பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் திடீரென நிதிஷுக்கு பெரும் சவாலாக மாறியது எப்படி?

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேஜஸ்வி யாதவ்
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி

ரமேஷ் பிரசாதுக்கு, தினமும் ஏழு கிலோ உருளைக்கிழங்கால் ஆன சமோஸாக்களை விற்று, நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் லாக்டவுன் முடிந்து பல மாதங்கள் ஆகியும், ரமேஷின் கடை முன்பு போல் இல்லை.

இப்போது அவர் அதிகபட்சமாக, இரண்டு கிலோ மட்டுமே சமோஸாக்கள் செய்கிறார் அதுவும் மீந்து விடுகிறது. மக்களிடம் வாழவே பணம் இல்லை என்றால், எங்கே சமோசா வாங்க போகிறார்கள் என்று ரமேஷ் கேட்கிறார்.

லாலு பிரசாத் யாதவ், தீவிர அரசியலில் இருந்தபோது, பிகாரில் ஒரு முழக்கம் இருந்தது - அது, சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பிகாரில் லாலு இருப்பார் என்பதுதான்.

ஆனால், இப்போது லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார். அது சமோசா விற்பனையாளர்களை விரக்தி அடையச் செய்திருக்கிறது.

தேஜஸ்வி யாதவ் தொகுதியான ரகோபூரில் உள்ள ரமேஷின் கடை, தேர்தல் நடவடிக்கைகளின் மத்தியிலும் கூட, லாக் டவுனின் முந்தைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை. இந்த கடையில் ரமேஷ் தனது 15 வயது மகனை உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

"நிதீஷ்குமார் லாக் டவுன் அமலில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. எங்களது குடும்பத்திற்கு எங்களால் இன்னமும் உணவளிக்க முடியவில்லை என்ற அனுதாபம் யாருக்கும் இல்லை" என்கிறார் ரமேஷ்.

நிதீஷ் குமார் 15 ஆண்டுகள் முதல்வராக உள்ளார், இனி மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்

ராகோபூரில் யாதவ் வாக்காளர்கள் தான் மிக அதிகம். பிஜேபி தனது வேட்பாளர் சதீஷ் ராயை களத்தில் இறக்கியுள்ளது. சதீஷ் ராய் 2010-ல் ராப்ரி தேவியை தோற்கடித்தார், ஆனால் 2015-ல் தேஜஸ்வியிடம் தோல்வியடைந்தார்.

ராகோபூரில் யாதவ் வாக்காளர்கள் 1.25 லட்சம் பேர், அதன் பின் மிக அதிகமாக ராஜபுத் வாக்காளர்கள் சுமார் 40,000 பேர்உள்ளனர் .

ஹஜிப்பூரில் உள்ள பிரபாத் கபர் தைனிக் நாளிதழின் தலைவர் சுனில் குமார் சிங் கூறுகையில், சதீஷ் ராய் இந்த முறை நல்ல வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் ராகேஷ் ரோஷனை எல்ஜேபி வேட்பாளராக நிறுத்தி ஆர்ஜேடிக்கு இதை எளிதாக்கி விட்டார் சிராக் பாஸ்வான்.

ராகேஷ் ரோஷனுக்கு ராஜ்புத், சாதியின் பெயரால் வாக்கு கிடைத்தால், தேஜஸ்வி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images

இங்குள்ள சுனில் குமார்சிங், ராகேஷ் ரோஷன் குறித்து ரகோபூரில் உள்ள ராஜபுத்திரர்களிடையே ஒரு கோஷம் எழுப்பப்படுகிறது. முதலில் குலம்; பின் மலர். அதாவது, முதலில் தனது சாதியின் மரியாதையை காப்பாற்ற வேண்டும், பின்னர் பிஜேபி யின் மலர் (தாமரை) காப்பாற்றப்படும். 'சிராக் பாஸ்வன் , தேஜஸ்வியின் வெற்றியை உறுதிப்படுத்த, வேண்டுமென்றே ராகேஷ் ரோஷனை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறாரோ என்று பல முறை தோன்றுகிறது," என்கிறார்.

ஆனால், எல்ஜேபி செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அன்சாரி இதை மறுக்கிறார்.

ராகேஷ் ரோஷன் எல்ஜேபியின் ஐ.டி குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இங்கே அவர் போட்டியிடுவது ஏற்கனவே முடிவாகி விட்ட ஒன்று என்பது அவரது விளக்கம்.

ஆனால், அஷ்ரப் அன்சாரியின் வாதத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிராக் பாஸ்வான் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளபோது, ஒரு முக்கியமான இடத்தில் இப்படி ஒரு வேட்பாளர், களமிறக்கப்பட்டது சந்தேகத்தை உருவாக்குகிறது என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இங்கிருந்து தேஜஸ்வி வெற்றி பெற்றால் அது அவருக்கு இரண்டாவது வெற்றியாக இருக்கும். இங்கிருந்து, அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் 1995 மற்றும் 2000. தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2005-ம் ஆண்டு, தேஜஸ்வி யின் தாய் ராப்ரி தேவி யும் இங்கிருந்து எம்.எல்.ஏ.ஆனார்.

லாலு இல்லாத தேஜஸ்வியின் அரசியல்

1977 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது 29வது வயதில் சாப்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் லாலு யாதவ்.

2015 பிகார் சட்டசபை தேர்தலில் லாலு யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தனது 26வது வயதில் ராகப்பூர் தொகுதிஎம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேஜஸ்வி முதல் முறை எம்.எல்.ஏ.வாக ஆனதோடு, பிகார் மாநில துணை முதல்வரானார்.

லாலு யாதவ் கல்லூரி நாட்களில் அரசியலுக்கு வந்தார். 1973-ல் பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராக லாலு யாதவ் பதவி வகித்தார். அதற்குப் பிறகு பிகாரில் அவரது அரசியல் நாட்டம் குறையவே இல்லை.

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images

தேஜஸ்வி யாதவ் 9ஆம் வகுப்புக்குப் பிறகு கிரிக்கெட் மோகத்தால், சரியாக படிக்கவில்லை. ஆனால் மாணவர் பருவத்தில் அவர் தேர்தல் அரசியலில் காலடி வைத்ததோடு மட்டுமல்லாமல் தேர்தலில் வெற்றி வெற்றி பெற்று துணை முதல்வரானார். 31 வயதான இவர் தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நிதீஷ் குமருக்கு இவர் கடுமையான போட்டியாக இருந்தால், , அவர் நாட்டின் இளம் முதல்வராக ஆகலாம். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் தேர்தல் அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டபோது தேஜஸ்வி அரசியலில் நுழைந்தார்.

2013 அக்டோபரில் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார், அவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக, 1997-ம் ஆண்டில், தீவன ஊழல் வழக்கில் லாலு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், அவரது மனைவி ராப்ரி தேவியிடம் முதல்வர் நாற்காலி ஒப்படைக்கப்பட்டது.

ராப்ரி தேவி, தவ்லீன் சிங்கிற்கு அளித்த பேட்டியில், தாம் முன்பு குடும்பத் தலைவியாக இருந்ததாகவும், ஆனால், லாலு திடீரென அவரை முதல்வராக ஆக்கிவிட்டதாகவும் கூறினார்.

2013-ல் லாலு யாதவ் மீண்டும் ஒரு நெருக்கடியை சந்தித்தார், இந்த முறை அவர் தனது இளைய மகன் தேஜஸ்வி யாதவை முன்னிறுத்தினார், அவர் அரசியலில் புதியவராக இருந்தாலும், லாலு மீண்டும் அதிகாரத்தை தனது குடும்பத்திற்கு உள்ளேயே வைத்துக் கொண்டார்.

அப்துல் பாரி சித்திகி, ரகுவன்ஷ் பிரசாத் சிங் மற்றும் ராமச்சந்திர பூர்வே போன்ற அனுபவமிக்க தலைவர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் லாலுவால் முன்நிறுத்தப்படவில்லை. இதற்கிடையில், 2014 இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது, ராஷ்ட்ரீய ஜனதாதளம் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வென்றது . ராப்ரி தேவி சாரண் தொகுதி மற்றும் லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி, பாட்லிபுத்ரா தொகுதியிலும் கூட தங்கள் மக்களவை இடங்களை இழந்தனர்.

2014 மக்களவை தேர்தல்வரை தேஜ்ஸ்விக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால், 2015 தேர்தலில் லாலு யாதவ், தனது இரண்டு மகன்களையும் களத்தில் நிறுத்தி விட்டார்.

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், @YADAVTEJASHWI

தேஜஸ்வியை தனது பாரம்பரிய தொகுதியான ரகோபூர் தொகுதியிலும், மூத்த மகன் தேஜ் பிரதாப் ஐ மஹுவா, சட்டசபை தொகுதியிலும், வேட்பாளராக லாலு நிறுத்தினார்.

இரு மகன்களும் தேர்தலில் வெற்றி பெற்றனர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், நிதீஷ் குமார் மற்றும் லாலு யாதவ் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து அமோக வெற்றி பெற்றனர்.

2015ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தாலும், நிதிஷ் குமார் முதல்வரானார்.தேஜஸ்வி துணை முதல்வரானார். 16 மாதங்களுக்கு நிதிஷின் கீழ் ஆட்சி நீடித்தது. 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இணைந்து கொண்டார்.

26 வயதில் தேஜஸ்வி துணை முதல்வராக ஆனார்

தேஜஸ்வி யாதவின் உண்மையான அரசியல் 2017 ல் இருந்து தொடங்குகிறது. அவர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார். நிதீஷ் குமார், அவையில் தனது அதிகாரத்தை அவமதித்ததாக ஒரு எதிர்கட்சித் தலைவராக அவர் குற்றம் சாட்டியபோது, நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து அரசாங்கத்தில் பணியாற்றுவது கடினம் என்று பதிலளித்தார்.

ஆனால் தேஜஸ்வி யாதவ், தந்தையின் அரசியல் நிழலில் இருந்து விலகி, தனது அரசியல் அடையாளத்தை காட்ட இதை ஒரு வாய்ப்பாக கருதினார் . இதற்கிடையில், 2019 பொதுத் தேர்தல் வந்தது. முழு பிரச்சாரத்தையும் அவரது கட்சியின் நட்சத்திர பிரச்சாரகராக தேஜஸ்வி யாதவ் கையாண்டார்.

2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் தேஜஸ்வி பெரிய, பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தார். பிரதமர் மோதியை, வேலை திண்டாட்டம் மற்றும் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக அந்த பேரணிகளில் தேஸ்வி தாக்கினார்.

தனது தந்தையின் சமூக நீதி அரசியலைப் பற்றி அவர் பேசினார். தனது தந்தை , பீகாரில் மனுசாஸ்திரம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடினார் என்றும் ஏழைகளுக்கு நியாயம் வழங்கினார் என்றும் அவர் கூறினார்.

2019 ல் பெகுசராயில் நடைபெற்ற ஒரு தேஜஸ்வி யாதவ் பங்கெடுத்த பேரணி எனக்கு நினைவிருக்கிறது. தேஜஸ்வி, பெகுசராய் மக்களவை தொகுதியில் இருந்து தனது கட்சி வேட்பாளர் தன்வீர் ஹசனுக்காக உரையாற்றினார்.

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், @YADAVTEJASWI

மைதானம் மிகவும் பெரியதாக இல்லை. மே மாதம் கடுமையான வெப்பம். தேஜஸ்வி உரையை விட ஹெலிகாப்டர்களைப் பார்ப்பதில் அதிக மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஹெலிகாப்டரை சுற்றியிருந்த கூட்டம், தேஜஸ்வி பொதுக்கூட்டத்தை விட அதிகமாக இருந்தது

தேஜஸ்வி, பேச்சு மக்களை அதிகம் கவரவில்லை. மனு சாஸ்திரம், நிலப்பிரபுத்துவம் போன்ற ஒரு சில சொற்களைப் பல முறை தேஜஸ்வி பயன்படுத்தினார். அந்த உரையைக் கேட்க வந்த யாருக்கும் நிலப்பிரபுத்துவம் மற்றும் மனு சாஸ்திரம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கவில்லை.

2019 மக்களவை தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு இடத்தைகூட பெறவில்லை. மீண்டும், மிசா பாரதி தோல்வியுறார். தேஜ் பிரதாபின் மாமனார் சந்திரிகா ராய், சாரன் லோக்சபா தொகுதியை இழந்தார். தற்போது, சந்திரிகா ராய், ஜே.டி.யு.,வில் உள்ளார்.

ஆனால் 2020 இல், தேஜஸ்வியின் அரசியல் 2019-ஐ விட முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

தற்போது, பிரமாண்ட பொதுக்கூட்டங்களில், திரளான மக்கள் கூட்டம் கூடி வருகிறது. இளைஞர்கள் தான் அதிகம், கூட்டம் மிக ஆக்ரோஷமாக தேஜஸ்வியை வரவேற்கிறது. தேஜஸ்வியின் பேச்சு கூட மாறிவிட்டது.

இப்போது வேலைவாய்ப்பு, கல்வி, சாலைகள் மற்றும் சுகாதாரம் பற்றி அவர் பேசுகிறார். பீகாரிகளுக்கு பெரும் துயரமான லாக் டவுன் பிரச்னையை அவர் எழுப்புகிறார். அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் பிகாரில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவது பற்றி அவர் பேசுகிறார்.

ஒரு வருடத்திற்குள் எப்படி தேஜஸ்விக்கு இவ்வளவு வலு கிடைத்தது?

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பாட்னாவின் எ.என். சின்ஹா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் டி.எம். திவாகர் கூறுகையில், "கொரோனாதொற்று குறித்த லாக் டவுன் பிகார் அரசியலை மாற்றியுள்ளது. லட்சக்கணக்கான பிகாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி விட்டனர். அவர்கள் அனைவரும் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிகார் அரசின் உதவி திட்டங்கள் தோல்வியடைந்தன. இந்த முறை சாதி மற்றும் மதத்தை விட வேலையில்லா திண்டாட்டம் பெரிய பிரச்னையாக உள்ளது. தேஜஸ்வி குழு இதை புரிந்து கொண்டு, வேலை வாய்ப்பை தேர்தல் வாக்குறுதியாக திட்டமிட்டுள்ளது . அரசாங்க வேலைகளில் காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வாக்குறுதியும் பிகாரிகளை பாதித்திருக்கிறது. இளைஞர்கள் இங்கு படித்து தயாராகிறார்கள், ஆனால் காலியிடங்களை நிரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.''

இந்த முறை, கொரோனா, நிதீஷ் குமாரை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற முடியும் என்று டி.எம். திவாகர் கூறுகிறார்.

பிகாரில், ஏபிபி செய்தி சேனல் நிருபர், ஜனேந்திர குமார், கடந்த ஒரு மாதமாக தேஜஸ்வியின் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு சென்றுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலை விட, கூட்டத்திலும், அவரது உரையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று ஜனேந்திரா சுட்டிக்காட்டுகிறார்.

"மக்கள் கூட்டம் முரட்டுத்தனமாக உள்ளது, இளைஞர்கள்தான் மிக அதிகம். கூட்டத்தில் உள்ள உற்சாகம் பார்க்க வேண்டிய ஒன்று . இந்த வரவேற்பை காணும் 31 வயது நிரம்பிய தேஜஸ்விக்கும் உற்சாகம் நிரம்பியுள்ளது. தேஜஸ்வி தனது உரையில் கவனம் செலுத்துகிறார். வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துகிறார். ஆனால், சர்சையை ஏற்புடுத்தாத பல விஷயங்களையும், எதிர்கட்சிகள் தங்களை குறை கூற வாய்ப்பு அளிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அவர் பேசவில்லை,'' என்கிறார் ஜனேந்திரா.

நிதீஷ் குமாரின் பேரணிக்கு, தான் சென்றதாகவும், ஆனால் அங்கு தேஜஸ்வி கூட்டத்துடன் ஒப்பிடுகையில், மக்கள் நெரிசல் இல்லை என்றும் ஜனேந்திரா கூறுகிறார்.

தேஜஸ்வியின் பேரணிக்கு ஏன் இப்படி ஒருகூட்டம் வருகிறது? இந்த கேள்விக்கு பதிலளித்த, ஜேடி (யு) செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத்,"தேஜஸ்வியின் பேரணியில் கூட்டம் இருக்கிறது, ஆனால் மக்களில் பாதிப்பேர் காணவில்லை. பெண்கள் எங்கே? '' தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியை நீங்கள் பார்த்தால், பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ''

தேஜஸ்வியின் பேரணியில் பெண்களின் எண்ணிக்கை இல்லை என்பதை ஜனேந்திரா ஒப்புக்கொள்கிறார்.

கடந்த சில மாதங்களாக பிகார் தேர்தல்களை கவனித்து வரும் இளம் பத்திரிகையாளர் விஷ்ணு நாராயண், பெண்கள் தேஜஸ்வியின் பேரணியில் குறைவாக உள்ளனர், ஆனால் என் டி ஏ பேரணியில் வரும் பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள், அவர்கள் தாமாக அவரது உரையை கேட்க வரவில்லை என்று கூறுகிறார். 10 லட்சம் அரசு வேலை தருவதாக வாக்குறுதி அளித்திருப்பது சாதி வலைக்கு அப்பாற்பட்டது என்று கூறும் விஷ்ணு இது ஒவ்வொரு சாதியினருக்கும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

தேஜஸ்வியின் தேர்தல் பிரசாரத்தில் லாலு இல்லையா ?

லூலு

பட மூலாதாரம், Getty Images

தேஜஸ்வி யாதவின் முழு தேர்தல் பிரசாரத்திலும் லாலு யாதவின் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை.

அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, தாம்தான் கூட்டணியின் முகம் என்றும், அதனால்தான் தனது படம் என்றும் அவர் கூறினார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ஒருவர், லாலு யாதவின் புகைப்படம் ஏன் தேஜஸின் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றுகேட்டபோது,பெயர் குறிப்பிடாதது பற்றி அவர் கூறினார், "லாலுஜியின் பிம்பம் பீகாரில் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே மிகவும் நன்றாக இல்லை. லாலு காலத்தின் போது இருந்த சட்டம் ஒழுங்கு பற்றி கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன, இது மக்களிடையே மீண்டும் எதிர்மறையான விவாதத்தை ஏற்படுத்தக்க்கூடாது,'' என்கிறார்

பிகார் மாநிலத்தில் உள்ள தாவூத்நகரைச் சேர்ந்த அனிஷ் உத்பால் குஜராத் வித்யாபீட்டில், பிஎச்டி பட்டம் பெற்று வருகிறார். பீகார் தேர்தல் குறித்து பல பகுதிகளில் மக்களை சந்தித்து, பிரச்னைகள் மற்றும் தலைவர்களின் கோரிக்கைகளை ,அவர் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்.

அவர் கூறுகிறார், "யாதவ் வாக்காளர்களை தேஜஸ்வி குறித்து ஒற்றுமையாக இருக்கிறாரகள் , ஆனால் யாதவ் அல்லாத ஓபிசி நிதீஷின் மீது அதிருப்தியாக உள்ளபோதிலும், தேஜஸ்வியை ஏற்றுக்கொள்வதில் சங்கடத்தில் உள்ளனர் . கோயரி மற்றும் குர்மி ,யாதவ்களை தங்கள் போட்டியாளர்களாக கருதுகின்றனர். வேலை மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை ஒரு வெற்றிதான் , ஆனால் லாலு யாதவின் ஆட்சியின் நினைவுகள் யாதவ் அல்லாத ஓ.பி.சி.மக்களின் மனதிலிருந்து இன்னும் அகலவில்லை.''

இந்த தேர்தல் நிதீஷ் குமாருக்கு, கொரோனாவை விட மிகவும் கடினமாகி விட்டது என்று அனிஷ் கருதுகிறார், ஆனாலும் இந்த தேர்தல் தேஜஸ்விக்கு ஒரு தலைபட்சமாக இருக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: