இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?

அணி

பட மூலாதாரம், BCCI

    • எழுதியவர், எம். பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி, இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்திருக்கிறது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 112 ரன்களே எடுத்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகள் அள்ளினார். இந்திய அணிக்கும் ஆரம்பம் அதிர்ச்சிகரமாகவே அமைந்தது. சுப்மன் கில் 11 ரன்களில் வெளியேற, அணியின் தூண் புஜாரா டக் அவுட் ஆனார். ஒரு ஸ்பின்னரிடம் அவர் டக் அவுட் ஆகி வெளியேறுவது டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறை. இருந்தாலும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோலி (27 ரன்கள்) வெளியேறினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

பேட்டிங் செய்யவே மிகவும் கடினமாக இருந்த மைதானத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார் ரோஹித். மிகவும் மெதுவாக ஆடமால், அதிகமான ஷாட்கள் ஆடியதால் அவரால் ஒரு பெரிய ஸ்கோர் எடுக்க முடிந்தது. ஆனால், ரோஹித் வெளியேறியதும் இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட் பந்தைக் கையில் எடுக்க, வரிசையாக பெவிலியன் திரும்பினார்கள் இந்திய வீரர்கள். இறுதியில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்து (6.2 ஓவர்களில்) 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ரூட்.

கை கொடுத்த ஸ்பின்னர்கள்

இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார் இந்திய கேப்டன் கோலி. பும்ரா, இஷாந்த் ஆகியோர் பக்கம் செல்லவேயில்லை. அதன் பலனாக, இங்கிலாந்தை 81 ரன்களில் சுருட்டினார்கள் இந்திய ஸ்பின்னர்கள். முதல் இன்னிங்ஸில் தான் வீசிய முதல் பந்திலேயே பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் அக்‌ஷர் படேல். இரண்டாவது இன்னிங்ஸில், தான் வீசிய முதல் பந்தில் (இது இன்னிங்ஸின் முதல் பந்தும் கூட!) ஜேக் கிராலியை வெளியேற்றினார். பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார்கள். முதல் இன்னிங்ஸில் 6, இரண்டாவது இன்னிங்ஸில் 5 என மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அக்‌ஷர்.

அஷ்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இரண்டாவது இன்னிங்ஸில் ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், டெஸ்ட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளைப் பதிவு செய்தார் ரவிசந்திரன் அஷ்வின். கபில் தேவ், கும்பிளே, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டும் ஆறாவது இந்தியர் அஷ்வின். அதுமட்டுமல்லாமல், அதிவேகமாக இந்தச் சாதனையைச் செய்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடமும் பிடித்திருக்கிறார்.

இங்கிலாந்து வெறும் 48 ரன்கள் மட்டும் முன்னிலை பெற, 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வென்றது மென் இன் புளூ! அக்‌ஷர் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா.

இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?

ஒரு டெஸ்ட் போட்டி, அதுவும் இரண்டு முன்னணி அணிகள் ஆடும் போட்டி இரண்டு நாள்களிலேயே முடிந்திருக்கிறது எனும்போது நிச்சயம் விமர்சனங்கள் எழும். இந்தப் போட்டிக்கும் எழாமல் இல்லை. வழக்கம்போல் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஹமதாபாத் ஆடுகளத்தைக் குறைசொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விமர்சகர்கள் பலரும்கூட இந்த ஆடுகளம் மோசமாக இருக்கிறது என்று தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆடுகளம் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் சவாலாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், அது மட்டும்தான் இந்தப் போட்டி இரண்டு நாள்களுக்குள் முடிவதற்குக் காரணமா என்றால், நிச்சயம் இல்லை.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பிட்ச் ரிப்போர்ட் கொடுத்த இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் கிரீம் ஸ்வான், "இது நான்காவது நாளோ அல்லது ஐந்தாவது நாளா ஆடும்போது இருக்கும் ஆடுகளம் போல இருக்கிறது" என்றார். அதாவது பந்து அதிகமாக சுழல வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார். அது என்னமோ உண்மைதான். ஆனால், பந்தின் சுழலால் நேற்று ஒட்டுமொத்தமாக அத்தனை விக்கெட்டுகள் விழவில்லை. சுழலாமல் நேராகச் சென்ற பந்துகளில்தான் பெரும்பாலான விக்கெட்டுகள் வீழ்ந்தன!

"உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இரண்டு அணிகளின் பேட்டிங்குமே சிறப்பாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். எந்தவித கூடுதல் சிரத்தையும் எடுக்காததால் இரண்டு அணிகளும் சுருண்டுவிட்டன. நேற்று பந்துகள் ஓரளவு நன்றாகவே வந்தன. ஒருசில பந்துகள்தான் அதிகமாக சுழன்றன. இரண்டு அணிகளின் பேட்டிங்குமே சுமார்தான். 30 விக்கெட்டுகளில் 21 விக்கெட்டுகள் நேராக வந்த பந்துகளுக்கு அவுட்டானவை என்று நினைக்கும்போது வினோதமாக இருக்கிறது. சரியாக கவனம் செலுத்தாததோ அல்லது சுழலுக்கு ஆடி பந்தை தவறவிட்டதோ காரணமாக இருக்கலாம். பேட்ஸ்மேன்கள் கூடுதல் முயற்சி எடுத்து கவனமாக ஆடாததற்கு இந்தப் போட்டி ஒரு நல்ல உதாரணம்" - பரிசளிப்பு விழாவின்போது இந்திய கேப்டன் கோலி சொன்ன விஷயங்கள் இவை.

அணி

பட மூலாதாரம், BCCI

அவர் சொன்னதுபோல், இங்கு பேட்டிங்கின் தரத்தைப் பற்றியும் விவாதிக்கவேண்டியிருக்கிறது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார் ஜேக் கிராலி. அக்‌ஷர் படேல் வீசிய 25-வது ஓவரில் ஒவ்வொரு பந்திலுமே கொஞ்சம் தடுமாறினார். இறுதியில் அவுட்டும் ஆனார். ஆனால், அதற்கு முன்புவரை மிகவும் சிறப்பாகவே இந்திய பௌலர்களை எதிர்கொண்டார். அஷ்வின், அக்‌ஷர் இருவரையும் சிறப்பாகக் கையாண்டார். ஆனால், மற்ற இங்கிலாந்து வீரர்களால் அதுபோல் விளையாட முடியவில்லை. கோலி சொன்னதுபோல் கவனக்குறைவாலோ, ஸ்பின்னை எதிர்பார்த்தோ ஆட்டமிழந்தனர். ஆக, ஆடுகளத்துக்கு இணையாக இங்கு பேட்டிங்கையும் நாம் விமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அணித் தேர்வு. போட்டி இரண்டு நாள்கள் முன்பு பத்திரையாளர்களிடம் பேசிய ரோஹித் ஷர்மா, "இந்த ஆடுகளம் சென்னை ஆடுகளத்திலிருந்து அவ்வளவாக வேறுபட்டிருக்காது. ஸ்பின்னுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தார். இதற்கு முன்பு ஆடப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளும் அதையே உணர்த்தின. அதனால்தான், அஷ்வின், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் என 3 ஸ்பின்னர்களோடு களமிறங்கியது இந்தியா. இங்கிலாந்து இங்குதான் மிகப்பெரிய தவறைச் செய்தது.

என்ன செய்தது இங்கிலாந்து அணி?

அவர்களுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். அதனால், அவர்கள் என்ன செய்தார்கள், தங்களின் ஸ்டார் பௌலர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்கள். கடந்த சில ஆண்டுகளாக 'ரொடேஷன்' திட்டத்தைப் பின்பற்றி வருபவர்கள், ஒரு போட்டியில் ஆண்டர்சனை ஆடவைத்தால், அடுத்த போட்டியில் ஸ்டுவர்ட் பிராடை ஆடவைப்பார்கள். ஆனால், இந்தப் போட்டியில் இருவரையும் களமிறக்கியது இங்கிலாந்து. ஆண்டர்சன் - ஆர்ச்சர் - பிராட் எனத் தங்களின் வேகப்பந்துவீச்சு கூட்டணியை வைத்து இந்தியாவை மிரட்டி நினைத்த இங்கிலாந்து, ஆடுகளத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படதாகத் தெரியவில்லை.

கடந்த போட்டிய்ல் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய மொயீன் அலி, நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். டாம் பெஸ் தேர்வு செய்யப்படவில்லை. பென் ஸ்டோக்ஸ் என ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இருந்தும், கூடுதலாக 3 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்கினார்கள். "இந்த SG பிங்க் பந்துகளின் மேலே அரக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் ரிவர்ஸ் ஸ்விங் பெரிதாக இருக்காது" என்று போட்டிக்கு முன்பு கூறியிருந்தார் ஆண்டர்சன். இருந்தும் 4 வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களை தேர்வு செய்திருந்தார்கள். விளைவு ஜேக் லீச் எனும் ஒரேயொரு முழுநேர ஸ்பின்னர் மட்டுமே அவர்கள் அணியில் ஆடினார். ஆக, இந்த ஆடுகளத்தினுள் இறங்குவதற்கு முன்பாகவே பின்தங்கிவிட்டது இங்கிலாந்து.

பிங்க் SG பந்துகள் - என்ன சிக்கல்?

இங்கு நாம் விவாதிக்கவேண்டிய இன்னொரு முக்கிய அம்சம் பிங்க் SG பந்துகள். இந்தியாவில் இந்தப் பந்துகளே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய வீரர்களே இதை கடுமையாக விமர்ச்சித்துவருகிறார்கள். பல தருணங்களிலும் அதன் தரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் SG பிங்க் பந்தில் இப்போதுதான் இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டி நடக்கிறது. இரவு நேரம் ஆடுவதால், அதிக 'ஷைனிங்' இருக்கவேண்டும் என்பதற்காக பந்தின் மேல் அதிகம் அரக்கு பூசப்படுகிறது. அதனால், பந்து சீக்கிரம் பழசாகாது. ஆண்டர்சன் சொன்னதுபோல் ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது.

இது இன்னொரு வகையிலும் இந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. கூடுதல் அடுக்கால் (layer) பந்து ஆடுகளத்தில் பட்டதும் அதிக வேகம் பெற்றுவிடுகிறது. அதனால், அதைக் கணிப்பது பேட்ஸ்மேன்களுக்குக் கடினமாக அமைந்துவிடுகிறது. இந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தடுமாறியதற்கு இதைத்தான் காரணமாகக் கூறினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். இதுபோன்ற ஆடுகளத்தில், இதுபோன்ற ஒரு பந்து, சாதாரணமாகவே வேகமாகப் பந்துவீசும் அக்‌ஷர் படேல் போன்ற பௌலருக்கு எந்த வகையில் ஒத்துழைக்கும்… அதைத்தான் சரியாகப் பயன்படுத்தினார் அக்‌ஷர். சுழலை விட, சரியான லைன், லென்த்தில் பந்துவீசி நேராகச் சென்ற பந்துகளின் மூலமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேட்டை நடத்தினார்.

இந்த போட்டி நடந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இல்லை. உண்மையைச் சொன்னால், எல்லா ஆடுகளங்களும் அப்படி இருந்துவிடுவதில்லை. எல்லா ஆடுகளங்களையும் பேட்ஸ்மேன்களும் பௌலர்களும் இணையாக போட்டியிடுவதுபோல் அமைத்துவிடமுடியாது. அதுதான் நிதர்சனம். பேட்டிங் தரம், பந்தின் தரம் என்பதுபோன்ற விஷயங்களை மறந்துவிட்டோ, மறுத்துவிட்டோ ஆடுகளத்தை மட்டும் குறைசொல்ல முடியாது. இங்கிலாந்து தவறுகள் செய்திருக்கிறது. இந்திய பௌலர்கள் சூழ்நிலைகளைச் சரியகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு செஷன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறார்கள். ஆடுகளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இந்தியா இந்த வெற்றிக்குத் தகுதியான அணியே.

காணொளிக் குறிப்பு, தடைகளை தாண்டி இளம் வயதில் அர்ஜுனா விருது பெற்ற திவ்யா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: