தங்கம் விலை 35,000 ரூபாய்க்கு கீழ் சரிந்தது - அண்மைய நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
இன்று 26.02.2021, வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு விலை ரூ.328 குறைந்து, ரூ.34,976-க்கு விற்பனை செய்யப்பட்டது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.34,976-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,372 ஆக இருந்தது.
அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.75 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.75,000 ஆகவும் இருந்தது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருபுறம் சீன முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம்; மறுபுறம் செயலிகளுக்கு தடையா? - சிவசேனா
ஒருபுறம் சீன முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளத்தை விரித்துவிட்டு, மறுபுறம் சீனப் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் தடை விதிப்பதா என்று மத்திய அரசை சிவசேனா கட்சி சாடியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி பிரசூரமாகியுள்ளது
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், சீனாவுக்கான முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கப் பரிசீலித்து வருவது தொடர்பானது குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ''இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே எல்லையில் ஏற்பட்ட பதற்றம் கடந்த வாரம் தணிந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகரீதியான உறவில் ஏற்பட்ட பதற்றமும் தணிந்துவிட்டதாகவே பார்க்கிறோம். அதனால்தான், 45 சீன நிறுவனங்களுக்கு முதலீடு தொடர்பான அனுமதியை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் மோடி அரசு, சீன நிறுவனங்களுக்கு எதிராகக் கடினமான நிலைப்பாட்டை எடுத்தது, இப்போது தளர்த்தி வருகிறது. சூழலுக்கு ஏற்றாற்போல், மற்ற நாடுகளுடனான அரசியல் மற்றும் ராஜாங்கரீதியான உறவுகள் மாறிக்கொண்டே இருக்கலாம்.
ஆனால், சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தணிந்தவுடன், மத்திய அரசு சீன வர்த்தகத்துக்கு பச்சைக் கொடி காட்ட முயல்வது என்பது தற்செயலாக நிகழ்வதா?
கடந்த 8 மாதங்களாக எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின், கடந்த வாரம்தான் பதற்றமும் தணிந்துள்ளது. ஆனால், இந்தப் பதற்றம் தணிந்தவுடனே சீனாவுடன் வர்த்தகத்துக்கான அனுமதி குறித்து பரிசீலனையை மத்திய அரசு செய்து வருகிறது.
நம்பிக்கையில்லா, உண்மைத் தன்மை இல்லாத அண்டை நாடு சீனா. தனது வர்த்தகத்துக்காக எல்லைப் பிரச்சினையில் மெலிதான போக்கைக் கடைப்பிடித்து தனது நோக்கம் நிறைவேறியதும், மீண்டும் இந்தியாவுக்குத் தொந்தரவு கொடுக்கும் செயல்களில் சீனா ஈடுபடும்.
கடந்த ஆண்டு மத்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது. சீனாவுடன் மேற்கொண்ட பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன, இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீட்டுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆத்ம நிர்பார் பாரத் பிரச்சாரம் வலுப்பெற்று, தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டது.
சீனாவை எவ்வாறு தடுத்தோம் என மோடி அரசு பெருமை அடித்துக்கொண்டது. ஆனால், 8 மாதங்களாக என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு, 45 சீன நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப் போகிறார்களா?
மத்திய வர்த்தகம் தொழில்துறையின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவுடன் அதிகமான வர்த்தகம் செய்த நாடாக சீனாதான் முதலிடத்தில் இருந்திருக்கிறது.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களையடுத்து, தேசியவாதம் எனும் காற்று அடைக்கப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டு, சீனப் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, உள்நாட்டுப் பொருட்களுக்கு ஆதரவு கோரப்பட்டது வெளிப்பட்டுவிட்டது.
எல்லையிலிருந்து சீன ராணுவம் திரும்பிச் சென்றவுடன், இந்தியாவில் வர்த்தகம் செய்ய சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஆயத்தமாகிறது மத்திய அரசு. சீனா எப்போதுமே நம்பக்கத்தன்மை இல்லாத கூட்டாளி என்பதை மறந்துவிடக் கூடாது'' என
சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந்தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே தொடங்கியது. இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதேவேளையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதன் ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு மின்சார ரயில் நிலையங்கள் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் அனைத்து மின்சார ரெயில் நிலையங்களிலும் பயணிகள் மிகுதியாகவே காணப்பட்டனர். அதேபோல மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் காரணமாக நகரத்து சாலைகளில் ஷேர் ஆட்டோக்களும், கால் டாக்சிகளும் பாய்ந்து சென்றதை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் காத்திருக்கும் பயணிகளை கூவிக்கூவி ஏற்றி செல்வதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.
'நிறைய பேருந்துகள் ஓடாது. வாங்க ஷேர் ஆட்டோவில் போலாம்', என டிரைவர்கள் உரிமையோடு அழைப்பதையும் கேட்கமுடிந்தது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்றது எப்படி?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- "திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி
- ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












