தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: சசிகலா வருகையை ஸ்டாலின் ரசித்து வரவேற்பது ஏன்? பொதுக்குழுவில் கமல் ஆவேசம்

கமல்ஹாசன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை மிகத்தெளிவாக தனது கட்சியினருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, சசிகலா வருகை, தி.மு.க, அ.தி.மு.க, ம.நீ.மவின் நோக்கம் எனப் பல விஷயங்களை பொதுக்குழுவில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு ம.நீ.ம தொடங்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு உள்பட அனைத்தையும் முடிவெடுக்கும் அதிகாரத்தை கமலுக்கு அளித்தும் தமிழக முதல்வராக அவரை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், `ஜெயலலிதா மரணம், கொடநாடு கொலைகள் ஆகியவற்றில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவது' என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

``பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேசியது என்ன?" என ம.நீ.ம கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` கூட்டணி வேண்டாம் என்பதில் 90 சதவிகிதம் பேர் உறுதியாக உள்ளனர். கடந்த சில தேர்தல்களில் அதிகப்படியாக செலவு செய்த ஒரு சில நிர்வாகிகள் மட்டும், கூட்டணி குறித்து வலியுறுத்தியுள்ளனர். அதுவும் பொதுக்குழுவுக்கு முன்பாக இவையெல்லாம் பேசப்பட்டன. இதற்கெல்லாம் பதில் அளிக்கும்விதமாக இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார் கமல். மதியம் 1.15 மணியளவில் பேசத் தொடங்கியவர், 2.30 மணி வரையில் பேசினார். அவரது பேச்சில் தி.மு.க மீதான விமர்சனங்களே அதிகம் இருந்தன" என்றவர், கமல் பேசியதை நம்மிடம் பகிர்ந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கமல் பேச்சு

கமல்ஹாசன்

பட மூலாதாரம், KAMALHASSAN TWITTER

`` தி.மு.க தொடங்கப்பட்ட காலத்தில் மாணவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதன்பிறகு வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். மாணவர் அணி என்பதையே அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற ஒரே ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்தார்கள். அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் மட்டும் இல்லையென்றால், தி.மு.க என்ற கட்சியே இருந்திருக்காது. அன்றைக்குப் பயன்படுத்தப்பட்ட மாணவர்கள், இன்று எங்கே போனார்கள். அன்று மாணவர்களாக இருந்து எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்ற பலர், இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கின்றனர். இப்போது அவர்களின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் பதவிக்கு வரவில்லை.

எனவே, மாணவர்களை எந்தளவுக்கு நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். நமது கட்சியில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பா.ஜ.கவை மதவாதக் கட்சி என்கிறார்கள். வாஜ்பேயி அமைச்சரவையில் பதவியேற்கும்போது `பி டீம்', `சி டீம்' என்பதெல்லாம் தெரியவில்லையா? என்னை `பி டீம்' என விமர்சிக்கிறவர்களுக்கு இது தெரியாமல் போனது ஏன்? அன்று ஒன்றரை ஆண்டுகாலம் மருத்துவமனையில் இருந்தபோதும் முரசொலி மாறன் அமைச்சராகத்தான் இறந்தார். யாருடைய அமைச்சரவையில் மாறன் இருந்தார்? அப்போது தி.மு.கவுக்கு பா.ஜ.க என்பது ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் உள்ள மதவாதக் கட்சி என்பது தெரியவில்லையா? அப்போது அவர்களுக்கு இனித்தது" எனக் கடுமையாகச் சாடியவர், தொடர்ந்து பேசினார்.

`` மதவாதம் எனக் கூறிக் கொண்டு, `என் மனைவி கோயிலுக்குப் போவார். நாள், நட்சத்திரம் பார்ப்பார்' எனக் கூறிவிட்டு நேராக பெரியார் சமாதிக்குப் போகிறார்கள். இவர்களைப் பார்த்து அங்கு பெரியாரே புரண்டு படுத்துக் கொள்வார். `நல்லாட்சி கொடுப்போம்' என சமாதியில் போய் சத்தியம் செய்கிறார்கள். அந்த இடம் என்ன நேர்மையான இடமா? பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லையென்றால், அவர்களோடு கூட்டணி சேரவும் தி.மு.க தயங்காது. 38 இடங்களை ஜெயித்த பிறகு இவர்கள் என்ன சாதித்தார்கள்? மத்திய அரசிடம் போட்டி போட்டுக் கொண்டு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். எதுவுமே செய்யாமல் இந்த 38 சீட்டுகளும் பயனற்றுப் போய்விட்டன. அன்றைய காலகட்டத்தில் ராஜாஜி பதவியில் இருந்தபோது எதிர்க்கட்சி வரிசையில் அண்ணா இருந்தார். `வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என அண்ணா விமர்சனம் செய்தபோது, நேருவிடம் சென்று சண்டை போட்டு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை காமராஜர் அள்ளிக் கொண்டு வந்தார்.

அன்று எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளை எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அன்று சரிசமமான காம்பினேஷன்கள் இருந்தன. இதன்பிறகு கலைஞர் - எம்.ஜி.ஆர் என்ற காம்பினேஷன் இருந்தது. இன்றைக்கு அப்படியிருக்கிறதா? ஸ்டாலின் பேசுவதில் எதாவது ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா? 38 எம்.பிக்களை வைத்துக் கொண்டு ஸ்டாலினால் எதையுமே சாதிக்க முடியவில்லை. மத்திய அரசிடம் மோதல் போக்கைக் கடைபிடித்துக் கொண்டு வளர்ச்சித் திட்டங்கள் எதையுமே கொண்டு வராத எதிர்க்கட்சிகள், தேவையில்லாதவைதான்" எனக் கொதித்தார்.

`` தொடக்க காலத்தில் தி.மு.க நல்ல விஷயங்களை செய்தது. 67-ல் ஆட்சிக்கு வந்து பிறகு 72-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு வாரிசு அரசியலை கொண்டு வந்துவிட்டார்கள். திராவிடம் என்பது மன்னார்குடிக்கும் திருவாரூருக்கும் மட்டுமே சொந்தமானது என்பது போல ஆகிவிட்டது. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது சசிகலா வருகையை ரசித்து ருசித்து ஸ்டாலின் வரவேற்கிறார், எதற்காக? இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஊழல் பெருச்சாளிகள்தான். இவர்கள் இருவரையும் எதிர்த்துப் போராடினால்தான் உண்மையான ஆட்சி மலரும்.

காங்கிரஸ் ஒருகாலத்தில் அதிகப்படியான இடங்களில் போட்டியிட்டது. பிறகு மூன்றில் ஒரு பங்கு இடத்தில் போட்டியிட்டார்கள். இப்போது அதற்கும் கீழே போய்விட்டார்கள். ஆட்சியில் இருந்த அந்தக் கட்சி, கூட்டணிக்குள் சேர்ந்து அழிந்து போய்விட்டது. திராவிடக் கட்சிகள் எல்லாம் ஊழலில் ஊறித் திளைத்துவிட்டார்கள். நல்ல கட்சிகளும் அவர்களோடு சேர்ந்து சாக்கடையாகிவிட்டார்கள். சாக்கடைக்குள் சந்தனம் கலந்தால் என்னவாகும்?" எனக் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து, கூட்டணி குறித்து விளக்கமளித்த கமல், `` எங்களைப் பொறுத்தவரையில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேறு வேறல்ல. இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள்தான். எனவே, இதைத் தாண்டி ஓர் அணி வரும். அது நல்லவர்கள் அணி. இவர்களின் கூட்டணியில் இருந்து விலகி வந்து திருந்த நினைப்பவர்கள் வாருங்கள். அவர்களை ஏற்றுக் கொள்வோம். அவர்களையும் மாற்றுவோம். மாற்றம்.. மாற்றம் என்று சொல்லிக் கொண்டு கொள்ளையடிப்பதற்கு மாற்றத்தைக் கொடுக்கக்கூடாது. மாற்றிவிடுவோம் என அவர்கள் வாயால் சொல்வார்கள். ஏனென்றால் அவர்களின் இரண்டு கைகளும் பிஸியாக இருக்கும். அங்கு ஆள்கள்தான் மாறுவார்கள். செயல்பாடுகள் அப்படியேதான் இருக்கும். இந்த இரண்டு கட்சிகளுமே ஒழிக்கப்பட வேண்டியவை. இவர்கள் திருந்த மாட்டார்கள். அவர்கள் திருந்துகிற காலமும் போய்விட்டது. ஊழலுக்குச் சிறை சென்றவர்களை வரவேற்று மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என ஆவேசப்பட்டவர்,

இறுதியாக, `` இன்றைய கூட்டத்துக்கு என் பிள்ளைகளும் வருவதாகச் சொன்னார்கள். `வாரிசு அரசியல் கூடாது' எனக் கூறியதால், அவர்கள் வரவில்லை. அவர்கள் வரும்போது வரட்டும். நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அரசியலுக்கு 10 வருடங்களுக்கு முன்பே நான் வந்திருக்க வேண்டும். இந்தக் கூடாரத்தில் நேர்மையானவர்களுக்கு மட்டுமே இடமுண்டு" என்றவர், கதவு பக்கம் கையைக் காட்டி, `` நான் பேசி முடிக்கும் வரையில் இந்தக் கதவு திறந்துதான் இருக்கும். என்னுடன் பயணிக்க விரும்பாதவர்கள் தாராளமாக வெளியில் செல்லலாம்" என்றார் உறுதியான குரலில்.

கமல் பேசி முடிக்கும் வரையில் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் வெளியில் செல்லவில்லை.

அதே நேரம், கமல்ஹாசனின் இந்தப் பேச்சு, அவரது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமன்றி, மாற்றத்தை விரும்பும் மற்ற கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் ஒரு தெளிவான சமிக்ஞையாகவே அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: