பேரறிவாளன் விடுதலை: குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர்

பட மூலாதாரம், Twitter
(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளனை விடுவிப்பது குறித்து இந்திய குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது. வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், தமிழக ஆளுநரின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தை தமிழக ஆளுநர் முழுமையாக ஆராய்ந்ததாகவும் இது குறித்து இந்தியக் குடியரசுத் தலைவரே தகுந்த முடிவெடுக்க முடியுமென்று கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மீண்டும் இந்த விவகாரத்தை வலியுறுத்தினார்.
இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரே முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு விரைவில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
எவ்வளவு காலத்துக்குதான் முதலமைச்சர்களுக்கு நினைவில்லங்களை அமைப்பீர்கள்?: கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முதலமைச்சர்களுக்கு நினைவில்லங்களை அமைப்பீர்கள், எல்லா முதல்வர்களின் இல்லங்களையும் நினைவில்லங்களாக மாற்ற முடியுமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்கிப் பராமரிக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் இல்லங்கள் நினைவில்லங்களாகப் பராமரிக்கப்படுவதாகவும் இது புதிதல்ல என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி முதல்வர்களின் இல்லங்களை நினைவில்லங்களாக மாற்றுவீர்கள்? எல்லா முதலமைச்சர்களின் இல்லங்களையும் நினைவில்லங்களாக மாற்ற முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினர். இப்படியே சென்றால் அமைச்சர்களின் இல்லங்களும் நினைவில்லங்களாகுமா என்றும் கேட்டனர்.
நீதித் துறைக்கு பல நீதிபதிகள் பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். அவர்களது நினைவாக சிலை வைத்தால், நீதிமன்றத்தில் இடமிருக்குமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அரசுத் தரப்பை பதில் மனு தாக்கல் செய்யும்படி கூறிய உயர்நீதிமன்றம், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: இந்தியாவிற்கு ஆதரவாக விராட், சச்சின் ட்விட்டரில் பதிவு – டிரண்டாகும் ஹாஷ்டேக்
- தேர்தல் 2021: `கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் `பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- நாளை இலங்கை சுதந்திர தினம் - தமிழில் தேசிய கீதத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












