ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE

பட மூலாதாரம், MAS
ஹரியாணாவின் குண்ட்லி தொழிற்பேட்டையில் தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை கோரி நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக உள்ள தொழிலாளர் நல உரிமைகள் செயல்பாட்டாளர் ஷிவ் குமாருக்கு ஏற்பட்டுள்ள சரமாரி எலும்பு முறவுகள், அவர் கடுமையான தாக்குதலுக்கு ஆளானதை உறுதிப்படுத்துகிறது.
மஸ்தூர் அதிகார் சங்கத்தின் தலைவர் ஷிவ் குமார் கடந்த மாதம் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரது உடலில் பல்வேறு மோசமான காயங்கள் இருப்பது மருத்துவ அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
Post - Traumatic Disorder என்கிற நிலையின் அறிகுறிகளோடு, கைகள் மற்றும் கால் பாதங்களில் எலும்பு முறிவுகள், நகங்கள் பிய்த்து எடுக்கப்பட்ட காயங்கள் வெளிப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
"பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கை, ஷிவ் குமாருக்கு மிகவும் மோசமான காயங்கள் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது" என அவரது வழக்குரைஞர் அர்ஷ்தீப் சீமா கூறினார். மேலும், ஹரியாணா காவல்துறை இதற்கு முன், ஷிவ் குமாரின் உடலில் காயங்கள் இல்லை எனக் கூறிய மருத்துவ அறிக்கையையும் கேட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு, 25 வயது இந்திய தொழிலாளர்கள் உரிமை செயல்பாட்டாளர் நவ்தீப் கவுரின் வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட்டது.
தனக்கு வழக்கமான ஜாமீன் கேட்டு நவ்தீப் கவுர் பஞ்சாப் & ஹரியாணா உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த விசாரணை பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட செயல்பாட்டாளர் ஷிவ் குமாரின் மருத்துவ அறிக்கை நகல் பிபிசிக்கு கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காயங்களை இங்கே விவரிக்கிறோம்.

பட மூலாதாரம், MAS
இடது கையில் ஓர் எலும்பு முறிவு, வலது கால் பாதத்தில் ஓர் எலும்பு முறிவு, கொஞ்சம் விந்தி விந்தி தான் நடக்கிறார். வலது கால் பாதத்தில் வீக்கம் இருக்கிறது. இடது கால் பாதத்தில் வீக்கத்தோடு தொட்டால் வலிக்கிறது. இடது குதிகாலின் நிறம் கருப்பாக இருக்கிறது. இடது கையில் பெருவிரலின் நகம் மற்றும் ஆள்காட்டி விரலின் நகம் கருநீள நிறத்தில் இருக்கின்றன. வலது கை மணிக்கட்டைத் தொட்டால் வலிக்கிறது. இடது தொடைப் பகுதியின் நிறம் கருமையாக இருக்கிறது.
இந்த காயங்கள் இரண்டு மாதங்களுக்கு மேலானவை. ஒரு மழுங்கிய ஆயுதம் அல்லது பொருளால் ஏற்பட்ட காயங்கள் இது எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சிவ குமார் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்குப் பிறகும் இந்த காயங்கள் அப்படி இருக்கின்றன என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்கிறார் அவரது வழக்குரைஞர். குற்றம் சுமத்தப்பட்ட சிவ குமாரை சண்டிகரில் உள்ள மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
என்ன வழக்கு?
ஷிவ் குமாருக்கு எதிராக குண்ட்லி காவல் நிலையத்தில், கலவரம் செய்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றங்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் 148,149, 323, 384, 506 என பல பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை 2020ஆம் ஆண்டு, டிசம்பர் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாகத் தான் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ஹரியாணாவில் இருக்கும் சோனிபத் சிறைக்கு விசாரணைக் கைதியாக அழைத்து வரப்பட்டார் என அச்சிறை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் கூறினர்.
கடந்த ஜனவரி 12-ம் தேதி ஷிவ் குமார் மீது கலவரம், கொலை முயற்சி என பல குற்றங்களைச் செய்ததாகக் கூறி மற்றொரு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே நாளில் மூன்றாவது வழக்கும் குண்ட்லி காவல் நிலையத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், MAS
கடந்த ஜனவரி 12ஆம் தேதி மதியம், மஜ்தூர் யூனியன் சோனிபத்தில் தர்னாவில் ஈடுபட்டிருந்த போது, காவலர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டதாக ஷிவ் குமார் மருத்துவர்களிடம் கூறினார்.
அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் தான் இல்லை எனத் தெளிவாகக் கூறுகிறார் ஷிவ் குமார். குண்ட்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து சிலரைக் கைது செய்தார்கள், அதோடு தன் நண்பர்கள் சிலரையும் தாக்கினார்கள் என சிவ குமார் கூறியதாக மருத்துவர் கூறினார்.
கடந்த ஜனவரி 16-ம் தேதி குண்ட்லிக்கு அருகில் விவசாயிகள் போராட்டத்தில் இருந்த போது, காவலர்கள் சிவ குமாரை அழைத்துச் சென்று தாக்கினார்கள் என காவல் துறை மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. காவலர்கள் சிவ குமாரின் இரு கால்களையும் கட்டி பாதத்தில் அடித்ததாகவும், மூன்று நாட்களுக்கு தூங்கவிடவில்லை எனவும் காவல் துறை மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
இந்த மருத்துவ அறிக்கையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் கொடுமைப்படுத்தப்பட்ட விவரங்கள் கிராஃபிக்ஸ் படங்களாக இருக்கின்றன.
சோனிபத்தை சேர்ந்த ஷிவ் குமார் குண்ட்லியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததைக் காரணம் காட்டி சட்ட விரோதமாக பணம் பறிக்க நுழைய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஷிவ் குமார், நவ்தீப் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞர்கள், டெல்லியின் எல்லைப் பகுதியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தோடு நெருக்கமாகச் செயல்படுவதால் தான் இருவரும் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள் எனக் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்... தவறினால் அடுத்து என்ன நடக்கும்?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












