"திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது பரவலாக ஊழலும் அராஜகமும் நிலவியது, ஆனால், அதிமுக கூட்டணி ஆட்சியில் கருணை மிக்க ஆட்சியை முன்னெடுக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து வியாழக்கிழமை காலையில் வந்த பிரதமர் நரேந்திர மோதி, புதுச்சேரியில் அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் கோயம்புததூர் சென்று அங்குள்ள கொடிசியா மைதானத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
"கோவை மக்கள் மத்தியில் பேசுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கோவையில் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், துறவிகள் என பலர் உருவாகியுள்ளனர். இங்குள்ள வழிபாட்டு தலங்கள் உலகப் புகழ் பெற்றவை. மின் உற்பத்தி மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு ஆகிய திட்டங்கள் இன்று தமிழக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது," என்று மோதி கூறினார்.
"தமிழக மக்கள் இந்த ஆண்டு புதிய அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர். மிகவும் இக்கட்டான சூழலில் இந்த தேர்தலை மக்கள் சந்திக்க உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்கள் அழுத்தமான ஒரு செய்தியை முன்வைத்து வருகின்றனர். அதாவது வளர்ச்சிக்கான ஆட்சியை மட்டுமே அவர்கள் விரும்புகின்றனர். இதற்கு சிறந்த முன்னுதாரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வரும் தமிழக அரசு, மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலனுக்காக பாஜகவும் அதிமுகவும் ஆட்சி நடத்தி வருகிறது," என்று மோதி குறிப்பிட்டார்.
திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் சிறு தொழில்முனைவோர் மற்றும் சிறு விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி உறுதுணையாக இருந்து வருகிறது. ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கோவிட் காலத்தில் அவசர கால கடன் உதவி அளித்து உதவியது. 14 ஆயிரம் கோடி மதிப்பில் 3.5 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் தமிழகத்தில் இதனால் பலன் அடைந்தனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரம் சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் பலன் அடைந்தனர் என்று மோதி தெரிவித்தார்.

'சாம்பியன்' எனும் பிரத்யேக இணையதளத்தின் மூலம் தொழில்முனைவோரின் குறைகள் பெறப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இதே அளவு முக்கியத்துவம் ஜவுளித்துறைக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களினால் கடந்த 7 ஆண்டுகளில் ஜவுளித்துறை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 7 புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்குள் இவை உருவாக்கப்படும். ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியையும் இந்த அரசு ஊக்குவித்து வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக குறு விவசாயிகளுக்கு கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொடுக்கும் நோக்கை முக்கிய பொறுப்பாக இந்த அரசு கொண்டுள்ளது. விவசாயிகளுக்கான கடன் உதவி, விவசாயிகளுக்கான அட்டை, மண் பரிசோதனை அட்டை, இனாம் இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவை சிறு விவசாயிகளுக்கு பலன் அளித்து வருகிறது.
எந்த விதத்திலும் விதத்திலும் சிறு மற்றும் குறு விவசாயிகள் தரகர்களால் பாதிக்கப்படுவதையும், மற்றவர்களை நம்பி இருப்பதையும் இந்த அரசு விரும்பவில்லை. கிசான் திட்டம் துவங்கப்பட்டு இந்த 2 ஆண்டுகளில் 11 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக கொப்பரையின் குறைந்தபட்ச விலை இருமடங்காக ஆக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி இலவச வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்கள் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன. உயிர்நீர் திட்டத்தின் கீழ் தமிழக கிராமங்களில் 14 லட்சம் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழக கலாச்சாரத்தை எண்ணி பெருமைப்படுகிறோம். உலகில் தொன்மையான மொழியாக தமிழ் விளங்குகிறது.
எனவே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்புகளை பிராந்திய மொழிகளில் மாணவர்கள் படிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாட்டில் இரண்டு விதமான அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்கட்சிகள் முன்னெடுப்பது ஊழல் அரசியல், நாங்கள் முன்னெடுப்பது கருணைமிக்க ஆட்சி. அதிகாரத்தை அடையும் நோக்கில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இரு கட்சிகளின் தலைவர்களும் எப்படியெல்லாம் ஊழல் செய்வது என யோசனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அராஜகங்கள் நடைபெற்றன. இதனால் தமிழகத்தில் உள்ள பெண்கள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டனர். அதிமுக தலைவர் ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஜெயலலிதாவை துன்புறுத்திய தலைவர்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முக்கிய பதவிகள் வழங்கின.
திமுக ஆட்சி காலத்தில் நீண்டகாலமாக மின் வெட்டு பிரச்னை இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி கருணையுடன் கூடிய ஆட்சியை நடத்தி வருகிறது. கோடிக்கணக்கான வங்கி கணக்குகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் பல்வேறு மருத்துவ காப்பீடு திட்டங்களால் பலன் அடைந்தது ஏழை எளிய மக்கள்தான்.
பிராந்தியக் கட்சி என்ற அடையாளத்தை திமுக இழந்துவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை திமுக இழந்துவிட்டது. திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல்கள் நிலவி வருகின்றன. அடுத்த தலைமுறை வாரிசுகளை தலைவர்களாக்க இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் முயற்சித்து வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஒரே குடும்பமாக செயல்பட்டு தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை தேசிய ஜனநாயக கூட்டணி தான் நிறைவேற்றியுள்ளது.
அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து தேசத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்வதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கமாகும்' என பிரதமர் பேசினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கொடிசியா வர்த்தக மையத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்... தவறினால் அடுத்து என்ன நடக்கும்?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












