வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: "40 வருஷ உழைப்பு, தியாகம்" - கண்ணீர் விட்ட அன்புமணி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMI TWITTER
தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. சீர் மரபினருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடும் அளிக்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவலை தனது தந்தையும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் எஸ். ராமதாஸிடம் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சரமான அன்புமணி ராமதாஸ் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்.
"நாற்பது வருஷ உழைப்பு, எவ்வளவு தியாகம் - இப்போதுதான் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்," என்று தனது தந்தையுடன் அன்புமணி பேசினார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வன்னியர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும் அதனுடன் தொடர்புடைய வன்னியர் சங்க அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தன. சமீபத்தில் தேர்தல்கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனருடன் தமிழக அமைச்சர்கள், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தினர். இந்த நிலையில், இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்ட நடவடிக்கை, பாமகவுக்கு சாதகமான அரசியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
வன்னியர் இடஒதுக்கீடு குறித்த தகவல் வெளிவந்ததும், தனது குடும்பத்தாருடனும் கட்சியினருடனும் அன்புமணி ராமதாஸ் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதேவேளை, வன்னியர் இடதுக்கீடு தொடர்பான அரசின் சட்ட நடவடிக்கை, இடஒதுக்கீடு கோரி வரும் மற்ற ஜாதியினர் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற ஜாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். கூறப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சி. வளர்மதி இதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். பிறகு சட்ட முன் வடிவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்குப் பிறகு துணை முதலமைச்சரும் பேரவையின் முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். "இன்று அறிமுகம் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின் கீழ் வரும் நியமனங்கள் அல்லது பதவிகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி இட ஒதுக்கீடு செய்தல் சட்ட முன்வடிவு இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்று அந்தத் தீர்மானம் கூறியது.
இதையடுத்து அந்த சட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில், தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. இதில் மொத்தமாக 109 ஜாதியினர் இடம்பெற்றுள்ளனர். இதில் சீர் மரபினர் என்ற வகையில் 68 ஜாதியினர் இடம்பெற்றுள்ளனர்.
பிற செய்திகள்:
- பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
- மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்
- மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள்
- செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?
- தங்கம் விலை 35,000 ரூபாய்க்கு கீழ் சரிந்தது - அண்மைய நிலவரம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?
- "திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி
- ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












