தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அ.தி.மு.கவுக்கு உரிமை கோரும் சசிகலா - எதிர்பார்ப்பை எகிறவைக்கும் மார்ச் 15

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது' என 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு எதிரான வழக்கை நான்காண்டுகளுக்குப் பிறகு துரிதப்படுத்தியுள்ளார் சசிகலா. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. என்ன காரணம்?
சசிகலா, தினகரன் நீக்கம்
அண்ணா தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இதன்பின்னர், அ.தி.மு.க பொதுக்குழு கூடி, புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. `இது ஒரு தற்காலிக ஏற்பாடு' எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தோடு முதலமைச்சர் பதவியை நோக்கி சசிகலா முன்னேறினார். இதற்காக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தையும் கொடுத்தார்.
சசிகலா கொடுத்த ஆதரவுக் கடிதத்தைப் பரிசீலிக்காமல் ஆளுநர் காலம்கடத்திய நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. இதனை எதிர்பாராத சசிகலா, டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துவிட்டு சென்றார். இதற்கு அடுத்து வந்த நாள்களில் தினகரனோடு மோதத் தொடங்கினர் கொங்கு மண்டல அமைச்சர்கள். இந்தக் கூட்டணியில் ஓ.பி.எஸ்ஸும் இணைந்து கொள்ளவே, பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டே நீக்கினர்.

பட மூலாதாரம், Getty Images
திருத்தப்பட்ட விதிகள்
இதன்பின்னர், 2019 நவம்பர் மாதம் கூடிய செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அங்கீகாரம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், `ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள், கட்சியில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்' எனவும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, 2017 ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழுவை எதிர்த்து மீண்டும் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை நகர சிவில் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னதாக, சசிகலா தனது மனுவில், ` அ.தி.மு.க பொதுச் செயலாளராக தான் உள்ள நிலையில், கட்சி விரோத செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், `பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் வைத்துள்ள கோரிக்கையில், `தற்போதைய அரசியல் சூழலில் இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தால் அரசியல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும்போது பல்வேறு திருப்பங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினகரன் கையில் அதிகாரம்
`இந்த வழக்கை சசிகலா துரிதப்படுத்துவது ஏன்?' என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகள் அனைத்தும் சொசைட்டி விதிகளின்படியே உருவாக்கப்பட்டன. இங்கு பொதுச் செயலாளர் பதவி என்பது அதிகாரம் மிகுந்ததாக இருந்ததால், அந்தப் பதவியை எதிரிகள் யாரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக சில விதிகளை மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். அதன்படி, அ.தி.மு.க உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதேநேரம், பொதுச் செயலாளர் இல்லாவிட்டால் இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்கலாம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக அம்மா இருந்திருக்கிறார். பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகு, பொதுக்குழுவை கூட்டுவது, உறுப்பினர் சேர்க்கை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அவர் மேற்கொள்வார். 2016 ஆம் ஆண்டு அம்மா மறைவுக்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக சின்னம்மா தேர்வு செய்யப்பட்டார். அவர் சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டதால் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு இருந்தது" என்கிறார்.
யார் இந்த மகாலிங்கம்?
தொடர்ந்து அவர் பேசுகையில், `` பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு ஓ.பி.எஸ்ஸுக்கும் இ.பி.எஸ்ஸுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் பொதுச் செயலாளர் கையொப்பம் இருக்க வேண்டும். இவர்கள் அனுப்பிய பொதுக்குழு அழைப்பிதழில் தலைமைக் கழகத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் பெயரில் வந்திருந்தது. அவர் ஓர் அலுவலக உதவியாளர். அவ்வளவுதான். இதுவே விதிகளுக்கு முரணானது. மேலும், அன்றைய சூழலில், அ.இ.அ.தி.மு.க அம்மா, அ.இஅ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் இரண்டு கட்சிகளாக இருந்தன. இதன்பேரிலும் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இதில், ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்ட காரணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேரை கட்சியில் இருந்தே சின்னம்மா நீக்கிவிட்டார். அவர்கள் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்றால் பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும். அதனைப் பரிசீலித்தால் மட்டுமே மீண்டும் அவர்கள் கட்சிக்குள் இணைய முடியும்" என்றார்.
சசிகலாவை ஆதரித்த எடப்பாடி

பட மூலாதாரம், EDAPPADI FB
``பொதுக்குழு கூடித்தானே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்தது?" என்றோம்.
`` அவ்வாறு செய்வதற்கும் விதிகளில் இடமில்லை. இந்தப் பொதுக்குழுக் கூட்டமே செல்லாது. அதேநேரம், இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அப்போது வழக்கு நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின்போது, `பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவு அளிக்கிறோம்' என 1,15,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் அபிடவிட்டுகளைக் கொடுத்தோம். தலைமை நிலையச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் அபிடவிட் தயார் செய்யப்பட்டது. அவர் தனது சார்பாக, சின்னம்மா தேர்வு செய்யப்பட்டதை ஆதரித்து அபிடவிட் கொடுத்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பிலும் 15,000 பேர் அபிடவிட் கொடுத்தனர். அன்றைக்கு எங்கள் அணியில்தான் அதிக நிர்வாகிகள் இருந்தனர். ஆனால், கட்சியில் இருந்த நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சென்று சேர்ந்தது" என்றார்.
ஓ.பி.எஸ் அமைச்சராக நீடிக்கலாமா?

பட மூலாதாரம், OPS FB
மேலும், `` பொதுச் செயலாளர் உயிரோடு இருக்கும்போது அவர் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது. இது கூட்டுறவு பதிவுச் சட்ட விதிகளுக்கு எதிரானது. இதனை அடிப்படையாக வைத்து சின்னம்மா வழக்கு தொடர்ந்துள்ளார். `அ.தி.மு.க-வுக்கு நான்தான் அத்தாரிட்டி' என உரிமை கோருகிறார். சொல்லப் போனால் இன்றைக்கு அமைச்சராக ஓ.பி.எஸ் நீடிப்பதே செல்லாது. `இந்த அரசு அமையக் கூடாது' என வாக்களித்தவர் அவர். அதன் காரணமாக, அவரைக் கட்சியில் இருந்தே சின்னம்மா நீக்கினார். அதேபோல், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அமைச்சராக அங்கம் வகிப்பதே தவறானது. அதிகார மையங்களை வளைத்ததால்தான் இவர்கள் பதவிகளில் ஒட்டிக் கொண்டுள்ளனர். நீதிமன்றத்தில் இருந்து நல்ல உத்தரவு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
`அ.தி.மு.க-வுக்கு சசிகலா உரிமை கோர முடியுமா?' என முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
`` சசிகலா பொதுச் செயலாளர் கிடையாது. அவர் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது. அதேபோல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவும் செல்லாது. அது சட்டவிரோதமானது. புதிய பதவிகளுக்காக பொதுக்குழு தீர்மானம் மூலமாக விதிகளைத் திருத்தியதும் செல்லாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இருக்கும்போதே, பொதுச் செயலாளர் குறித்து முடிவெடுப்பதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. பொதுச் செயலாளர் பதவியை அழிப்பதற்கும் அதிகாரம் கிடையாது. கட்சியில் தேர்தல் நடத்தி தொண்டர்கள் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே, இவர்கள் கூட்டிய எந்தப் பொதுக்குழுவும் செல்லாது" என்கிறார்.
`நான் பேசக் கூடாது' என உத்தரவு
இதையடுத்து, இரட்டை இலைக்காக தேர்தல் ஆணையத்தில் வாதாடிய அ.தி.மு.க எம்.பியும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருமான நவநீத கிருஷ்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. நான் பேசக் கூடாது எனத் தலைமையில் இருந்து கூறிவிட்டனர். இதுதொடர்பாக விளக்கம் கொடுப்பதற்கு எந்த உரிமையும் எனக்குக் கொடுக்கப்படவில்லை. தலைமை என்ன சொல்கிறதோ, அதனை நான் செய்கிறேன். டெல்லி விவகாரங்களைப் பார்க்குமாறு கூறியுள்ளனர். அதனை மட்டுமே பார்த்து வருகிறேன்" என்றபடி ஒதுங்கிக் கொண்டார்.
இதையடுத்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். `` சசிகலா சிறையில் இருந்த காலகட்டத்தில், முன்னாள் நீதியரசர் சண்முகம் நடத்திய விசாரணைக் கமிஷனில் அவரது வழக்கறிஞர் தொடர்ந்து ஆஜராகி வந்தார். அப்படியிருக்கும்போது, சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவர் ஏன் துரிதப்படுத்தவில்லை? சொல்லப் போனால், இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டிய அவசியமும் இல்லை. விசாரணைக் கமிஷனில் அடிக்கடி ஆஜரான சசிகலா தரப்பினர், 4 வருடங்களாக இந்த வழக்கில் ஏன் ஆர்வம் காட்டவில்லை?" எனக் கேள்வியெழுப்புகிறார்.
சசிகலா கோரிய 13 அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசுகையில், `` சிவில் நீதிமன்ற வழக்கில் சசிகலா 13 அம்சங்களைக் கோரினார். அதில் அவருக்கு சாதகமாக எந்த உத்தரவும் வரவில்லை. எங்கள் கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம், `எந்த ஆவணங்களையும் திருத்தக் கூடாது, அழிக்கக் கூடாது' என்றுதான் நீதிமன்றம் தெரிவித்தது. யாராவது வந்தால் காண்பிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த வழக்கில் எந்தவித பலன்களையும் நீதிமன்றம் வழங்கவில்லை" என்றார்.
``ஓ.பி.எஸ் அமைச்சராக இருப்பதே செல்லாது என்கிறார்களே?" என்றோம். `` நானும் அப்போது அங்குதான் இருந்தேன். `பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர்' எனக் கூறி ஒரு லாரி அளவு ஆவணங்களை சசிகலா தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். இந்த விவகாரத்தில், பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்ததில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், யாரெல்லாம் தேர்வு செய்தார்களோ, அவர்களே திரும்பவும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், அதே பொதுக்குழுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. பெரும்பான்மை எனச் சொல்லக் கூடிய எந்த விஷயங்களும் தற்போது சசிகலா பக்கம் இல்லை. இந்த வழக்கை பெயரளவில் நடத்த உள்ளனர். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது" என்கிறார்.
``இரண்டு பொதுக்குழுவும் செல்லாது என்கிறாரே கே.சி.பழனிசாமி" என்றோம். `` அ.தி.மு.க தொண்டர்கள் எல்லாம் ஒன்றுகூடி வாக்குப் போட்டு எப்போது பொதுச் செயலாளரை தேர்வு செய்துள்ளனர்? எம்.ஜி.ஆரும், அம்மாவும் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளார்களா? இதைப் பற்றி கே.சி.பழனிசாமி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்றார்.
`மார்ச் 15 அன்று சிவில் நீதிமன்றத்தில் எந்தமாதிரியான உத்தரவு வரும்?' என பதைபதைப்புடன் காத்திருக்கிறது சசிகலா தரப்பு. `வழக்கம்போல எதுவும் நடக்காது' என முதல்வர் தரப்பு உறுதியாக உள்ளது. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், `இரட்டை இலைக்குச் சிக்கல் வருமா.. கட்சியில் குழப்பம் ஏற்படுமா?' எனவும் கவலையோடு கவனித்து வருகின்றனர் அ.தி.மு.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள்.

பிற செய்திகள்:
- தமிழ்நாட்டின் பயணத்தை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தலில் நடந்தது என்ன?
- புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி வருமா? அடுத்தடுத்த திருப்பங்கள்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













