெரும்பான்மை பலத்தை எந்த கட்சியும் பெறவில்லை. ஆனால், அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் ஜேடியுக்கு 88 இடங்கள் கிடைத்து அதிக வாக்குகள் பெற்ற முதலாவது பெரிய கட்சியாக மாநிலத்தில் அக்கட்சி உருவெடுத்தது. அப்போது 55 இடங்களைப் பிடித்த பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை நிதிஷ் குமார் எதிர்கொண்டு ஆட்சியைப் பிடித்தார்.
2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜேடியு 115 இடங்களிலும் பாஜக 91 இடங்களிலும் வென்றது. ஆர்ஜேடி அப்போது வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இம்முறையும் பாஜகவுடனே கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார்.
ஆனால், 2015இல் அரசியல் களம் மாறி, ஆர்ஜேடியுடன் நிதிஷ் உறவு பாராட்டியதன் அடையாளமாக அதனுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்த அவர், இரண்டே ஆண்டுகளில் தேர்தல் உறவை முறித்துக் கொண்டு பழைய நட்புக் கட்சியான பாஜகவுடன் கரம் கோர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
மகா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும்
பிகார் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, ஜேடியு அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியும், தேஜஸ்வி தலைமையிலான ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மகா கூட்டணியும்தான் நேரடி போட்டியில் இருக்கின்றன.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முகேஷ் சாஹ்னியின் விகாஸ் இன்சான் கட்சி (விஐபி), ஜீத்தன் ராம் மன்ஜியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளும் உள்ளன.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி அங்கம் வகிக்கிறது. சமீபத்தில் அவர் மரணம் அடைந்தார். எனினும், அம்மாநிலத்தில் அவரது மகன் சிராக் பாஸ்வான் ஆளும் நிதிஷ் குமாருக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தி தேர்தலில் பிரசாரம் செய்தார். அதேசமயம், மத்தியில் மோதி அரசுடன் அவர் இணக்கமான உறவையே பாராட்டி வருகிறார்.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு 122 இடங்களிலும் பாஜக 121 இடங்களிலும் போட்டியிட்டன. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு தனது பங்கில் இருந்து 7 இடங்களை ஜேடியு கொடுத்தது. பாஜக, விஐபி கட்சிக்கு தனது பங்கில் இருந்து 11 இடங்களை கொடுத்தது.
ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது இடத்தில் கட்சியை வழிநடத்தி வரும் தேஜஸ்வி, ஒட்டுமொத்த தேர்தல் பரப்புரையையும் வழிநடத்தி தனது தலைமையிலான மகா கூட்டணியின் முகமாக விளங்கி வருகிறார். அவர் மட்டுமே 251 மிகப்பெரிய தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கெடுத்தார்.
இந்த தேர்தலில் ஆர்ஜேடி 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 29 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பிகாரில் மகா தலித்துகளின் உண்மை நிலை என்ன?(காணொளி)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













