தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? - வாக்காளர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? - தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 MODEL CODE OF CONDUCT FOR THE GUIDANCE OF POLITICAL PARTIES AND CANDIDATES

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உள்பட மேலும் நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கவுள்ளது. இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே சம்பந்தப்பட்ட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். இது பற்றி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த அளவுக்கு அறிந்து கொள்வது முக்கியமோ, அதை விட முக்கியம், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வாக்காளர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

இந்த விதிகள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்பதை இங்கே பட்டியலிடுகிறோம்.

தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம்.

பொது நடத்தை விதிகள்

1. சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்சனைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது.

2. பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது.

3. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.

4. சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.

5. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

6. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது.

7. ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும்.

8. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

9. ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும்.

10. ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது.

பொதுக்கூட்டங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

1. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். இது முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறைக்கு உதவும்.

2. பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.

3. அந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்.

4. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

5. பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 MODEL CODE OF CONDUCT

பட மூலாதாரம், Getty Images

பேரணிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

1. பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.

2. போதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. பேரணி கடந்து செல்லும் பாதையில் தடை ஏதும் அமலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.

4. பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு அல்லது தடை ஏதும் ஏற்படாமல் இருப்பதை பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.

5. மிக நீளமான பாதையில் பேரணி செல்லுமானால் பேரணி செல்லும் பாதை, பகுக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

6. காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் மட்டுமல்லாமல் இயன்றளவு பேரணி சாலையின் வலது பக்கமாகவே இருக்க வேண்டும்.

7. ஒரே பாதையில் அல்லது ஒரே சாலையின் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பேரணி நடத்த திட்டமிட்டால், பேரணி செல்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கில் அதை ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும்.

8. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பேரணி செல்லும் இருவேறு தரப்பினர் இடையே சுமூகமான முடிவு எடுப்பதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் இயன்ற அளவில் விரைவாக நாடலாம்.

9. விரும்பத்தகாத சக்திகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள பொருட்களை பேரணியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பேரணியிபோது கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

10. பேரணியின்போது பிற அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களை உருவகிக்கும் உருவ பொம்மைகளைக் கொண்டுசெல்வது அவற்றை எரிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: