பிஹார் தேர்தல் 2020: நிதிஷ் குமாரின் கடைசி தேர்தல் ஆளும் கூட்டணிக்கு கை கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Images
பிஹார் மாநில சட்டமன்றத்துக்கு மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. மொத்தம் உள்ள 16 மாவட்டங்களில் 78 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
சீமாஞ்சால், மித்திலாஞ்சல் ஆகிய பகுதிகள் இந்த வாக்குப்பதிவு தொகுதிகளில் அடங்கும். இதில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள்.
மற்றொரு சிறப்பம்சமாக இந்த தொகுதிகளில் இரு முனை போட்டி இல்லாமல் மும்முனைப்போட்டி நிலவுகிறது.
பிஹாரில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதியும் 94 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் நடந்தன. அதைத்தொடர்ந்து நவம்பர் 7ஆம் தேதி 78 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதன் மூலம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவின் முதலாவது மாநிலமாக பிஹார் விளங்கியிருக்கிறது.
மூன்றாம் கட்ட தேர்தலில், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, அசாதுதீன் ஒவைஸியின் எஐஎம்ஐஎம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் எம்.பி பப்பு யாதவின் ஜன அதிகார் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
2015ஆம் ஆண்டில் மொத்தம் உள்ள 78 இடங்களில் 54 இடங்களில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி கைப்பற்றியது. அதே சமயம், பாரதிய ஜனதா கட்சி, லோக் ஜன சக்தி, ராஷ்ட்டரிய லோக் சமதா கட்சி, ஜித்தன் ராம் மன்ஜியின் ஹிந்துஸ்தான் அவாம் கட்சி அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வென்றது. இதில் பாஜக மட்டும் அதிகபட்சமாக 19 இடங்களில் வென்றது.
இம்முறை மகா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை. அதனுடன் முன்பு தேர்தல் களம் கண்ட மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி, தேசிய கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கவில்லை.
மூன்றாம் கட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, 35 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 37 இடங்களிலும் அவற்றின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. முகேஷ் சாஹ்னியின் இன்சான் கட்சி, ஐந்து இடங்களில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதேவேளை, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 46 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இந்த இறுதி கட்ட தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 12 பேர் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். சராய்ரஞ்சன் தொகுதியில் சபாநாயகர் விஜய் குமார் செளத்ரி, சுபால் தொகுதியில் விஜேந்திர பால், மோதிஹாரி தொகுதியில் பிரமோத் குமார் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
சீமாஞ்சல் பகுதி, பொதுவாகவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பு வாக்காளர்களைக் கொண்டிருக்கும். அங்கு யாதவ் சமூகத்தினரும் முஸ்லிம் சமூகத்தினரும் அதிகம் வாழ்கிறார்கள். ஆனால், இம்முறை, குஷ்வாஹா, ஒவைஸி, பப்பு யாதவ் ஆகியோரின் கட்சிகள் இங்கு களத்தில் இருப்பதால், யாதவ் சமுதாயம், முஸ்லிம் சமுதாய வாக்குகள் பிரியலாம் என்ற நிலை நிலவுகிறது.
2010ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் இணைந்து தேர்தலை சந்தித்தபோது மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 இடங்களில் 206 இடங்களில் வென்றன. ஆனாலும், சீமாஞ்சலில் உள்ள கிஷண்கஞ்ச் பகுதியில் அவற்றால் வெற்றியை ஈட்ட முடியவில்லை. அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் நான்கு இடங்களில் வென்றன.
மித்திலாஞ்சல் பகுதியில் தர்பாங்கா, மதுபாணி, சமஸ்திபூர், மதேபுரா, சஹார்சா, சுபால், சீதாமாஹி ஆகிய மாவட்டங்களில் 34 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இது தவிர, முசாஃபராபூர் பகுதியில் ஆறு இடங்கள், கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான் பகுதியில் 12 இடங்களிலும் தேர்தல் நடந்தது.

பட மூலாதாரம், AFP
கடந்த முறை, மிதிலாஞ்சல் பகுதியில் பாஜகவால் 6 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அந்த வகையில் தற்போதைய தேர்தல் அக்கட்சிக்கு கடும் போட்டியானதாக இருக்கும்.
இதற்கு முன்பு நடந்த இரு கட்ட தேர்தல்களிலும் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் மட்டுமின்றி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மாநில அளவில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அத்துடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பிஹார் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மூன்றாம் கட்ட தேர்தலுக்கு முன்பாக அதன் 33 தலைவர்களை கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கட்சி ரீதியிலாக நடவடிக்கை எடுத்தது. அதே வேளை, இந்த ஆண்டு நடக்கும் தேர்தல்தான், தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்ற முழக்கத்தையும் தேர்தல் பிரசாரத்தின்போது பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்வைத்து வாக்காளர்களை சந்தித்தார்.
அவரது முழக்கமும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரசார உத்திகளும் எந்த அளவுக்கு கை கொடுத்தது என்பது, நவம்பர் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போதுதான் தெரிய வரும்.
பிற செய்திகள்:
- கமல்ஹாசன் பிறந்தநாள்: 66 சுவாரஸ்ய தகவல்கள்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
- டிரம்ப் ஆற்றிய 17 நிமிட உரை: அதில் இருக்கும் உண்மைகள் என்ன?
- காலாவதியாகும் நிலையில் 'டெட்' தேர்வு சான்றிதழ்: பீதியில் பட்டதாரிகள்
- அமெரிக்க தேர்தலில் 71 சதவீத வாக்கு பெற்ற தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி - யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












