"ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்"

பட மூலாதாரம், Getty Images
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்பட விரும்பினால் மக்கள் மன்றத்திலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து செயல்படலாம் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு, அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகிய நான்கு பேர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் இதுபோல அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் கட்சி துவங்கி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்ட நிலையில், நிர்வாகிகள் பிற கட்சிகளில் சேர விரும்பினால், அதனை அனுமதிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும்படி கோரிவந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

பட மூலாதாரம், DMK
ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் பிற அமைப்புகளில் இருக்கக்கூடாது என்பது அந்த அமைப்பின் விதிகளில் இருப்பதால், அமைப்பின் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு பிற கட்சிகளில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றும் அந்த அமைப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது, ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும்படி தனது மக்கள் மன்றத்தினரிடம் ரஜினி கூறுவார் என சில அரசியல் கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












