குஜராத் மோட்டெரா ஸ்டேடியம் - இங்கு படைக்கப்பட்ட சாதனைகள் என்னென்ன?

பட மூலாதாரம், TWITTER/BCCI
- எழுதியவர், துஷார் திரிவேதி
- பதவி, பிபிசி குஜராத்திக்காக
1983ஆம் ஆண்டு பிப்ரவரியில், அப்போதைய இந்திய குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங், ஆமதாபாதில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் மோட்டெரா கிராமத்தில் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கான விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டி 9 மாதங்கள் கழித்து 1983 நவம்பர் மாதத்தில் அங்கு முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் நடந்தது.
ஒன்பது மாத காலத்தில் விளையாட்டு அரங்கம் தயாராகிவிடும் என்று 38 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அங்கு உருவாக்கப்பட்ட சாதனைகளில் முதலாவது சாதனையாக அது இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த விளையாட்டு அரங்கமாக அது அமைந்துள்ளது.
காலப்போக்கில் அங்கு நினைவில் கொள்ளத்தக்க பல சாதனைகள் நிகழ்த்தப்படும் என 1983ல் யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது 2021 ஆம் ஆண்டிலும், அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்ற பிரமாண்டமான நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இங்குதான் நடைபெற்றது.
மிக அதிக அளவிலான பார்வையாளர்கள், இந்த விளையாட்டு அரங்கில் அமர முடியும்.
அதாவது, மோட்டெராவில் உள்ள சர்தார் படேல் குஜராத் விளையாட்டு அரங்கில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமர முடியும்.
அந்த வகையில் மெல்போர்ன் நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவமான விளையாட்டு அரங்கில் அமரக் கூடியவர்களை விட அதிகமானவர்கள் இங்கு அமர்ந்து போட்டியைக் காண முடியும்.
இப்போது, இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட நினைவில் கொள்ளத்தக்க சில சாதனைகள் பற்றி நாம் பார்ப்போம்.
கவாஸ்கர் இந்த விளையாட்டு அரங்கில் தான் தனது 10 ஆயிரமாவது ரன் எடுத்தார்.

பட மூலாதாரம், Tom Shaw/ALLSPORT via Getty Images
1983-ல் இந்த மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜெப் பாய்காட் வைத்திருந்தார். 8,114 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
1983 நவம்பரில் மோட்டெராவில் சுனில் கவாஸ்கர் 90 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் பாய்காட் சாதனையை கவாஸ்கர் முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த மைதானம் கவாஸ்கருக்கு ராசியானதாக அமைந்திருந்தது. 1987-ல் பாகிஸ்தான் அணி அங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, தன் கிரிக்கெட் வாழ்வில் 10 ஆயிரமாவது ரன்னை கவாஸ்கர் எட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதலாவது பேட்ஸ்மேன் என்ற பெருமை இந்த மைதானத்தில் தான் கவாஸ்கருக்கு கிடைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் சாய்த்த சாதனை
அதிகபட்ச ரன்களைக் குவிக்க உதவிய மைதானம் என்பதுடன், அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியதில் சாதனை படைத்த மைதானமாகவும் இது உள்ளது.
1994 பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஹசன் திலகரத்னே விக்கெட்டை கபில் தேவ் சாய்த்தார். அவருக்கு அது 432வது விக்கெட். அந்த காலக்கட்டத்தில் அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்களை சாய்த்தவர் என்ற பெருமை நியூஸ்லாந்து வீரர் ரிச்சர்ட் ஹெட்லிக்கு இருந்தது. அவர் 431 விக்கெட்களை சாய்த்திருந்தார். அந்த வகையில், அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்களை சாய்த்தவர் என கபில்தேவின் பெயர் எழுதப்பட்டது. அது மோட்டெரா மைதானத்தில் நடந்தது.
சச்சின் டெண்டுல்கரின் நினைவில் நிற்கும் சதம்

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுக்கல் நூறு சதங்கள் அடித்தார். அநேகமாக உலகில் அவர் சதமடிக்காத கிரிக்கெட் மைதானமே கிடையாது என்று சொல்லலாம். ஆனால் அவருடைய நினைவில் நிற்கும் சதம் மோட்டெரா மைதானத்தில் தான் கிடைத்தது.
1999-ல் மோட்டெராவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதன்முறையாக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். அப்போது அவர் 217 ரன்கள் எடுத்தார்.
அசாருதீனின் தனித்துவமான சாதனை

பட மூலாதாரம், JOHN MACDOUGALL/AFP via Getty Images
அசாருதீன் இந்தியாவுக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஒரு வித்தியாசமான சாதனையை இந்த மைதானத்தில் தான் அவர் நிகழ்த்தினார். இதுவரை ஒரு சிலர் மட்டுமே அதுபோல செய்துள்ளனர்.
இந்த மைதானத்தில் 1996-ல் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. எல்லா மைதானங்களிலும், எல்லா நாடுகளுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டியில் விளையாடியவர் என்ற பெருமை அசாருதீனுக்கு அப்போது கிடைத்தது.
அந்த சமயத்தில் 9 நாடுகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தன. அனைத்து 8 நாடுகளின் அணிகளுக்கு எதிராகவும், இந்தியா மற்றும் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடிய வீரர் என்ற பெருமையை அசாருதீன் பெற்றார்.
அந்த பெருமையைப் பெற்ற முதலாவது கிரிக்கெட் வீரராக அவர் இருந்தார். அந்தப் பெருமை மோட்டெராவில் தான் கிடைத்தது. இது ஒரு வித்தியாசமான உலக சாதனையாக உள்ளது.
1987ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானின் சலீம் மாலிக் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் சிவ்லால் யாதவ் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் சிவ்லால் யாதவுக்கு அது 100வது விக்கெட்டாக இருந்தது.
முதல்முறையாக மதிய உணவு இடைவேளைக்கு முன்பே ஆட்டம் இழந்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
2008 ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. அப்போது முதலாவது நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 76 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி ஆட்டம் இழந்தது அதுவே முதல் முறை. அது மோட்டெரா மைதானத்தில் நிகழ்ந்தது.
2009 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் எடுத்த ராகுல் திராவிட், கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற பெருமையை இந்த மைதானத்தில் பெற்றார்.
2010 நவம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 15 ரன்கள் இடைவெளியில் இந்தியா 5 விக்கெட்களை இழந்தது. அப்போது களமிறங்கிய ஹர்பஜன் சிங் சதமடித்தார்.
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் எடுத்த முதலாவது சதம் அது. அடுத்த டெஸ்ட்டிலும் அவர் சதமடித்தார்.
2012-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய சத்தீஸ்வர் புஜாரா முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார். இந்த மைதானத்தில் அவர் 206 ரன்கள் எடுத்தார்.
1996 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டம் இந்த மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:















