தமிழ்நாடு தேர்தல் வரலாறு: திமுக-வுக்கு திருப்பு முனையாக அமைந்த 1989 சட்டமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட்டாலும், எம்.ஜி.ஆரின் மூன்றாவது ஆட்சிக் காலம் அமைதியானதாக இல்லை. ஈழப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. அதன் அதிர்வுகள் தமிழகத்திலும் எதிரொலித்தன. எம்.ஜி.ஆரின் அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தது. நிதியுதவியும் செய்தது.
தி.மு.கவைப் பொறுத்தவரை 'டெசோ' (TESO) என்ற அமைப்பை வைத்து ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்திக்கொண்டிருந்தது. இந்தத் தருணத்தில் இலங்கை விவகாரத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த ராஜீவ் காந்தி, இப்பிரச்சனையில் ஒரு தீர்வை எட்ட விரும்பினார். அதன்படி 1987 ஜூலை 29ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை புலிகள் அமைப்பு முழுமையாக ஏற்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதி காக்கும் படை அத்துமீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் ஒரு புறமிருக்க தமிழ்நாட்டிற்கு உள்ளேயும் அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்திருந்தன. 1987ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். பெரும் வெற்றிபெற்றிருந்தாலும் அவருக்கான ஆதரவு குறைந்துகொண்டே வந்ததை அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவுகள் சுட்டிக்காட்டின.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடக்காமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை 1986 பிப்ரவரியில் நடத்தியது தமிழக அரசு. மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்த பிற இடங்களில் இந்தத் தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட எட்டு முறை அறிவிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டு, மீண்டும் அறிவிக்கப்பட்டு இந்தத் தேர்தல்கள் நடைபெற்றன.
இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 97 நகராட்சிகளில்70 நகராட்சிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.கவும் காங்கிரசும் தலா 11 நகராட்சிகளை கைப்பற்றி ஒட்டுமொத்தமாக 22 இடங்களையே பெற்றன.
ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 380 இடங்களில் தி.மு.க. 138 இடங்களையும் அ.தி.மு.க. 129 இடங்களையும் கைப்பற்றின. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 68 இடங்களைக் கைப்பற்றியது. இது அ.தி.மு.கவுக்கு மிகப் பெரிய தோல்வி என்றது தி.மு.க.
இதையடுத்து மேலும் ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக, தமிழக மேலவையைக் கலைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

பட மூலாதாரம், KSR
இதற்கு நடுவில் வன்னியர்களுக்கு இருபது சதவீத தனி ஒதுக்கீடு தர வேண்டுமெனக் கோரி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியது வன்னியர் சங்கம். வன்னியர்கள் அதிகமுள்ள வட மாவட்டங்கள் ஸ்தம்பித்துப் போயின. இந்தப் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் உடல்நலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். இதையடுத்து கட்சி ஜெயலலிதா அணி என்றும் ஜானகி அணி என்றும் இரண்டாக உடைந்தது. மறைந்த முதல்வரின் மனைவியான ஜானகி எம்.ஜி.ஆர் பக்கம் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கவே, 1988 ஜனவரி ஆறாம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் அவர். ஆனால், அரசு தன் பெரும்பான்மையை நிரூபிக்கும் தினத்தில் சட்டப்பேரவையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, 1988 ஜனவரி 30ஆம் தேதி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு. தமிழ்நாட்டில் மாநில அரசு கலைக்கப்படுவது, இது இரண்டாவது தடவை.
இதற்கடுத்த ஓராண்டு காலத்திற்கு தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சியே நடைபெற்றது. பிறகு, ஒரு வழியாக 1989 ஜனவரி 21ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த நேரத்தில் தமிழக தேர்தல் களம் நான்காக பிளவுபட்டுக் கிடந்தது. ஒரு பக்கம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரத்திற்கு நெருக்கத்தில் வந்திருந்தது தி.மு.க. ஆட்சியைப் பறிகொடுத்திருந்த அ.தி.மு.கவோ, ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு அணியாகவும் ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டிருந்தது.
காங்கிரசைப் பொறுத்தவரை, அ.தி.மு.கவின் இரு அணிகளில் ஒன்றுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க விரும்பினாலும் பல காரணங்களால் அது நடக்கவில்லை. ஆகவே, "காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்" என்றுகூறி தனித்து நிற்க முடிவுசெய்தது. 1967ல் தி.மு.கவிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பிறகு, தொடர்ந்து இரு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்றுடனேயே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுக் கொண்டிருந்தது அக்கட்சி. தற்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருப்பதால் தன்னை ஒரு முக்கியமான முனையாக முன்னிறுத்த விரும்பியது அக்கட்சி.

பட மூலாதாரம், KSR
அந்தத் தருணத்தில் காங்கிரசிலிருந்து விலகிய நடிகர் சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் கட்சி ஜானகி ராமச்சந்திரன் அணியுடன் கூட்டணி அமைத்தது. ஜெயலலிதா அணியைப் பொறுத்தவரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி, குடியரசுக் கட்சி (கோபர்கடே பிரிவு) ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது.
தி.மு.கவைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 20 இடங்களும் ஜனதா தளத்திற்கு 10 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு (லத்தீப் பிரிவு) 4 இடங்களும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. மீதியிருந்த 197 இடங்களில் தி.மு.க. போட்டியிட்டது.
அ.தி.மு.கவின் ஜானகி அணியில் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணிக்கு 49 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆண்டித்தேவர் ஃபார்வர்ட் பிளாக்கிற்கு 6 இடங்களும் விவசாயிகள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. ஜானகி அணி 175 இடங்களில் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு (சமது பிரிவு) 8 இடங்களும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு 4 இடங்களும் குடியரசுக் கட்சி (கவாய் பிரிவு), கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 208 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.
அ.தி.மு.க. ஜெயலலிதா அணியில் 13 இடங்களில் சி.பி.ஐ. போட்டியிட்டது. தமிழக ஜனதா கட்சிக்கு 21 இடங்களும் குடியரசுக் கட்சிக்கு (கோபர்கடே பிரிவு) 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. 196 இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது.
எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, அக்கட்சியின் மூத்த தலைவர் நெடுஞ்செழியனை முதல்வராக்க வேண்டுமென ஜெயலலிதா துவக்கத்தில் கோரினாலும், பிறகு தன்னையே முன்னிறுத்தத் துவங்கினார். இதனால், நெடுஞ்செழியன் அ.தி.மு.கவில் தனக்கென ஒரு அணியை அவர் அமைத்துக்கொண்டார். அந்த அணி 13 இடங்களில் போட்டியிட்டது. அதேபோல நெடுமாறன் நடத்திவந்த காமராஜ் காங்கிரஸ் 8 இடங்களில் போட்டியிட்டது. பாரதிய ஜனதா கட்சி 30க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டது. இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சி 30 இடங்களில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் காங்கிரசின் சார்பில் ஜி.கே. மூப்பனார் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவருக்காக ராஜீவ் காந்தி பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்தார். மு. கருணாநிதி சென்னை துறைமுகம் தொகுதியிலும் ஜானகி எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி தொகுதியிலும் ஜெயலலிதா போடி நாயக்கனூரிலும் சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியிலும் மூப்பனார் பாபநாசம் தொகுதியிலும் போட்டியிட்டனர்.

இத்தனை தேர்தல்களில் அ.தி.மு.கவுக்கு வெற்றிதேடித் தந்த இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்தலில் முடக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.கவின் ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் தங்களுக்குத்தான் அந்தச் சின்னம் வேண்டுமெனக் கோரியதால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது. அதனால், ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவும் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டன.
தேர்தல் நடப்பதற்கு முன்பாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி (திருச்சி) ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் நடக்கவில்லை. 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே தி.மு.க. பெரும் வெற்றிபெற்றிருந்தது. மொத்தமாக 151 தொகுதிகளை அக்கட்சி பெற்றிருந்தது (முஸ்லீம் லீக்கிற்கு 4, ஃபார்வர்ட் பிளாக்கிற்கு 1 இடம் உள்பட).20 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 15 இடங்களையும் 10 இடங்களில் போட்டியிட்ட ஜனதா தளம் நான்கு இடங்களையும் பெற்றது.
இதற்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதா அணி வெற்றிபெற்றிருந்தது. 196 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 27 இடங்களைப் பெற்றிருந்தது. தமிழக ஜனதா கட்சியும் சிபிஐயும் சேர்ந்து ஐந்து இடங்களைப் பெற்றன.
காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தோடு மூப்பனாரை முன்னிறுத்தி இறங்கிய காங்கிரஸ் கட்சி, 26 இடங்களைத்தான் பெற்றது. ஆனால், படுதோல்வியென்று பார்த்தால் அது ஜானகி அணிக்குத்தான். 175 இடங்களில் போட்டியிட்ட அந்தப் பிரிவு இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. சேரன் மாதேவியிலிருந்து பி.எச். பாண்டியனும் வேடசந்தூரில் போட்டியிட்ட பி. முத்துச்சாமியும் வெற்றிபெற்றிருந்தனர். சிவாஜி கணேசன், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோர்கூட தோல்வியடைந்திருந்தனர்.
1989 ஜனவரி 27ஆம் தேதி முதலமைச்சராக மு. கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார். நிதித் துறையைத் தன்வசமே வைத்துக்கொண்ட முதலமைச்சர், அன்பழகன், சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட 16 பேரை தன் அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார்.
பிற செய்திகள்:
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
- எடப்பாடி பழனிசாமியின் 3 ஃபார்முலாக்கள்! பாஜகவை மிரட்டும் உள்கட்சி மோதல்கள்
- "இலங்கை மலையக மக்களுக்கு ரூ. 1,000 சம்பளம் தராவிட்டால் நடவடிக்கை"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












