தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு

பட மூலாதாரம், DOORDARSHAN
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இது தொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தலைமையில் தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) ஆலோசனை நடத்தினர். தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடமும் அரசியல் கட்சிகளிடமும் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் விவாதித்தனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ, நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம்:
தமிழ்நாடு (234) மற்றும் புதுச்சேரி (30)
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அறிவிக்கை மார்ச் 12, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 , வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22, வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும். காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும்.
அசாம்(126 தொகுதிகள்)
அசாமுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்படும். மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படுகிறது.
கேரளா(140 தொகுதிகள்)
கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள 140 தொகுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படுகிறது. மல்லாபுரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கும் இதே தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கம்(294 தொகுதிகள்)
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். ஐந்து மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27; 4 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1; 3 மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு, ஏப்ரல் 6; 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 10; 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 17; ஆறாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22; 5 மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26; 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக்கு எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியன்று நடத்தப்படும்.
அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கம், 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு, 140 தொகுதிகள் கொண்ட கேரளா, 126 தொகுதிகள் கொண்ட அசாம், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி என இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்குமான 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 18.68 கோடி வாக்காளர்கள் 2.7 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பார்கள்.
வாக்குப்பதிவு, அரசியல் கட்சிகள் கட்டுப்பாடுகள்
கோவிட் - 19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கையை கவனத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்தளத்திலேயே வாக்குப்பதிவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டும், மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிடும் வழிகாட்டுதல்களின்படியும் இந்த தேர்தல் நடத்தப்படும்.
தேர்தல் செலவின வரம்புத்தொகை, புதுச்சேரியில் தொகுதிக்கு 22 லட்சம் எனவும் மற்ற மாநில சட்டமன்றங்களில் தொகுதிக்கு ரூ. 38 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்படுகிறது. இதற்கான முடிவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி எடுப்பார்.
வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பவர்கள் ஐந்து பேருக்கு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மைதானங்களில் தேர்தல் பரப்புரைகளை நடத்தலாம் என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளூர் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிடுவார்கள்.
தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்கள் பார்க்க நேர்ந்தாலும் அது பற்றிய தகவலை சி-விஜில் எனப்படும் செயலி வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவு எப்போது?

பட மூலாதாரம், ECI
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் நிறைவு பெறவிருக்கிறது. இதில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியும் புதுச்சேரி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 8ஆம் தேதியும் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை கடந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் காணொளி காட்சி மற்றும் நேரடியாக ஆலோசனை நடத்தினர்.
அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் அவர்கள் கடந்த வாரம் கேட்டறிந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரிகள் இடமாற்றலுக்கு கட்டுப்பாடு
தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட தேர்தல் பணிகளை கவனிக்கும் அதிகாரிகள் அவரது வசிப்பிடம் அல்லது பூர்விக மாவட்டத்தில் நியமிக்கப்படக்கூடாது. அதே அதிகாரி கடந்த நான்கு ஆண்டுகளில் மே 31ஆம் தேதியன்றோ அதற்கு முன்னரோ, மூன்று ஆண்டுகள் பணி நிறைவை செய்யாதிருந்தால் அவரை இடமாற்றல் செய்யக்கூடாது.
ஒருவேளை கடந்த காலங்களில் குறிப்பிட்ட அதிகாரி, தேர்தல் பணி ஒழுங்கீனம் அல்லது அலட்சியமாக தேர்தல் பணியாற்றியதாக தேர்தல் ஆணையத்தால் அறியப்பட்டிருந்தாலோ அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலோ, அடுத்த ஆறு மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தாலோ அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
2017ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தலின்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள பதவியில் இருந்தவர்களை அங்கு தற்போதைய தேர்தலின்போது பணியமர்த்தாமல் இருக்க கவனம் செலுத்துமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி மட்டுமின்றி உதவி ஆட்சியர், சார் கோட்டாட்சியர், துணை ஆட்சியர், இணை ஆட்சியர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஆயுதப்படை கமாண்டன்ட்டகள், முதுநிலை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட தேர்தல் பணி தொடர்புடையவர்களுக்குப் பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
பிற செய்திகள்:
- பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
- மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்
- மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள்
- செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?
- தங்கம் விலை 35,000 ரூபாய்க்கு கீழ் சரிந்தது - அண்மைய நிலவரம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?
- "திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி
- ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












