234 தொகுதிகளிலும் வெல்ல முடியுமென்றாலும் கூட்டணியை விரும்புவது ஏன்?: பிரேமலதா விளக்கம்

தமிழக, இந்திய மற்றும் உலகளவிலான செய்தி தொகுப்புகளை மக்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பிரேமலதா

பட மூலாதாரம், HTTP://DMDKPARTY.COM/

தேர்தலுக்கு மிகக் குறைவான காலமே இருப்பதால் தி.மு.கவும் அ.தி.மு.கவும் உடனடியாக கூட்டணிப் பேச்சு வார்த்தைகளைத் துவங்க வேண்டுமென்றும் கூட்டணி தர்மத்தைப் பாதுகாக்கவே கூட்டணியை விரும்புவதாகவும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

தே.மு.தி.கவின் கொடி அறிமுக நாளை ஒட்டி இன்று காலையில் அக்கட்சியின் கொடியை தனது இல்லத்தில் பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் ஏற்றினார். அதற்குப் பிறகு, கட்சி அலுவகத்திற்கு தனது பிரசார வாகனத்தில் பிரேமலதாவுடன் புறப்பட்ட விஜயகாந்த், செல்லும் வழியில் வாகனத்தில் இருந்தபடியே கட்சிக் கொடியை ஏற்றினார். பிறகு கட்சி அலுவலகத்திலும் வாகனத்தில் இருந்தபடியே விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார்.

இதற்குப் பிறகு கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதா, கூட்டணி குறித்து இனிமேல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.கவிடம்தான் கேட்க வேண்டுமென்று தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பொதுக்குழு, செயற்குழு கூடி நல்ல செய்தி அறிவிக்குமென்றும் கூறினார்.

தே.மு.தி.கவின் சார்பில் இதுவரை தொலைக்காட்சி விவாதங்களுக்கு யாரும் அனுப்பப்படாத நிலையில், இனிமேல் ஆட்களைத் தேர்வுசெய்து அனுப்பப்போவதாகவும் அவர் கூறினார். தே.மு.தி.கவிற்கு 234 தொகுதியிலுமே வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வெல்லமுடியுமென்றால் தனித்தே நிற்கலாமே என செய்தியாளர்கள் கேட்டபோது, "கேப்டன் கூட்டணி தர்மத்தை மதிப்பவர்" என பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேகமாக நடப்பதாகத் தெரியவில்லையே எனக் கேட்டபோது, "எந்தக் கட்சியிலும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடக்கவில்லை. தி.மு.கவில் தொடங்கிவிட்டதா? எந்தக் கட்சியிலும் துவங்கவில்லை. பா.ம.கவைப் பொறுத்தவரை, இட ஒதுக்கீடு தொடர்பாக சந்திக்கிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் முழுவதும் விஜயகாந்த் வரப்போவதாகவும் அவர் ஆணையிட்டால் வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் பிரேமலதா கூறினார். தங்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் துவங்க வேண்டுமென கோருவது ஏன் எனக் கேட்டபோது, "தேர்தலுக்கு இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. ஆகவே தி.மு.கவும் அதிகமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டுமெனச் சொல்கிறேன். எங்களைக் கூப்பிடுங்கள் என யாரையும் சொல்லவில்லை" என்றார் பிரேமலதா.

தே.மு.தி.கவைப் பொறுத்தவரை மக்களுக்கான போராட்டங்கள் எதையும் நடத்துவதில்லை; தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுப்படுகிறதே எனக் கேட்டபோது, "கொரானாவால் யாரும் போராட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என அரசு சொன்னவுடன் அதை மதிக்க வேண்டும் என்பதால் போராட்டங்களை நடத்தவில்லை. தொடர்ந்து அறிக்கைகளைத் தருகிறோம்," என்ற பிரேமலதா விஜயகாந்த், அத்துடன் செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 4 இடங்களில் போட்டியிட்டு நான்கிலும் தோல்வியடைந்தது. 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் முதன்மைக் கட்சியாக இருந்த தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதமும் 2.41ஆக சரிந்தது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்பும் பிரேமலதா விரைவில் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளைத் துவங்க வேண்டுமெனக் கோரிவருகிறார்.

விழுப்புரம் மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்; தமிழக அரசின் மீது குற்றச்சாட்டு

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

விழுப்புரம் மாவட்டம் காணை குப்பத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மூன்றாம் கட்ட மக்கள் குறை கேட்பு பயணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மேற்கொண்டார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று உரையாற்றினார் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கிறது என்றும் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழ்நாடு சிக்கித் தவிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவித்தார்.

"இந்த தொகுதிக்கு பயணம் மேற்கொண்டாலும், தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இல்லை என்பதையே உணர முடிகின்றது. ஆட்சி இருந்திருந்தால், மக்களின் அன்றாட பிரச்னைகளை தமிழக அரசு தீர்த்து வைத்திருக்கும். ஆனால் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை எடப்பாடி அரசு நிறைவேற்றவதில்லை.

குறிப்பாக, குறைந்த பட்ச வேளாண் திட்டத்தை கொண்டுவந்து, அதற்காக விவசாயிகள் செல்போன் மூலமாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தார். இதனால் ஸ்டாலினுக்கு வேலையில்லை என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமிக்கு ஏன் இந்த எண்ணம் தோன்றவில்லை?" என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "இந்த ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும், ஸ்டாலினால் குறைகளை கூற முடியாது என்கிறார் பழனிசாமி. இவரது ஆட்சியின் குறைகளை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே கண்டுபிடித்து விடலாம் என்றார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: